சனி, 25 ஜூலை, 2015

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் கொலை? முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சி

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளருமான ரவிக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண் அதிகாரி கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர்கள் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது வேளாண்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்மையான முறையில் முத்துக்குமாரசாமி நியமித்த போதும் அப்படி நியமிக்கப்பட்ட நபர்களிடமிருந்து லஞ்சமாக பணத்தைப் பெற்றுத்தருமாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து முதலில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு பின்னர் அமைச்சர் பதவியில் இருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெரும் போராட்டத்துக்குப் பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இதேபோல் தலைமை பொறியாளர் செந்திலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். முக்கிய சாட்சி ரவிக்குமார் மர்ம மரணம் இந்த வழக்கில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தபோது அவரது தலைமைச் செயலக அலுவலக உதவியாளராக இருந்த ரவிக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்திருந்தனர். அவரை மீண்டும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். தற்போது தலைமைச் செயலகத்தில் குடிநீர் வாரிய அலுவலகத்தில் உதவி பணியாளராக அவர் பணிபுரிகிறார். அவர் இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சியாகவும் கருதப்பட்டு வந்தார். அதனால் அவரிடம் மீண்டும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை மயிலாப்பூரில் ரவிக்குமார் திடீரென இறந்து போனார். அவர் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் உறவினர்களோ ரவிக்குமார் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லை என்கின்றனர். இதனால் ரவிக்குமாரின் திடீர் மரணம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.  முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் ரவிக்குமாரின் சாட்சியம் மிகவும் முக்கியமானது என்பதால் அவரது மரணம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கருதப்படுகிறது. இதனால் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Read more at:/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக