சனி, 25 ஜூலை, 2015

மகாராஷ்ட்ராவிலும் மதுவிலக்கு? மாட்டிறைச்சுக்கு தடைவித்த மகாராஷ்டிரா ....

மும்பை : மாநிலம் முழுவதும், மாட்டிறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை கொண்டு வந்துள்ள மகாராஷ்டிராவில், விரைவில், மாநிலம் தழுவிய அளவில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், 45, நேற்று அறிவித்தார்.மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது; முதல்வராக, கடந்த ஆண்டு அக்டோபர் முதல், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார். இந்த ஆண்டு மார்ச் முதல், அங்கு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், அம்மாநில சட்ட மேலவையில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த, எம்.எல்.சி., ஒருவர், முதல்வர் பட்நாவிசிடம், 'மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?' என, கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்து, முதல்வர் பட்நாவிஸ் பேசும் போது, ''மூன்று மாவட்டங்களில், இப்போது மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு எத்தகைய சூழ்நிலை நிலவுகிறது என்பதை பார்த்தபின், மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; அதற்கான உத்தரவு, விரைவில் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.

மற்றொரு, எம்.எல்.சி., எழுந்து, 'மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களில், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறதே?' என்றார்.

அதற்கு பதிலளித்த பட்நாவிஸ், ''மதுபானம், பால், உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும்,'' என்றார்.


திடீர் 'பல்டி':

இதற்கிடையே, முதல்வரின் மதுவிலக்கு தடை விருப்பத்தால், அம்மாநிலத்தில் பெரியளவில் விவாதம் ஏற்பட்டதும், 'இப்போதைக்கு, கள்ளச்சாராயம், விஷச்சாராயம் போன்றவற்றை தடை செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளது. உடனடியாக, மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரும் திட்டம் எதுவும், அரசுக்கு
இப்போது இல்லை' என, மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.


நீதிபதிகள் கோரிக்கை:

'நெஸ்லே' எனப்படும், பன்னாட்டு நிறுவனத்தின், 'மேகி நுாடுல்ஸ்' உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, காரீயம் போன்ற நச்சு இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் விற்பனைக்கு தடை விதித்த மாநிலங்களில் ஒன்று, மகாராஷ்டிரா.அதை எதிர்த்து, அந்த பன்னாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சமீபத்தில் விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூன்று நாட்களுக்கு முன், மதுபானங்களுக்கும் தடை வேண்டும் என்றனர்.'சாராயம் போன்ற மது வகைகளிலும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பல நச்சுகள் உள்ளன. மதுபானங்களை தடை செய்ய, மாநில அரசு ஏன், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை?' என்றனர்.
அதன் தொடர்ச்சியாக தான், முதல்வர் பட்நாவிஸ், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த விருப்பம் தெரிவித்தார் எனவும், மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துங்க!

கடந்த மூன்று மாதங்களாக, சந்திரபூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல்படுத்தப்பட
காரணமாக இருந்தவர்களில் ஒருவரான, பந்து தோத்ரே கூறியதாவது:மகாராஷ்டிர அரசு, உண்மையிலேயே இதில் மும்முரமாக இருந்தால், அதை வரவேற்கிறேன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கள்ளச்சாராயம் அதிகமாக புழங்குகிறது. அதை தடுக்கவும், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தடுக்க, கடுமையான சட்டங்கள் வேண்டும்.


குடிக்காதவர்களுக்கும் போதை நபர்களால் பாதிப்பு:

மாநிலம் முழுவதும், விரைவில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என, முதல்வர் பட்நாவிஸ் அறிவித்துள்ளது குறித்து, மதுவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, பரோமிதா கோஸ்வாமி கூறியதாவது:மாநிலம் முழுவதும், மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும். மது குடிக்கும் ஆண்களால், பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை; இந்த சமூகமே பாதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கூட, மதுபானம் அருந்தும் நிலை காணப்படுகிறது. மதுவின் வெறியால், கொலை, வாகன விபத்து ஏற்படுவதுடன், மதுவை தொடாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார். தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக