வியாழன், 9 ஜூலை, 2015

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

மோடியின் செல்ஃபி ஆசனம்பொதுவாக யோகிகள் எனப்படுவோர் ஊனுடலை வெறுத்தவர்கள் என்றே கூறப்படுகின்றனர். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் யோகாவோ, இதற்கு நேரெதிரான பொருளில், மூட்டு வலி, முதுகு வலி போன்ற ஊனுடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான மருந்தில்லா வைத்தியமாகவும், உடல் பருமனைக் குறைத்து அழகைப் பேணும் கலையாகவும் பயன்பட்டு வருகிறது.
பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச 
யோகா தினம்.
“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!
வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!

விவகாரம் இத்துடன் முடியவில்லை. பிரதமர் பதவியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்குக் கிடைத்த குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறார் மோடி. ஜூன் 21 அன்று டில்லியில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் யோகாசனம் செய்தார்களாம்; 84 நாடுகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்களாம்; இப்படி இரண்டு கின்னஸ் சாதனைகள் யோகா தினத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவாம். உலகிலேயே “பெரிய மீசை”, “பெரிய நகம்” வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது இச்சாதனைகளுக்காக சோந்த முறையில் ‘முயற்சி’ செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியோ பயில்வான் படத்தின்மீது தனது மூஞ்சியை வரைந்து கொண்ட 23-ஆம் புலிகேசியைப் போல, அரசு எந்திரத்தை ஏவி வரலாறு படைத்திருக்கிறார்.
இத்தகைய கேலிக்கூத்துகள் ஒரு புறமிருக்க, யோகாவின் வரலாறு என்ற பெயரில் பல வரலாற்றுப் புரட்டுகளை சங்க பரிவாரத்தினர் பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மதத்தினர் மீது யோகாவைத் திணிக்கும்போது, “யோகா என்பது மதச்சார்பற்றது, உடல், மன ஆரோக்கியத்துக்கானது” என்று கூறுகின்றனர். அதே நேரத்தில், மத்திய அரசின் “ஆயுஷ்” இணையதளம், யோகா சிவபெருமானிடமிருந்து தோன்றியதென்றும், பதஞ்சலி போன்ற முனிவர்களின் பாரம்பரியத்தினூடாக வளர்ந்ததென்றும் வேறொரு ‘வரலாற்றை’ கூறுகிறது.
“சூரிய நமஸ்காரம் தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது” என்று முஸ்லிம்கள் கூறியவுடன், “சூரிய நமஸ்காரத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் கடலில் குதிக்கட்டும்” என்று நஞ்சைக் கக்குகிறார் ‘யோகி’ ஆதித்யநாத். தினமணியோ, “இந்தியாவின் தேசியப் பண்பாட்டுப் பெருமையை இந்து மத நம்பிக்கையாக மாற்ற முற்படுவதாக” யோகா தினத்தை விமரிசிப்பவர்களைச் சாடுகிறது. யோகா தினத்தை விமரிசிப்பவன் தேச விரோதி என்று கைது செய்யப்பட வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறையாக யோகாசனப் பயிற்சிகள் இன்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், மரபு, தேசியம் என்ற பெயரில் இந்துத்துவக் கண்ணோட்டத்தைப் பரப்புவதற்கு ஷாகாவைக் காட்டிலும் யோகா பயனுள்ளதாக இருக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எனவே, யோகா குறித்த வரலாற்றுப் புரட்டுகளை அடையாளம் காண்பது அவசியமாகிறது.
இன்று புழக்கத்திலிருக்கும் யோகாசனங்களுக்கும், வேதம், உபநிடதம், கீதை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ‘யோகா’ என்ற சொல்லுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. “ரிக் வேதத்தில் வண்டியுடன் குதிரையைப் பிணைப்பது – கட்டுப்படுத்துவது” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட யோகா என்ற சொல்,  உபநிடதங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோகா என்ற தத்துவ மரபோ, வேத மரபுக்கு எதிரான சார்வாகம், உலகாயதம், சுபாவவாதம் போன்ற பொருள்முதல்வாத தத்துவப் போக்குகள் சார்ந்ததாக இருந்திருக்கிறது.
கீதையில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று கூறப்படுபவை பார்ப்பனியத்தின் முக்திக் கோட்பாட்டின் அடிப்படையிலான “வழிமுறைகள்” என்ற பொருளைத் தருகின்றன. யோகாவின் மூலநூலாகக் கூறிக்கொள்ளப்படும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் (கி.பி 3-ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது) காற்றில் பறப்பது, தண்ணீரின் மீது நடப்பது – என்பன போன்ற வித்தைகளாக யோகா என்பது விளக்கப்படுகிறது.
பொதுவாக யோகிகள் எனப்படுவோர் ஊனுடலை வெறுத்தவர்கள் என்றே கூறப்படுகின்றனர். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் யோகாவோ, இதற்கு நேரெதிரான பொருளில், மூட்டு வலி, முதுகு வலி போன்ற ஊனுடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான மருந்தில்லா வைத்தியமாகவும், உடல் பருமனைக் குறைத்து அழகைப் பேணும் கலையாகவும் பயன்பட்டு வருகிறது.
மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய். ஐரோப்பிய உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் மரபுகளுடன் இந்தியாவில் நிலவிய உடலைப் பேணுகின்ற பாரம்பரிய முறைகளை இணைத்து 20-ஆம் நூற்றாண்டில் மைசூரில் கிருஷ்ணமாச்சாரி என்பவரால்தான் இது உருவாக்கப்பட்டது என்பதை சிங்கிள்டன் என்ற ஆய்வாளரின் நூல் (Yoga Body : The Origins of Modern Posture Practice, Mark Singleton, Oxford University Press) வரலாற்று பூர்வமாக விளக்குகிறது.
இதேபோன்று இந்தியாவில் பல்வேறு மக்கட்பிரிவினரிடமும் புழக்கத்திலிருக்கும் உடற்பயிற்சி மரபுகளைத் தேடித் திரட்டி, நவீன அறிவியலின் துணையுடன் அவற்றைத் தொகுத்து ஒருங்கிணைந்த வடிவில் சிறந்தவொரு உடற்பயிற்சி முறையை உருவாக்கியிருக்க முடியும். அப்படி உருவாக விடாமல் யோகாசனத்துடன் உபநிடதம், பிரம்மம், வெங்காயம் என்று கலர் கலராக மசாலா சேர்த்து, ராம்தேவ் முதல் ஜக்கி வரையிலான சாமியார்கள் வணிகம் நடத்துகின்றனர். சுதர்சனக் கிரியா என்றொரு மூச்சுப் பயிற்சி தன்னால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறி, அதற்கு அமெரிக்காவில் காப்புரிமையும் வாங்கியிருக்கிறார் ரவி சங்கர்ஜி.
தத்தம் சந்தைப் பிரிவினர்க்கு (market segment) ஏற்ப, “ஆத்தும சரீர சுகமளிக்கும்” யோகா பேக்கேஜ்களை, இந்தச் சாமியார்கள் மார்க்கெட்டிங் செய்கின்றனர். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பாரம்பரியமாக இந்த வேலையைச் செய்து வந்த பாதிரிகள் செல்வாக்கிழந்து விட்டதாலும், மதச்சார்பற்ற தூய தத்துவஞானத்தைப் போலத் தங்கள் சரக்கை கடைவிரிப்பதில் கைதேர்ந்தவர்களாக இந்த சாமியார்கள் இருப்பதாலும், அமெரிக்காவில் மட்டும் பல ஆயிரம் கோடி டாலர் புரளும் தொழிலாக வளர்ந்திருக்கிறது யோகா.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த சாமியார்களை வரவழைத்து தமது செலவில்  ஊழியர்களுக்கு யோகா வகுப்பு நடத்துகின்றனர். கடுமையான சுரண்டல், வரம்பில்லாத வேலை நேரம், மேலாளர்களின் வசவுகள், வேலை உத்திரவாதமின்மை-என்பன போன்ற கொந்தளிப்பைத் தோற்றுவிக்கின்ற பணிச்சூழலிலும், மனப்பதற்றத்துக்கோ கோபத்துக்கோ ஆட்படாமல் வேலை செய்வதற்கேற்ப, தங்களது ஊழியர்களின் உடலையும் மனதையும் படியவைக்கும் ஆன்மீக அயன்பாக்ஸ்களாக இந்தச் சாமியார்களின் யோகா வகுப்புகள் பயன்படுகின்றன.

இன்று சங்க பரிவாரத்தினாலும் சாமியார் கும்பலாலும் சந்தைப்படுத்தப்படும் யோகாவின் அரசியல் நோக்கம் இந்துத்துவம் என்றால், அதன் பண்பாட்டு நோக்கம், முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு இணங்கி வாழ்வதற்கு மக்களின் மனதைப் பதப்படுத்தும் பார்ப்பனியம்.
______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக