வியாழன், 9 ஜூலை, 2015

தேர்தல் : 1000 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் ஜெ. வெளியிடுவாரு?

"ஹலோ தலைவரே... …முதல்வரான பிறகு எம்.எல்.ஏ.வாகி சாதனை படைச்ச ஜெ., சனிக் கிழமையன்னைக்கு அதற்கான பதவிப்பிரமாணம் செஞ்சிக்கிட்டதும் கொடநாடு போவாருன்னு எதிர்பார்க்கப்பட்டது.'"அது நடக்காததால பலவித யூகங்களோடு பரபரப்பாயிடிச்சே.சனிக்கிழமை எம்.எல்.ஏ.வா ஜெ. பதவியேற்கிறதுக்காக காலை 10.40க்கு கார்டனிலிருந்து கிளம்பினார். முன்பெல்லாம் ஸ்பீடா போகுற அவரோட கான்வாய் இப்ப 40 கி.மீ. ஸ்பீடுக் குள்ளேதான் கோட்டைக்குப் போனது. அங்கே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. ஜெ.வை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சி.எம். செல் தனி அதிகாரி இன்னசன்ட் திவ்யா எல்லாரும் பொக்கே கொடுத்து வரவேற்றாங்க. யார்கிட்டேயும் பேசாம சபாநாயகர் அறைக்குப் போனாரு ஜெ.  அவர் பதவியேற்றப்ப மந்திரிகள் கைதட்டினாங்க. ஆனா இந்த நிகழ்ச்சியை கவரேஜ் பண்ண மீடியா, ஃபோட்டோகிராபர்ஸ் யாரையும் உள்ளே அனுமதிக்கலை. அரசாங்கம் கொடுத்த ஃபோட் டோக்கள்தான் மீடியாக்களில் வெளியானது.''



""அதானி குழுமத்தோடு சூரியஒளி மின்சக்தி தயாரிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதே அதற்கான ஃபோட்டோக்களும் இப்படித்தான் வெளியானதா?''

""ஆமாங்க தலைவரே.. .. ஏற்கனவே ரத்தான இந்த நிகழ்வு, சனிக்கிழமையன்னைக்கு நடக்கும்ங் கிறதை போன முறையே நாம பேசியிருந்தோம். அதானி குழுமத் தலைவர் உள்பட அதன் நிர்வாகிகள்   கோட்டையில் காத்திருந்தாங்க. அந்த அறைக்கு 11.23க்கு ஜெ. வந்தாரு. மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், எரிசக்திதுறை செயலாளர் ராஜேஷ்லக்கானி, ஈ.பி. சேர்மன்  சாய்குமார் இவங்களோடு வழக்கம்போல தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், முதல்வரின் செயலாளர்கள் எல்லோரும் இருந்தாங்க. எல்லோரையும் ராஜேஷ் லக்கானி வரவேற் றாரு. திட்டத்தைப் பற்றி சாய்குமார் பேசினாரு. அதற்கப்புறம் ஒப்பந்தம் கையெழுத்தாக, ஜெ. மூலமா அது பரிமாறிக் கொள்ளப்பட்டது. போன முறையே ஜெ.வின் உடல்நிலையால்தான் புரோகிராம் கேன்சல்னு நத்தம் விசுவநாதன் சொல்லியிருந்ததால், இந்த முறை ஒப்பந்தம் நல்லபடியா கையெழுத்தாகி முடிந்ததும் ஜெ.கிட்டே நன்றி சொன்னதோடு உடல்நிலையையும் விசாரிச்சாரு அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி. ஓ.கேன்னு சொல்லிட்டு கார்டனுக்கு கிளம்பிட்டாரு ஜெ.''  

""கவர்னர் மாளிகைக்குப் போய் ரோசய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு, கொட நாட்டுக்கு ஸ்பெஷல் ஃப்ளைட்டில் புறப்படு வாருன்னுதானே எதிர்பார்ப்பு இருந்தது?''

""இரண்டு புரோகிராமும் கேன்சல்னு காலை 10 மணிக்கே அதிகாரிகளுக்குத் தகவல் போயிடிச்சி. கவர்னர் ரோசய்யாவுக்கு கடிதம் மூலம் வாழ்த்து சொல்லிட்டாரு ஜெ. போனிலும் தொடர்பு கொண்டு பேசிட்டாராம். ஏன் இந்த புரோகிராம் மாற்றம்னு கார்டன் வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. .. முக்கியமான தகவல்கள் கிடைச்சுது. வெள்ளிக்கிழமையன்னைக்கு கார்டனுக்கு ஒரு முக்கிய தகவல் வந்திருக்குது. அதாவது, அவரோட அரசியல் எதிர்காலம் சம்பந்தமான மேட்டரில் சாதகமானதை செஞ்சவரோட சொந்தக்காரங்க கிட்டேயிருந்து வந்த தகவலாம். அதிலே, பெங்களூருவுக்கும் சென்னைக்கும் போக்குவரத்து சரியா இல்லை. உங்க தரப்பிலிருந்து கொடுத்த உத்தரவாதப்படி யாரும் போக்குவரத்தை சரியா கையாளலை. அதனால இங்கே எல்லோரும் அப்செட்டுங்கிறதுதான் அந்தத் தகவல். அது வந்ததும்  ஜெ.வும் அப்செட்டாம். அவரை இன்னும் டென்ஷனாக்குற மாதிரி சுப்ரீம் கோர்ட் வக்கீல்களிடமிருந்து சனிக்கிழமை காலையில் ஒரு கெட்ட சேதி வந்திருக்குது.''

""என்ன சேதியாம்?''

""அப்பீல் மனுவை தன்னோட பெஞ்ச்சிலேயே விசாரிக்கிறது சம்பந்தமா தலைமை நீதிபதி தத்து உறுதியா எதுவும் சொல்லலைங்கிறதுதான் அந்த கெட்ட சேதி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிகிட்டே நீதிபதிகள் கொலீஜியத்துக்கானத் தலைவர் தாக்கூர் உள்பட முக்கிய நீதிபதிகள் ஒரு முக்கியமான விஷ யத்தை வலியுறுத்துவதாகவும், அது என்னன்னா, அப்பீல் மனுக்களை எந்த பெஞ்ச் விசாரிக்கும்னு முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருக்குதுன்னாலும், ஜெ.வுக்கு எதிரான அப்பீல் மனுவை அவரோட பெஞ்ச்சிலேயே விசாரிக்கக்கூடாது. அதை நீங்க கண்காணிக்கணும்னு ஜனாதிபதிகிட்டே வலியுறுத்தியிருக் காங்களாம். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலரும் தன்னோட செயல்பாடுகளை கண்காணிக்கிறதால, இதை விசாரிக்க தத்து தயக்கம் காட்டு றாருன்னு ஜெ.வோட சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் டீம் சொன்னதும் அவர் ரொம்ப அப்செட்டாயிட்டாராம். இந்த 2 காரணங்களும்தான் அவரோட கொடநாடு பயணத்தை கேன்சல் செய்ய வச்சிருக்குது. அதோடு, ஸ்பெஷல் ஃப்ளைட்டிலும் கோளாறாம்?''

""அதிலே என்ன பிராப்ளம்?''

""இன்ஜின் பிராப்ளம் போல.. 2 மணி நேரம் தாமதமா புறப்படும்னு சொல்லியிருக்காங்க. எதையும் நேரம் காலம் பார்த்து செய்ற ஜெ.வுக்கு இது சகுனத் தடையா தெரிஞ்சிருக்குது. அதனால டென்ஷனோடு டென்ஷனா புரோகிராமை கேன்சல் பண்ணிட்டாரு. ஜெ.வோட பயணத்துக்கான ஸ்பெஷல் விமானத்தை அரேஞ்ச் பண்ணுவது ஏர்லைன்ஸ், பெட்ரோலியம், மின்உற்பத்தின்னு கொடி கட்டிப் பறக்குற எஸ்ஸார் நிறுவனம்தான். செப்டம்பரில் பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு ஜெ. போனப்ப தனிவிமானம் கொடுத்தது எஸ்ஸார் குரூப் ஓனர் சசி ரூயாதான். எஸ்ஸார் குரூப்போட நிறுவனத்திலே சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள்  இருப்பதா மேல்மட்டத்திலேயே பேச்சு அடிபடுதுங்க தலைவரே.''…

""ஜெ.வோட ஹெல்த் கண்டிஷன் பற்றியும் பேச்சு அடிபடுதே?''

""இஃப்தார் விருந்தில் அவர் சார்பா கலந்துக்கிட்ட ஓ.பி.எஸ் சொன்னதால அதையொட்டி பேசப்படுது. நாமும் ஏற்கனவே பேசியிருக்கோம். கார்டனி லேயே முறையான ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறாராம். சென்னை முகப்பேரில் இருக்கிற ஆஸ்பிட்டலிலிருந்து ஸ்பெஷலிஸ்ட்டான டாக்டர் கார்டனுக்கு வந்து சிகிச்சை கொடுத்துட்டுப் போயிருக்கிறாரு. இந்த சூழ்நிலையிலும் சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீலில் ஜெ. கவனமா இருக்காரு. சனி, ஞாயிறு இரண்டு நாளும் சீனியர் வக்கீல் கே.கே.வேணு கோபால்கிட்டே 2 முறை இது சம்பந்தமா டிஸ்கஸ் பண்ணியிருக்காரு. திங்கட்கிழமையன்னைக்கு தி.மு.க. சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரமணியசாமியும் விரைவில் ஒரு பெட்டிஷன் போடப்போறாராம். இதெல்லாம் கார்டனை மேலும் டென்ஷனாக்கி யிருக்குது.''

""அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஜெ. முதல்வராயிட்டாரு, எம்.எல்.ஏவுமாயிட்டாரு. சட்டமன்ற கூட்டத் தொடர் எப்ப கூடப் போகுதாம்?''

""விரைவில் அறிவிப்பு வரலாம்னும் அதில் பல அதிரடித் திட்டங்களை அறிவிக்கப் போறாருன்னும் கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. சோத்துல உப்பு போட்டவங்களை மறக்கக்கூடாதுன்னு தமிழ்நாட்டில் சென்ட்டிமெண்ட் இருப்பதால இலவச அரிசியோடு இனிமே இலவசமா      அம்மா உப்பு தரும் அறிவிப்பை ஜெ. வெளி       யிடப் போறா ராம். அதுபோல, கேரளாவில்     நடந்த இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஜெயிச்சதுக்கு காரணம் மதுவிலக்கு கொள்கை தான்னு  சொல்றதால, உம்மன்சாண்டி அரசோடு தமிழக அரசு அதிகாரிகள் பேசி டீடெய்ல் வாங்கி யிருக்காங்களாம். அத னடிப்படையில் தமிழ் நாட்டில் முதல்கட்டமா 1000 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பையும் சட்டமன்றத்தில் ஜெ. வெளியிடுவாருன்னு கோட்டையிலே உள்ள வங்க சொல்றாங்க. கார்ட னில் உள்ளவங்களோ வேற மாதிரி சொல்றாங்க?''

""அங்கே என்ன சொல்றாங்க?''

""ஜெ.கிட்டே அப்படி ஒரு ஐடியாவே இல்லைன்னு சொல்றதோடு, மாநில அரசோட கடன் சுமை 2 லட்சம் கோடிக்கு மேலே இருப்ப தால, தேர்தல் வரைக்கும் இலவச திட்டங்களை நிறைவேற்றணும்னா டாஸ்மாக் வியாபாரம்தான் கைகொடுக்கும்னு நினைக்கிறாருன்னும் சொல்றாங்க. நைட்டு 10 மணி வரைக்கும் திறந்திருக்கும் கடை களை 11 மணி வரை திறந்தா கூடுதலா எவ்வளவு வருமானம் வரும்னு கேட்டிருக்காராம் ஜெ.''  

""ம்.. தி.மு.க சைடில் என்ன நடக்குதாம்?''

""ஜூன் 3ந் தேதி பிறந்தநாள் பொதுக்கூட்டத் தில் கலந்துக்கிட்ட பிறகு வேறெந்த பப்ளிக் மீட்டிங் கிலும் கலைஞர் கலந்துக்கலை. உடம்பு சரியில்லாம லும் மனசு டல்லாகவும் அவர் இருப்பதைப் பற்றி ஏற்கனவே நாம பேசியிருக்கோம். வெளியூர் மாவட்ட செயலாளர்கள் கோபாலபுரத்துக்கு வந்து கலைஞரை சந்திப்பதும் குறைஞ்சி போயிடிச்சி. இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட, இது தி.மு.க அரசோட திட்டம்ங்கிறதால அதன் வெற்றி விழாவைக் கொண்டாடுற விதத்தில் ஆலந்தூரில் ஜூலை 7ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தச் சொல்லிட்டாரு கலைஞர்.'' 

""தேர்தல் பணிகள், வியூகங்களெல்லாம் தி.மு.க சைடில் எப்படி இருக்குதாம்?''

""பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.கவோடு கூட்டணி இல்லைன்னு சொன்னதுபற்றி மு.க.ஸ்டாலின்கிட்டே நிருபர்கள் கேட்டப்ப, கருத்து எதுவும் சொல்ல விரும்பலைன்னு சொல்லியிருந்தாரு. பா.ம.கவில் எம்.எல்.ஏ சீட் வாங்கி நிற்கணும்னு நினைக்கிற கட்சிக்காரங்களெல்லாம் தி.மு.க தரப்பு கிட்டே, தேர்தல் நேரத்தில் தி.மு.க கூட்டணிக்குத்தான் வருவோம்னு சொல்றாங்களாம். தி.மு.க கூட்டணியில் பெர்த் கன்ஃபார்ம்னு சொல்லப்படுற வைகோவை இந்த நேரத்தில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், எம்.பி. டி.கே.ரங்கராஜனும் சந்திச்சிப் பேசுனது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தைக் கிளறியிருக்குது. மத்திய- மாநில அரசுகளுக்கு எதிரா கூட்டு இயக்கமா போராட்டங்களை நடத்த ணும்னு இடதுசாரிகள் முயற்சி பண்ணு றாங்க. ஏற்கனவே விஜயகாந்த், திருமா வளவன்னு வெவ்வேறு கட்டங்களில் சந்திச்சிப் பேசுனவங்க இப்ப வைகோ வையும் சந்திச்சிருக்காங்க. அ.தி.மு.க.வும் தி.மு.கவும் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கணும்ங்கிற ப்ளான் இடதுசாரி கள்கிட்டே இருக்குது. வைகோவோ போராட்டங்களில் ஒன்றா நிற்போம்னு மட்டும் ஜி.ரா.கிட்டேயும், டி.கே.ஆர். கிட்டேயும் சொல்லியிருக்காராம்.''

""போலீஸ் வட்டாரத்தில் என்ன சொல்றாங்கன்னு நான் சொல்றேன்... டி.ஜி.பி அசோக்குமாரோட பணிக்காலம் ஜூன் மாசத்தோடு முடிஞ்சுபோச்சு. இப்ப அவருக்கு ஒரு வருசம் பதவி நீட்டிப்பு கொடுத்திருக்காங்க. அதே நேரத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டிய பல பேர் ரொம்ப நாளா காத்திருப்பிலேயே இருக்காங்க. எஸ்.பி.யி லிருந்து டி.ஐ.ஜி., டி.ஐ.ஜி.யிலிருந்து ஐ.ஜி., ஐ.ஜி.யிலிருந்து ஏ.டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி.யி லிருந்து டி.ஜி.பி.ன்னு பதவி உயர்வுக் கான ஃபைல்களெல்லாம் 6 மாசமா முதல்வர் டேபிளில் அப்படியே கிடக் குது. இதனால புரமோஷன் கிடைக் காமலேயே ரிடையர்டாகிறவங்களும் இருக்காங்க. இந்த ஃபைல்களையெல் லாம் போலீஸ்துறைக்குப் பொறுப்பு வகிக்கிற முதல்வர் ஜெ. பார்வைக்கு எப்போ கொண்டு போகப் போறாங்க ளோன்னு போலீஸ் அதிகாரிகள் ஏக்கத்தோடு காத்திருக்காங்க.''

 லாஸ்ட் புல்லட்!


முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப்புலி ஆதரவாளர்களால் ஆபத்து என நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வெளிப்பட்டன. முதல் குரல் வைகோவிடமிருந்து தொடங்க, ராமதாஸ், கி.வீரமணி, கலைஞர் என தொடர்ச்சியாக குரல்கள் ஒலித்தன. கலைஞரின் கண்டன அறிக்கை வந்த பிறகு, ஓ.பி.எஸ். அதற்கு பதில் அறிக்கை தந்தார். இது மத்திய உளவுத்துறையின் தகவல்தானே தவிர, தமிழக அரசின் நிலை அல்ல என்று பதில் தரப்பட்டுள்ளது. சென்சிட்டிவ்வான பிரச்சினையில் இத்தனை அலட்சியமாக இருந்ததற்கு காரணம், ஜெ.வின் கவனத்திற்கு அவரது ஆலோசகர்கள் எதையும் முறையாகக் கொண்டு செல்லாததன் வெளிப்பாடுதான் என்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். விடுதலைப்புலி ஆதரவாளர்களால் ஆபத்து என்ற வரிகளை நீக்கிவிட்டு புது மனு தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கிறது தமிழக அரசு.


கிரானைட் மோசடிகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் பெயரைச் சொல்லி 61 லட்ச ரூபாய் மோசடி செய்த திருப்பூர் பிலிப் ராஜா விவகாரம் பலரையும் அதிரவைத்துள் ளது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர் களிடம் புகார் வாங்கிய சகாயம் அதை திருப்பூர் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பினார். அன்றிரவு, சகாயத்தின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தாசில்தார் சண்முகவேலின் வீட்டுக்கு விசாரணை என்ற பெயரில் போன கும்பல், அவரது மனைவியின் தாலி செயினைப் பறித்துச் சென்றுள்ளது. இவையெல்லாம் தனது விசாரணையை திசை திருப்ப நினைக்கும் ஆட்சியதிகார சக்தி களின் சதி என செம டென்ஷனாகியிருக்கிறார் சகாயம். தன்னு டைய விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைத் தராமல் இழுத்தடிக்கும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள சகாயம், மதுரை கலெக்டர் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார். ஆவணங்களைத் தராத அதிகாரிகளின் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் தயாராகி வருகிறார் சகாயம். 

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெ.வை விடுதலை செய்ததற்காக மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் கடந்த 5ந் தேதி கிடாய்களை வெட்டி கறிவிருந்து வைத்தார் அமைச்ச ரும் மா.செ.வுமான செல்லூர் ராஜூ. ஓ.பி.எஸ் தலைமையில் இதற்கான விழா நடந்தது. கறி விருந்துக்காக அழைத்து வரப்பட்ட நரிக்குறவர்கள், எங்களுக்கு சாதிச் சான்றிதழ்தான் வேண்டும் என்று சொல்லி கறிவிருந்து சாப்பிடவில்லை. விருந்தை அவர்கள் தவிர்த்ததற்கு கூடுதல் காரணம், அன்றைய தினம் குருப்பெயர்ச்சி என்பதுமாகும். இந்த குருப்பெயர்ச்சி, ஜெ.வின் ராசிக்கு சங்கடங்களை உண்டாக்கும் என்று சொல்லப்படுவதால், பரிகார பூஜைகள் பல இடங்களிலும் நடந்தன. அமைச்சர் செல்லூர் ராஜூவோ ஜெ.வுக்கு சங்கடமான நாளில் கறிவிருந்து வைத்தார் என அவரது கட்சியினரே மேலிடத்திற்குப் புகார்களைத் தட்டிவிடுகிறார்கள். vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக