ஞாயிறு, 5 ஜூலை, 2015

வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை,காலை துண்டித்த கொடூரம்

விழுப்புரம் : வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை காலை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் தலித் இளைஞரான செந்தில். இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் மினி பேருந்தில் செல்லும்போது தோகைப்பாடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பேருந்தில் தினமும் பயணம் செய்து வந்தார்.  அப்போது செந்திலுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. வழக்கம்போல பெண்ணின் பெற்றோர் கொந்தளித்தனர். இதனால் அந்த மாணவி செந்திலுடன் பேசுவதை திடீரென நிறுத்திக்கொண்டார். மேலும் அந்த மாணவி செந்தில் தன்னை கேலி செய்ததாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். அவர் விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 11 நாள் காவல் முடிந்து வெளியே வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே செந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை, காலை துண்டித்து, மாம்பழப்பட்டு அருகே உள்ள ரெயில்வே கேட் அருகில் முட்புதருக்குள் அவரை வீசிவிட்டு சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட செந்தில் தனது தாய் ஆதிமா உதவியுடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தற்போது எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நானும், எனது தாயும் எங்களது சொந்த வீட்டை காலி செய்து விட்டு விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே போலீசார் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது கை, கால்களை வெட்டி துண்டித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து ஓட்டுநரின் கை, கால்களை துண்டித்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Read more at:/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக