மார்ச் 2013ல் பத்திரிக்கைகளை சந்தித்த நிதித்துறை செயலர் கே.சண்முகம் ஐஏஎஸ், 2014-2015ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூபாய் 26,188 கோடி என்றும், 2015-2016ல் இந்த விற்பனை 29,672 கோடியாக வளரும் என்றும், அதன் மூலமாக வணிக வரியாக 19,081 கோடி என்றும், கலால் வரியாக 7296 கோடிகள் என்றும் தெரிவித்தார்.
இப்படி கோடிக்கணக்கில் விற்பனை செய்து வருமானம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ? வியப்படையாதீர்கள். அதுதான் உண்மை.
1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதுதான் டாஸ்மாக் நிறுவனம். 29 நவம்பர் 2003 முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையையும், தன்வசமாக்கியது டாஸ்மாக் நிறுவனம்.
அதன் பிறகு, டாஸ்மாக்கில் குவிந்த வருமானத்தைப் பார்த்து, 2006 திமுக அரசும் சில்லரை விற்பனையை டாஸ்மாக் மூலமாகவே நடத்தியது. தற்போதைய அதிமுக ஆட்சி பதவியேற்றபின், டாஸ்மாக்கில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டன. டிசம்பர் 2011ல் சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்தில் இந்த மாற்றங்கள் தொடங்கின. அவர் வெளியேறிய மறு வாரமே, மிடாஸில் நிர்வாகியாக இருந்த ராவணன் நீக்கப்பட்டு, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும், பத்திரிக்கையாளர் சோ ராமசாமி இயக்குநர்களாக ஆக்கப்பட்டனர். 2012ல் சசிகலா மீண்டும் இணைந்ததும், சோ நீக்கப்பட்டு, இளவரசியின் இரண்டாவது மருமகன் கார்த்திகேயனும், சசிகலாவின் அண்ணனின் மருமகன், டாக்டர் கே.எஸ்.சிவக்குமாரும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு, மிடாஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த ஆணைகள், எட்டு லட்சம் பெட்டிகளில் இருந்து
அது வரை எட்டு லட்சமாக இருந்த மிடாஸ் மதுபான ஆலையின் சப்ளை ஆர்டர், ஆறு லட்சமாக குறைக்கப்பட்டது. மிடாஸ் நிறுவனத்தின் எந்த ஊழியரும், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளோடு பேசக்கூடாது என்னும் அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து, டாஸ்மாக்கில் பணியாற்றிய அதிகாரிகள், ஒரு நூதனமான திட்டத்தை செயல் தொடங்கினர். டாஸ்மாக் நிறுவனத்தால், மதுபானங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. சாதாரண மது, நடுத்தர வகை மது, ப்ரீமியம் மது என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. 2012 ஜனவரி வரை, டாஸ்மாக் நிறுவனம் 55 சதவிகிதம் சாதாரண மதுவும், 45 சதவிகிதம் நடுத்தர வகை மதுவும், 5 சதவிகிதம் விலை உயர்ந்த ப்ரீமியம் மதுவும் கொள்முதல் செய்து கொண்டிருந்தது.
சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுவில், அரசுக்கு வர வேண்டிய வருவாய் அதிகம். உதாரணத்துக்கு ஒரு குவார்ட்டரின் விலை, 100 ரூபாய் என்றால், அதில் 85 ரூபாய் வரிகளில் போய் விடும். 55 சதவிகிதம் கலால், விற்பனை மற்றும் சர்வீஸ் வரிகள். மீதம் டாஸ்மாக் நிறுவனம் சரக்கை கையாள்வதற்கான கட்டணம், என்று பல்வேறு வரிகளில் 100 ரூபாயில் 85 ரூபாய் அரசுக்கு வரியாக வந்து விடும். மது தயாரிக்கும் நிறுவனத்துக்கு 15 ரூபாய் போகும்.
இதற்கு பதிலாக 220 ரூபாய் சரக்கை டாஸ்மாக் வாங்குகிறது என்றால், வரி போக 33 ரூபாய் நிறுவனத்துக்கு போகும். மேலும், தொடர்ச்சியாக மது அருந்துபவர்கள், மலிவான விலையில் உள்ள மதுவைத்தான் விரும்புவார்களே தவிர, விலை உயர்ந்த மதுவை விரும்பமாட்டார்கள். தெளிவாக வேண்டுமென்றே, 5 சதவிகிதம் இருந்த ப்ரீமியம் விற்பனை 2012ம் ஆண்டு மார்ச் முதல் 30 சதவிகிதமாக மாற்றப்படுகிறது.
இந்த மாற்றத்துக்கு பிறகு, டாஸ்மாக்கின் அனைத்து, கிடங்கு மேலாளர்களுக்கும், மாதத்துக்கு இத்தனை பெட்டி மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. சரக்கு மாமா நத்தம் விஸ்வநாதனின் உத்தரவுப்படி இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நெருக்கடிகள், நேரடியாக டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை சென்றது. எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும், கடைகளில் அதை செயல்படுத்துவது டாஸ்மாக் ஊழியர்கள்தானே ?
டாஸ்மாக்கில் தினந்தோறும் ஆகும் விற்பனையை, ஊழியர்கள், கிடங்கு மேலாளர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும். கிடங்கு மேலாளர்கள டாஸ்மாக் தலைமையகத்துக்கு அறிக்கையாக அனுப்புவார்கள். வாரம்தோறும், எவ்வளவு விற்பனை என்று வாய்மொழியாக விற்பனையாளர்கள் சொல்வது, உள்துறைச் செயலர் வரை அறிக்கையாக செல்கிறது. தொடர்ந்து அதிக விற்பனை என்ற நெருக்கடி கடுமையானதும், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும், கூடுதலாக விற்பனை செய்தது போல பொய்யான கணக்கு வழங்கப்பட்டது. இது பொய்யான கணக்கு என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், இந்தப் பொய்யை அப்படியே தொடர்ந்து அரங்கேற்றி வந்தனர். ப்ரீமியம் சரக்கு விற்பனையினால், கொஞ்சம் கூடுதலாக வருவாய் வந்தாலும், ப்ரீமியம் சரக்குகளில், தயாரிக்கும் நிறுவனங்களுக்கே கூடுதல் வருவாய் என்பதாலும், விற்கப்படும் மது புட்டிகளின் எண்ணிக்கை குறைந்தது. விற்பனை ஏன் குறைந்தது என்று புரட்சித் தலைவி கேட்டால் என்ன சொல்ல முடியும் ? ஆகையால், புரட்சித் தலைவியின் மனம் குளிரும்படி, நாளுக்கு நாள் விற்பனை அதிகம் என்று தொடர்ந்து புள்ளி விபரங்கள் அளிக்கப்படுகின்றன.
உண்மையில் விற்பனையாகும் மது புட்டிகளின் எண்ணிக்கையிலும், டாஸ்மாக் ஊழியர்கள் வழங்கிய எண்ணிக்கையிலும் இருந்த வேறுபாடு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் வாய் மொழியாக சொன்ன எண்ணிக்கையின் அடிப்படையிலேயே, கொள்முதலும் நடத்த வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவிடுகிறார். உதாரணமாக ஒரு கடையில் 60 ஆயிரம் புட்டிகள் விற்பனை ஆகின்றன என்றால், அந்த கடை ஊழியர் 70 ஆயிரம் என்று கணக்கு கொடுப்பார். இந்த 70 ஆயிரத்தை அடிப்படையாக வைத்து, அந்தக் கடைக்கு 80 ஆயிரம் பாட்டில்கள் சப்ளை செய்யப்படும். ஏனென்றால், மாதந்தோறும் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே உத்தரவு.
வழக்கமாக கடைகளுக்கு அனுப்பும் எண்ணிக்கையை விட 25 சதவிகிதம் கூடுதலாக சரக்கு அனுப்புமாறு எல்லா கிடங்கு மேலாளர்களும் பணிக்கப்பட்டனர்., உள்துறை செயலாளராக இருந்த ஜி.ராஜகோபால் ஐஏஎஸ் தன் பங்குக்கு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு நெருக்கடி அளித்து வந்தார்.
இந்த ராஜகோபால் ஐஏஎஸ் ஒரு சரியான அரை மெண்டல் என்பதை, தலைமைச் செயலகத்தில் அவரிடம் பணியாற்றிய அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். நடைமுறையில் சாத்தியமே இல்லாத பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதில், ராஜகோபால் கைதேர்ந்தவர். இந்த அடிப்படையில்தான், டாஸ்மாக் விற்பனையை உயர்த்தியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார் ராஜகோபால்.
பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மிகவும் குறுகிய இடங்களிலேயே செயல்படுவதால், பெட்டிகளை வைக்க இடமில்லாமல், மேல் சுவர் வரை பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டன. இதன் காரணமாக, அங்கே ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், உள்ளே நுழையக்கூட முடியாமல், எவ்வித ஆய்வும் நடத்த இயலாமல் போகும்வரை, இந்த நெருக்கடி முற்றியது. இதனால் பல மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பணத்தை கையாடல் செய்வதும் ஒரு புறம் நடைபெற்று வந்தது.
மதுபான விற்பனை தனியார் வசம் இருந்தபோது, ‘சராசரி விற்பனை’ என்ற அடிப்படையில் மது கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஒரு கடையில் எந்த மது அதிகம் விற்பனையாகிறதோ, அந்த அடிப்படையிலேயே கொள்முதல் நடைபெறும். ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் அளித்த பொய்யான எண்ணிக்கையின் கீழ், கொள்முதல் நடைபெற்றதால், கடைகளில் சரக்குகள் ஏராளமாக தேங்கிப்போனது. ஒரு கட்டத்தில் கிடங்கு மேலாளர்கள், வாரம்தோறும் எத்தனை பெட்டிகளை கடைகளுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு சான்றிதழை, டாஸ்மாக் தலைமையகத்துக்கு ஒரு ஆளை போட்டு, அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சாதாரணமாக கடிதத்தில் அனுப்ப வேண்டிய அறிக்கை, தனி நபர் மூலம் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடும் அளவுக்கு, நெருக்கடி அதிகமானது.
அரசுத் துறைகளில் மிக மிக அவசியம் மற்றும் அவசரமான விஷயங்களிலேயே இது போல சிறப்புத் தூதுவர்கள் மூலம் கடிதம் அனுப்பப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று வருடங்களில், ஒவ்வொரு டாஸ்மாக் கிடங்கிலும் பணியாற்றும், அலுவலக உதவியாளர்களின் பயணப்பட்டியலை எடுத்து சரிபார்த்தால், அவர்கள் வாரந்தோறும், சென்னை பயணித்திருப்பது தெரியும் என்றார், ஒரு டாஸ்மாக் அதிகாரி.
விற்பனையும் அதிகரிக்காமல், பொய்யான கணக்கின் அடிப்படையில் கொள்முதலும் நடைபெற்றதால், டாஸ்மாக்கின் வருமானமும் சரியத் தொடங்கியது.
மது பாட்டில்களில் கலால் வரி என்பது, மதுபான ஆலையில் மது தயாரித்து விற்பனை செய்யும்போதே நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஒரு பாட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளி வந்தால், அதற்கான கலால் வரி அரசுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த பாட்டில் விற்பனை ஆகிறதா இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல. தொடர்ந்து பொய் விற்பனை கணக்கை அளித்து வந்தால், கலால் வரியை கணக்கிடும்போது இடிக்குமா இல்லையா ? இவர்களின் பொய்க்கணக்கு, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தபோதுதான் 2012-2013 நிதி ஆண்டு மார்ச் 31ம் நாள் அன்று முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு கடை ஊழியரும் கொடுத்த பொய்க்கணக்கை மாதந்தோறும், சேர்த்து சேர்த்து, தமிழகத்தில் உள்ள அத்தனை கடைகளையும் சேர்த்து கணக்கிட்டால், ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் அதிகமான பாட்டில்களுக்கான கணக்கில் துண்டு விழுகிறது.
மார்ச் மாத இறுதியில், அரசுக்கு கணக்கு கொடுத்தாக வேண்டும். கலால் வரி, விற்பனை வரி, டாஸ்மாக்கின் கமிஷன் ஆகியவை அனைத்தும், மார்ச் 31க்குள் செலுத்தப்பட வேண்டும். ஆனால் 3 லட்சம் பாட்டில்கள் இடிக்கிறது. என்ன செய்வது ?
இந்த நிலையில்தான், பொய்க் கணக்கை சரி செய்வதற்காக, டாஸ்மாக் நிறுவனம், 1000 கோடி ரூபாயை தமிழக நகர்புற நிதி மற்றும் உட்கட்டமைப் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (TUFIDCO) கடன் வாங்கலாம் என்ற யோசனை வருகிறது. இந்த யோசனையை தெரிவித்ததும், சரக்கு மாமா நத்தம் விஸ்வநாதன்தான். 2013ம் ஆண்டு கடன் வாங்கியாகி விட்டது.
சரி. எதற்காக இப்படி கடன் வாங்கினீர்கள் என்று மத்திய கணக்காயரோ, அல்லது முதலமைச்சரோ கேள்வி கேட்டால் என்ன சொல்வது ? இதற்காக, இதை சரி செய்யும் பொருட்டு, டாஸ்மாக்கில் நீண்ட நாள் பணியாற்றிய ஒரு அதிகாரியான மோகன் என்ற அதிகாரியை இணை இயக்குநராக நியமிக்கின்றனர். அவர் இந்த குளறுபடிகளை சரி செய்யும்படி பணிக்கப்படுகிறார்.
தொடக்கத்தில் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மாட்டாரோ என்ற எண்ணத்தில், அவரது பணி சென்னை மாநகரம் மட்டும் என்று உத்தரவிடப்படுகிறது. பொறுப்பேற்றுக் கொண்டதும், மோகன், அதிரடியாக ஒரு உத்தரவை வழங்குகிறார். அதாவது ஏற்கனவே நிலுவையில் இருந்த சரக்குகள், கடைகளில் இருந்து காலியாகும் வரை, புதிதாக கொள்முதல் செய்யக் கூடாது என்று சென்னை மாநகரில் உள்ள கடைகளுக்கு உத்தரவிடுகிறார். இரண்டே மாதத்தில் சென்னை முழுதும் உள்ள கடைகளில் பழைய ஸ்டாக் காலியாகிறது. தேங்கிக் கிடந்த ஸ்டாக்குகளை எப்படி தள்ளி விடுவது என்று தெரியாமல் இருந்த, டாஸ்மாக் நிர்வாகம் இவரது பணியை தமிழகம் முழுக்க விரிவுபடுத்தி ஆணையிடுகிறது. இப்படி உத்தரவிட்டதன் மூலம், நடந்த முறைகேடுகளுக்கு சாட்சியாக இருந்த விற்பனையாகாத மது புட்டிகளும் விற்கப்பட்டு, முழுமையாக தடயங்கள் அழிக்கப்பட்டன என்கிறார் பெயர் கூற விரும்பாத ஒரு டாஸ்மாக் அதிகாரி.
ஒரு கட்டத்தில் கணக்குகள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. சரிபார்க்கையில், தொடர்ந்து போலியான விற்பனை எண்ணிக்கை கொடுக்கப்பட்டது தெரிய வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக் கிடங்கு மேலாளர்கள் அனைவருக்கும், நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க, ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. “மேலிட உத்தரவுப்படி பொய்யான விற்பனை எண்ணிக்கை அளித்தோம். இது பொய்யான எண்ணிக்கை என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். உள்துறை செயலர் வரை, இது பொய்யான எண்ணிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த விபரத்தை முதலமைச்சரிடம் சொல்வதற்கு பயந்துகொண்டு, எங்களை தண்டிக்க தொடங்கினார்கள்” என்றார் மனம் புழுங்கிய ஒரு அதிகாரி.
நாளுக்கு நாள் உண்மை விற்பனைக்கும், போலி விற்பனைக்கும் இடையேயான வேறுபாடு அதிகரித்துக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில், வேறு வழியே இல்லாமல், தமிழகத்தின் அனைத்து, கிடங்கு மேலாளர்களுக்கும், தண்டனை வழங்க ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
டாஸ்மாக் கிடங்கு மேலாளர்களாக உள்ளவர்கள் இருவகைப்படுவார்கள். ஒருவகை, வருவாய்த் துறையில் துணை ஆட்சியர்களாக உள்ளவர்கள். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்தவர் வருவாய் நிர்வாக ஆணையர். வருவாய்த் துறையைச் சேர்ந்த இவர்கள், எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையரை அணுகி அவர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவடிகைக்கையை ரத்து செய்து கொண்டனர். ஆனால், 2001 அதிமுக ஆட்சியில் நேரடி கிடங்கு மேலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், முழுமையான அரசு ஊழியர்கள் அல்ல. தொகுப்பூதியம் பெறுபவர்கள். திமுக 2006ல் பதவியேற்றதும், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுக அரசு 2011ல் மீண்டும் பதவியேற்றதும், அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர். மாதம் 35 ஆயிரத்தை தொகுப்பூதியமாக பெற்று வந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, டாஸ்மாக் நிர்வாகமே. இதன் காரணமாக பணி இடைநீக்கத்தில் இருக்கும் 9 பேர், பிற அரசு ஊழியர்கள் போல, இடைநீக்க காலத்தில் வழங்கப்படும் பாதி சம்பளம் கூட இல்லாமல் புலம்பி வருகிறார்கள்.
தற்போது என்ன நிலவரம் என்று விசாரித்தால், 30 சதவிகிதமாக இருந்த ப்ரீமியம் ப்ராண்டுகளின் கொள்முதல், 20 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் தொடர்ந்து நிதியிழப்புக்கு ஆளாகி வருகிறது என்றார், நிதித்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி.
மார்ச் 2011ல் உள்ளபடி டாஸ்மாக் கொள்முதல்.
உயர் ரக மது கொள்முதல் அதிகரிக்கப்பட்டதால் அரசு தரும் கூடுதல் விலை.
டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் மற்றொரு மூத்த அதிகாரி, பேசுகையில், “உயர் ரக மது கொள்முதல் அதிகமானதால், சாதாரண மற்றும் நடுத்தர மதுவகைகளை தயாரிக்கும் மிடாஸ் நிறுவனம், பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை. ஆனால், எம்ஜிஎம், திமுக முன்னாள் அமைச்சர் ட்டி. ஆர். பாலு சம்பாதிக்கும் கல் டிஸ்டில்லரீஸ் மற்றும், கருணாநிதியின் கதை வசனத்தில் “உளியின் ஓசை” படத்தை தயாரித்த ஜெயமுருகனின் எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ் ஆகியவைதான் அதிக அளவில் சம்பாதித்துக் கொண்டுள்ளன. இந்தக் கொள்ளையடிப்பதில் எவ்வித கட்சி பேதமும் இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர். இந்த மது தயாரிப்பு நிறுவனங்களோடு, அமைச்சர் வரை மிகுந்த நெருக்கமாக இருப்பதால், இந்த கொள்ளையை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஊழல் நடந்ததற்கான தடயங்களையும் அழித்து விட்டனர். சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும்.” என்கிறார்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, இப்படி கடன் வாங்குவது ஒரு இயல்பான விஷயம். அரசு நிறுவனங்களில், ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திடம் கடன் வாங்குவது வியப்புக்குரிய விஷயம் அல்ல. கடன் வாங்கினாலும், டாஸ்மாக் விரைவாக கடனை திருப்பி அளித்து விடும் என்றனர். எண்ணிக்கையில் குளறுபடி குறித்து கேட்டபோது, “தினம் தினம் டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் மாவட்ட அதிகாரிக்கு விற்பனையான கணக்கு வாய்மொழியாக தொலைபேசி மூலம் அளிப்பார்கள். அந்த கணக்கை கிடங்கு மேலாளர்கள், டாஸ்மாக் தலைமையிடம் அளிப்பார்கள். இப்படி வாய்மொழியாக கணக்கு அளிக்கையில், 5 சதகிகிதம் அளவுக்கு தவறு ஏற்படுவது இயல்பு. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 சதவிகிதம் அளிக்கப்படும் தவறு, மொத்தமாக பார்கையில் பூதாகரமாக தெரிகிறது.
ஒவ்வொரு மாத இறுதியிலும், மொத்த விற்பனை, வசூலான தொகை இரண்டும் சரிபார்க்கப்படும். விற்பனையான தொகையை சரி வர செலுத்தாமல் இருந்தால்தான் கணக்கில் தவறு என்று எடுத்துக் கொள்ள முடியும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, டாஸ்மாக்கின் நிர்வாகக்குழு கூடி, இந்த எண்ணிக்கையை சரிபார்க்கும் ஆகையால் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றனர்.
தவறே இல்லையென்றால், பிறகு எதற்கு, அனைத்து கிடங்கு மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதற்கு, என்ன காரணம் என்று கேட்டபோது, சரியான உரிய விளக்கம் கிடைக்கவில்.
ஒரு புறம் இலவசங்களை தருவதற்காக, வருமானத்தை பெருக்குகிறேன் என் பேரில், ஏராளமான கடைகளைத் திறந்து, மக்களை குடிகாரர்களாக்குவதோடு நில்லாமல், தனியார் மதுபானத் தயாரிப்பாளர்களை, மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் வேலையையும், அதிமுக அரசு செய்து வருகிறது.
வருடந்தோறும் விற்பனையை அதிகரித்துக் கொண்டே போகும், டாஸ்மாக் நிறுவனம், ஏன் இப்படி கடனாளியாகி நிற்கிறது என்பது இப்போது புரிகிறதா ?
அரசு மதுபானம் விற்பதே தவறு. அதிலும், மாதந்தோறும் விற்பனையை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு, அதை செயல்படுத்தாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் ஜெயலலிதா அரசைப்போல ஒரு கேடுகெட்ட அரசை உலகில் எங்காவது பார்க்க முடியுமா ?
admk is concentrated on tasmac ...super News
பதிலளிநீக்கு