ஞாயிறு, 5 ஜூலை, 2015

மாணவிக்கு 100 தோப்புகரணம் தண்டனை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்


திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலதாமதமாக வந்த மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவி கடந்த திங்கள் கிழமை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை பாப்பாத்தி 100 தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பி சென்ற மாணவியால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமையன்று பள்ளிக்கு வந்த மாணவியை இரும்பு சத்து மாத்திரையை சாப்பிட வேண்டும் என தலைமை ஆசிரியை பாப்பாத்தி கூறியுள்ளார். மாத்திரை சாப்பிட்டால் தனக்கு வாந்தி வருவதாகவும், வயிற்று போக்கு ஏற்படுவதாகவும் கூறி மாத்திரை சாப்பிட அவர் மறுத்துள்ளார்.
அரசு இலவசமாக தரும் மாத்திரையை சாப்பிடாவிட்டால் அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு தரும் அனைத்து விலையில்லா பொருட்களையும் தரமாட்டோம் எனவும், பள்ளியில் இருந்து நிறுத்தி விடுவோம் எனவும் பள்ளி தலைமை ஆசிரியை மாணவியை மிரட்டினாராம் . இதுகுறித்து தனது பெற்றோர் ரமேஷ் மற்றும் கற்பகத்திடம் மாணவி தெரிவித்தார்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் அவர்கள் விசாரித்த போது, அவர்களை அவமரியாதை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியை பாப்பாத்தி குறித்து மகளிர் சுய உதவிக் குழுவில் கற்பகம் புகார் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து குமரமங்கலம் பகுதி மகளிர் சுய உதவிக் குழு செயலாளர் அலமேலு தலைமையிலான பெண்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காலதாமதமாக வந்தால் கடுமையான தண்டனைகள் கொடுக்க கூடாது; மாத்திரை குறித்து குழந்தைகள் பயந்தால் பெற்றோர அழைத்து பேசி மாத்திரையின் நன்மைகள் குறித்து அறிவுறுத்தி இருக்க வேண்டும் என தலைமை ஆசிரியையிடம் அவர்கள் வலியுறுத்தினர். தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பெண்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக