சனி, 27 ஜூன், 2015

தலைகீழாக மாறும் கல்யாண சந்தை ! ஆண்களின் அதிகாரம் பறிபோகிறது? தாய் வழிச்சமுகம் ஆகிறது?

இனி ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டும்! ரேவதி, க.நாகப்பன் : திருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், 'நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்...’ என்று காத்திருக்கும் பெண் வீட்டார், 'பொண்ணு அழகா இருக் கணும்...’ என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்... இப்படி!
இன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் 'டிமாண்ட்’ செய்வது போலவே, பெண் வீட்டாரின் 'டிமாண்ட்’களும் இப்போது பெருகியுள்ளன. 'பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன... நல்லதுதானே..?’ என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, 'தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்...’ என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்!ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்... என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.

''எனக்கு ஒரே மகன். நல்ல வேலையில் இருக்கான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, அஞ்சு வருஷமா அவனுக்குப் பெண் தேடறேன். எதுவுமே அமையல. அந்தக் காலத்துல, பொண்ணுங்களக் கட்டிக் கொடுக்க படாதபாடு படுவாங்க. இப்ப, நிலைமை தலைகீழ்...'' என்று கவலையுடன் சொன்ன சென்னை, மயிலாப் பூரைச் சேர்ந்த அந்தத் தந்தைக்கு, மனது முழுக்க வருத்தமும், விரக்தியும்.
''பெரிய சம்பளம் வாங்குறேன்... ஆளும் பார்க்க ஸ்மார்ட்டாதான் இருக்கேன். மேட்ரி மோனியல் சைட்ல புரொஃபைல் அப்லோட் பண்ணி ஆறு மாசமாச்சு. இன்னும் ஒரு ரெஸ் பான்ஸ் கூட வரல. இந்த பொண்ணுங்க என்ன எதிர்பார்க்கிறாங்கனே புரியலையே!'' என்று குழம்புகிறார் சாஃப்ட்வேர் இளைஞர் ஒருவர்.
'நல்ல பெண்...  நல்ல பையன்...'
ஆயிரம் திருமணங்களுக்கு மேல் செய்து வைத்தவர், சென்னை, அடையாறைச் சேர்ந்த 70 வயதாகும் திருமண தரகர் சாம்பசிவம். ''போட்டோ வேண்டாம்...'' என்றபடி பேச ஆரம்பித்தவர்,
''25 வருஷத்துக்கு முன்ன இங்க இருக்கிற பிள்ளையார் கோயில்ல போய் உட்கார்ந்தேன்னா, பெண்களோட ஜாதகக் கட்டை எடுத்துட்டு, ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 தாய்மார்களாவது வரு வாங்க. 'ஏதாச்சும் ஒரு வேலையில் இருந்தா போதும். அரசு உத்தியோகம்னா ரொம்ப சந்தோஷம். ஓரளவுக்கு நகை போட்டு, திருமணத்தையும் நல்லா செஞ்சு கொடுத்துடுவோம்’னு சொல்லுவாங்க. படிச்ச பெண்களோட வரன் ஒண்ணு, ரெண்டு வரும். 'பையனைவிட, அதிகம் படிச்ச பொண்ணு வேண்டாம்’னு நிப்பாங்க மாப்பிள்ளை வீட்டுக் காரங்க. இதனாலயே, மேல படிக்கணும்னு கேட்கிற பெண் பிள்ளைகளை, 'உன்னைவிட படிச்ச மாப்பிள்ளையை நாங்க எங்க போய் தேடுறது?’னு மறுப்பாங்க பெத்தவங்க. இதெல்லாமே குறைச்சலான சதவிகிதம்தான். பெரும்பாலும் சட்டு சட்டுனு வரன்கள் அமைஞ்சுடறதுதான் அதிக சதவிகிதம்'' என்றவர்,
''இன்றைய சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார்கூட தகைஞ்சு வந்துடறாங்க. ஆனா, பெண் வீட்டார்தான் நிறைய நிராகரிக்கறாங்க. இப்போ இருக்கிற பெண்களின் படிப்பு, எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை கிடைக்கறதில்லை. அப்படியே அமைஞ்சாலும், கட்டிக்கிட்டவங்க ரெண்டு பேரும், போன தலைமுறையைப் போல் விட்டுக்கொடுத்து வாழறதில்லை. 'நீ இல்லைனா எனக்கு வாழ்க்கை இல்லையா?’னு சட்டுனு பிரிஞ்சுடறாங்க. இதனாலேயே, 'நல்ல பொண்ணு...’, 'நல்ல பையன்...’னு எந்த வரனுக்கும் உத்தரவாதம் கொடுத்து சம்பந்தம் பேசி வைக்கத் தயக்கமா இருக்கு'' என்றவரின் குரலில் ஏகத்துக்கும் சோகம்.
'பையன் படிப்புக்கு லோன் போடலைதானே!'
அம்பத்தூரை சேர்ந்த மாலதி - கிருஷ்ணசாமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். நாத்தனார், ஓர்ப்படி என்று கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவர், மகனுக்கு வரன் தேடி அலைந்ததை வருத்தத் துடன் பகிர்ந்து கொண்டார். ''எங்க வீட்டுல எல்லோருமே நல்லா படிச்சவங்க. என் மகளுக்கு வரன் தேட நான் எந்தச் சிரமமும்படல. முதன் முதலா பார்த்த இடமே முடிஞ்சுடுச்சு. ஆனா, பையனுக்கு நியூஸ்பேப்பர், மேட்ரிமோனியல்னு வரன் தேடி அலைஞ்சேன். இத் தனைக்கும் நல்ல வேலையில இருக்கான். லட்சணமான பையன். 'பையனோட படிப்புக்கு லோன் எதுவும் போடலை இல்லே..?’, 'வீட்டு லோன் எல்லாம் முடிச்சுட்டீங் களா...?’, 'கல்யாணம் ஆனதும், தனிக்குடித்தனம் வெச்சுட ணும்’னு வரிசையா கண்டிஷன் போடறாங்க பொண்ணு வீட்டுக்காரங்க. ம்... அலைஞ்சு திரிஞ்சு ஒரு அருமையான வரன் வந்தது. போன வருஷம் தான் அந்த பெண் கையில் பிடிச்சுக் கொடுத் துட்டேன்'' என்று மலர்ச்சியுடன் சொன்னார்.
படிப்பு ஒரு தடையல்ல!
'பெண், ஆணைவிட அதிகம் படித்திருப்பது திருமணத்துக்கு தடையாக இருக்கிறது' என்கிற பழைமை உடைந்திருப்பதைப் பேசினார்கள், ஸ்ரீ காளிகாபுரத்தைச் சேர்ந்த செல்வமணி - ஜெனீமா தம்பதி. செகண்ட் கிரேட் டீச்சராக இருக்கும் செல்வமணி, கரஸ்பாண்டன்ஸில் எம்.எஸ்சி படிக்கிறார். பொறியியல் பட்டதாரியான ஜெனீமா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லெக்சரர்!
''கல்யாணப் பத்திரிகையில 'ஜெனீமா B.E., செல்வமணி DTed., M.Sc, இப்படி இருந்ததைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'உன்னை விட குறைச்சலா படிச்சவர ஏன் கல்யாணம் பண்ணிக்கிறே..?’னு கேட்டாங்க. நல்லா படிச்சுருக்கணும், நிறைய சம்பாதிக் கணுங்கிறதைவிட, குணமானவரா இருக்கணுங் கறதுதான் என்னோட எதிர்பார்ப்பு. எங்களுக்குள்ள எந்தச் சண்டைகளும் கிடை யாது. புரிதல் நிறைய இருக்கு. இப்பக்கூட, நான் ரெகுலர்ல எம்.இ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர் படிக்கிறேன்...'' என்றவருடன் செல்வமணியும் சேர்ந்து ஒரே குரலில்,
''அறிவுக்காகவும், பொருள் சம்பாதிக்கறதுக் காகவும்தான் படிப்பு. அதை குடும்பத்துக்குள்ளே நுழைச்சு குழப்பம் பண்ணக் கூடாது. எந்த விதத்துலயும் எங்களுக்குள்ள ஈகோ எட்டிப் பார்க்கல. எல்லாத்துக்கும் காரணம்... மனசுதான்!'' என்று இயல்பாகப் பேசி, இன்றைய இளம் தம்பதிகளுக்குச் சொல்லாமல் பாடம் சொன்னார்கள்!
'ஆண்கள்தான் வரதட்சணை தர வேண்டியிருக்கும்!’
வரன்களின் வரவு பற்றி தமிழ் மேட்ரி மோனியல் டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனிடம் பேசியபோது, ''70% ஆண் களும், 30% பெண்களும் பதிவு செய்திருக்கின்றனர். பிலோ மிடில் கிளாஸ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆன் லைன் பதிவை செய்வ தில்லை. கொஞ்சம் மேல்மட்டத்தினர் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பெற்றோர், உறவினர்கள் கலந்து முடிவெடுத்து திருமணம் செய்வார்கள்.
இன்று சம்பந்தப்பட்ட பெண், ஆணின் முடிவே முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்வதால் பொருளாதார பலம் தரும் தைரியத்தால், பெண்களின் எதிர்பார்ப்பு இப்போது பல கோணங்களிலும் விரிந்துள்ளது. அதன் காரணமாக, பையன் வீட்டார் இறங்கி வரவேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், மேல்தட்டு வர்க்கத்தில் ஜாதி, மதம் அதிகம் பார்ப்பதில்லை. இதனால், குறிப்பிட்ட சில சமூகத்தில் பெண்கள் இல்லாமலும் போய் விடுகிறது. ஆண்கள், பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது!'' என்றார்!
நல்ல விஷயம்! விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக