புதன், 8 ஜூலை, 2015

ஜெயலலிதா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ! எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு விலை உண்டு.? அது உண்மை என்றே நீதிபதி குமாரசாமி நிரூபித்துக் காட்டினார்.

Sathyanarayana
FL12_kumaraswamy_j_2418095mநீதிபதி சத்யநாராயணா
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அப்பழுக்கற்ற நேர்மையான நீதிபதிகளின் எண்ணிக்கை சொற்பமே.   அதுவும், முதுகெலும்போடு உள்ள நீதிபதிகள் மிகவும் குறைவு.  குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்கு என்றால், பெரும்பாலான நீதிபதிகள் பம்முவார்கள்.    அவர்கள் அவ்வாறு பம்முவதற்கு, அச்சம் மட்டும் காரணமல்ல.   அடுத்து தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ பதவி உயர்வதற்கு, அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தால், ஆபத்து வந்து விடுமே என்பதற்காக எவ்வளவோ சமரசம் செய்து கொள்ளும் நீதிபதிகள்தான் அதிகம். தொடக்க காலத்தில் நேர்மையாக இருக்கும் பல நீதிபதிகள், இது போன்ற காரணங்களால், நிலை தடுமாறி, நேர்மையிலிருந்து பிறழ்கிறார்கள்.   பிரேமானந்தா வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, பிரேமானந்தாவுக்காக ஆஜரான ராம் ஜெத்மலானியை பகைத்துக் கொண்டதால், அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு, நான்கு வருடங்களுக்கு மேல தாமதமானது.   
அப்படி நேர்மையான நீதிபதியாக அறியப்பட்ட பானுமதி, உச்சநீதிமன்றம் சென்றதும், ஜெயலலிதா வழக்கில் எப்படி தீர்ப்பளித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.   அவரோடு அமர்வில் இருந்த மதன் பி லோக்கூர், பவானி சிங்கின் நியமனம் செல்லாது.  அப்படி செல்லாத ஒரு அரசு வழக்கறிஞரால் நடத்தப்பட்ட மேல் முறையீடும் செல்லாது என்று தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதாவின் மீதான விசுவாசத்தால், செல்லும் என்று தீர்ப்பளித்தார் பானுமதி.   பானுமதி மட்டும் அவ்வாறு தீர்ப்பளிக்காமல் போயிருந்தால், கணித மேதை குமாரசாமி அப்படியொரு தீர்ப்பெழுத வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.
பானுமதியைப் போலவே ஆட்சியாளர்களோடு சமரசம் செய்து கொண்டு, ஒரு சார்பு நிலை எடுக்கும் நீதிபதிளே இந்தியாவில் அதிகம்.    ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு, அரசு அலுவலகங்களில் ஒரு கைதியின் படம் மாட்டப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், எந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு தீப ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அதே நபர்களிடம் இது குறித்து முறையிடச் சொல்லி தீர்ப்பளித்தனர்.
தற்போது ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னையிலிருந்து சென்ற நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில், கடற்கறை எம்.ஜி.ஆர் சமாதியில், இரட்டை இலை வைத்திருக்கிறார்கள், அதை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.   தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாதப்புலி வண்டு முருகன், அது பறக்கும் குதிரையின் ரெக்கை என்று கூறி, புகைப்படங்களை சமர்ப்பித்தார்.   அந்த வழக்கில் அப்போதே தீர்ப்பு வழங்கியிருக்கலாம்.  எம்ஜிஆர் சமாதியில் இருப்பது இரட்டை இலை என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், அந்த வழக்கை தள்ளி வைத்தார் பால் வசந்தகுமார்.   அம்புட்டு தைரியம்.    அந்த வழக்கு இன்று வரை நிலுவையில் இருக்கிறது.  அதிமுக ஆட்சி முடியும் வரை, அதை எந்த நீதிபதியும் எடுத்து விசாரிக்கப் போவதில்லை. எண்ணூர் மின் திட்டத்துக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, அதில் சீன நிறுவனமும், பெல் நிறுவனமும் பங்கு கொள்கின்றன.   அதில் அடாவடியாக சீன நிறுவனத்தை வெளியேற்றி, பெல் நிறுவனத்துக்கு விதிகளை மீறி, ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.  இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், பெல் இந்திய நிறுவனம்.  ஆகையால் அதற்குத்தான் தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் ஒரு நீதிபதி.   இந்திய நிறுவனத்துக்கு தர வேண்டும் என்று முடிவெடுத்தபின், எதற்கு உலகளாவிய டெண்டர் ?
இப்படித்தான் இருக்கிறது நீதிமன்றங்கள்.    இப்படிப்பட்ட நீதிமன்றங்கள் இருக்கும் துணிச்சலில்தான், ஜெயலலிதா போன்றவர்கள் துணிச்சலோடு கொள்ளையடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட குமாரசாமிகள் ஆயிரம் இருந்தாலும், ஆங்காங்கே குன்ஹாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படி இருப்பதனால்தான், நீதிமன்றங்கள் இழுத்துப் பூட்டுப் போடப்படாமல் இருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு நீதிபதிதான் சத்யநாராயணா.  உடன்குடி அனல் மின் நிலைய டெண்டர் குறித்து, வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்புதான் இன்று அவரை பாராட்டிக் கட்டுரை எழுத வைத்துள்ளது.
வேண்டிய நிறுவனமான பெல் நிறுவனத்திடம் ஏற்கனவே லஞ்சப் பணத்தை முன் தொகையாக வாங்கி விட்டு, பெல் நிறுவனத்தை விட குறைந்த தொகை குறிப்பிட்டிருந்த சீன நிறுவனத்தக்கு ஒப்பந்தத்தை வழங்க விருப்பமில்லாமல், டெண்டரையே ரத்து செய்த மின் வாரியத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் இப்படி ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் சத்யநாராயணா.
“மின்வாரியம் இந்த டெண்டர் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் கருத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம், டெண்டர்களை நிராகரிக்குமாறு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதோடு, பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனத்தின் விலைப்புள்ளி குறைவாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.  பெல் மற்றும் சீன நிறுவனத்தின் விலைப் புள்ளிகள் இரண்டிலுமே குறைகள் இருந்தாலும், டெண்டரை இறுதி செய்வதற்கு முன், இரண்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சில குறைகளை சரி செய்ய வேண்டும் என்றே ஆலாசனை நிறுவனம் கூறியுள்ளது.
பெல், மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்களை முழுமையாக ஆராய்ந்த ஆலோசனை நிறுவனம், டெண்டரின் நிபந்தனைகளை இரு நிறுவனங்களுமே பூர்த்தி செய்துள்ளது.   ஆலோசனை நிறுவனமான பிக்ட்னர் நிறுவனம் தனது அறிக்கையை 30.12.2014 அன்றே அளித்து விட்டது.   மின் வாரியமும், டெண்டருக்கான காலத்தை 31 மார்ச் 2015 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு விசாரணையின்போது, இந்த நீதிமன்றம், இந்த டெண்டர் வெளியிடப்பட ஆகிய செலவு என்ன என்பதை மின் வாரியத்திடம் கேட்டது.  அதற்கு மின் வாரியம், ரூபாய்.33,42,864 செலவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஆவணங்களை பரிசீலித்ததில், உடன்குடிக்கான டெண்டர் வெளியிடப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2013 என்றும், மின் வாரியம் இரு டெண்டர்களையும் நிராகரித்த 13 பிப்ரவரி 2015 வரை, ரூபாய்.33,42,864 செலவாகியுள்ளது என்பது தெளிவாகிறது.
ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதமானது, அத்திட்டத்துக்கான செலவுத்தொகையை அதிகப்படுத்தும்.  உடன்குடி போன்ற பெரிய திட்டமானது தாமதத்தின் காரணமாக செலவை சில கோடிகளாவது அதிகப்படுத்தும்.
ஒரு அரசு, அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 14ன் கீழ், அனைத்து நிறுவனங்களும் சமமாக கருதப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக பல்வேறு தீர்ப்புகளில் கோடிட்டுக் காட்டியுள்ளது.   நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து 226ன் படி உள்ள அதிகாரத்தை மிகவும் அரிதான நேர்வுகளிலேயே பயன்படுத்த வேண்டும்.  எந்த இடத்தில் ஒரு அரசு நியாயமற்ற முறையில் பாரபட்சமாக செயல்படுகிறதோ, அந்த இடத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
யாருக்கு டெண்டர் வழங்கப்படும் என்று முடிவாகிறதோ, அந்த நிறுவனத்திடம், சில குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கூற வேண்டும் என்று ஆலோசனை நிறுவனம் தெரிவித்திருந்தது.    அதை பின்பற்றிய மின் வாரியம், அப்படி கலந்தாலோசனை செய்திருந்தால், புதிய டெண்டர் விடுவதால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்திருக்க முடியும்.  புதிய டெண்டர் விடுவதால் கூடுதல் செலவும் ஏற்படும்.  தமிழக மின் வாரியம், தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுகிறது.   ஆகையால், பணம் விரையமாவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், இந்த விவகாரத்தில் அது போல எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
இந்த காரணங்களுக்காக, 26 மார்ச் 2015 அன்று உடன்குடி தொடர்பாக வெளியிடப்பட்ட இரண்டாவது டெண்டரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கிறது.”
இதுதான் நீதிபதி சத்ய நாராயணாவின் தீர்ப்பு.
உடன்குடி டெண்டர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு அரசுத் தரப்பில் கொடுத்த அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.    இதற்கு முன்னர், இதே போன்ற எண்ணூர் வழக்கிலும் நீதிபதிகளுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.   இந்த வழக்கிலும் நிச்சயமாக கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், பிஎச்இஎல்லின் துணை காண்ட்ராக்ட் நிறுவனம் ஒன்றிலிருந்து, பெல் நிறுவனத்துக்குத்தான் கான்ட்ராக்ட் என்ற வாய்மொழி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏகப்பட்ட பணத்தை முன்னதாகவே வாங்கி விட்டார்கள்.   அதனால், சீன நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் சென்றால், பல சிக்கல்களை நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்திக்க வேண்டும்.    இதன் காரணமாக, இந்த வழக்கில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அரசுத் தரப்பு.  இதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் அரசுத் தரப்பு.
இவற்றையெல்லாம் மீறி, ஒரு நீதிபதி துணிச்சலாக இப்படியொரு தீர்ப்பை அளித்திருக்கிறார் என்றால், நாம் உள்ளபடியே அது குறித்து பெருமை அடையலாம்.   சத்யநாராயணன் போன்ற நீதிபதிகள் இருப்பதால்தான் நீதித்துறையின் மீதான நம்பிக்கை கொஞ்சமாவது எஞ்சியிருக்கிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த வகேலா நீதிபதி குமாரசாமியை தேர்ந்தெடுத்தது அவரின் நேர்மைக்காக மட்டுமே.    ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளித்து விட்டு, முட்டுச்சந்து முதல் மூணாறு வரை, வறுத்து எடுக்கப்பட்ட குமாரசாமி, மிகவும் நல்ல நீதிபதி என்று பெயரெடுத்தவர்தான்.   ஆனால்  மே 11 அன்று அவர் அளித்த தீர்ப்பு எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜெயலலிதா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் போன்றவர்களுக்கு உள்ள துணிச்சல் என்ன தெரியுமா ?   எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது.   எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு விலை உண்டு.   என்ற துணிச்சலே.   அது உண்மை என்றே நீதிபதி குமாரசாமி நிரூபித்துக் காட்டினார்.
அப்பட்டமாக, பச்சையாக கூட்டல் தவறு செய்து, அந்த தவறின் அடிப்படையில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  அந்த அப்பட்டமான தவறு ஊடகங்களில் வெளியான அன்றே, உச்சநீதிமன்றம் தலையிட்டு, அந்த தவறை தானாக முன்வந்து திருத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தவறின் அடிப்படையில் ஜெயலலிதா இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாகி, முதல்வராகவும் ஆகி விட்டார்.    அதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  தானாக முன் வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு இந்த வழக்கு தகுதி பெறாதென்றால் வேறு எந்த வழக்கு தகுதி பெறும் ?

குமாரசாமியின் தீர்ப்புக்குப் பிறகு சாதாரண பொதுமக்களில் பெரும்பாலானோர், நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை.   அந்த நம்பிக்கையை மீண்டும் துளிரச் செய்யும் பணியையே சத்யநாராயணன்களும், குன்ஹாக்களும் செய்து வருகின்றனர். அவர்களே நீதித்துறையின் கலங்கரை விளக்கங்கள்.   குமாரசாமிகள் களங்கங்கள் savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக