சனி, 27 ஜூன், 2015

பார்ப்பன இந்து எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றார்.மதிமாறன்

சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்:
1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் ஒன்றாகத் தங்கி, பயிற்சி பெற்று, உணவருந்தி வருவதைக் கண்டு அம்பேத்கர் ஆச்சர்யம் அடைந்ததாகவும் விஜயபாரதத்தின் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை?
மதிமாறன்: இது முற்றிலும் தவறான செய்தி. ஒரு மிகப்பெரும் தலைவர் குறித்துப் பரப்பப்படும் அவதூறு. ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு அம்பேத்கர் செல்லவும் இல்லை, அவர்களைப் புகழவும் இல்லை. அதேப்போன்றுதான் சமஸ்கிருத மொழியை ஆதரித்து அம்பேத்கர் பேசியது இல்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை.

விடியல்: அம்பேத்கர் மீது இந்துத்துவக் கும்பல் திடீரென்று பாசம் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?
மதிமாறன்: இந்திய அரசியல் சட்டத்தில் முற்போக்கான விஷயங்கள் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர். சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர்க பெண்களுக்கான உரிமைகள் ஆகியவற்றைக் கூறலாம். இந்த உரிமைகளைப் போராடியே பெற்றார்.
ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, இடஒதுக்கீட்டை ரத்துச் செய்ய வேண்டும், சிறுபான்மையினர், பெண்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்று கூறும் இந்துத்துவவாதிகள் தற்போது அம்பேத்கரை கொண்டாடுவது வெட்கக்கேடானது. இவர்களின் பொய் முகத்திற்கு இதுவே சாட்சி.
‘நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், இந்துவாக மரணிக்க மாட்டேன்’ என்று கூறிய அம்பேத்கரையே இன்று இவர்கள் தங்கள் தலைவராகக் கூறுகின்றனர். தலித் தலைவர்களும் மற்ற முற்போக்காளர்களும் அம்பேத்கரை சரியாக அடையாளப்படுத்தாததன் விளைவே இது. இந்து மத எதிர்ப்புக் குறித்துப் பாகம் பாகமாக எழுதியுள்ளார் அம்பேத்கர். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார் என்று கூறுவது அம்பேத்கர் சிலையை ஜாதி வெறியர்கள் இடித்துக் கேவலப்படுத்துவதை விடக் கேவலமானது. இந்து அமைப்புகள் அம்பேத்கரை புகழ்வது என்பது அவரை அவமானப்படுத்துதற்குத்தான்.

விடியல்:
இதன்மூலம் இவர்கள் அடைய விரும்பும் இலக்கு என்ன?
மதிமாறன்: அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக உள்ளார். அவர் இந்து மதத்திற்கு ஆதரவாக உள்ளார் என்ற பொய்யை பரப்புவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை இந்துத்துவ இயக்கங்களின் அடியாளாக மாற்றும் வேலை நடக்கிறது.
கிராமங்களில் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்காதவர்கள், நகர் புறங்களில் தாழ்த்தப்பட்டவர், மீனவர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள். கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளில் சிலைகளைக் கொண்டு செல்லாதவர்கள் நகர்ப்புறங்களில் விநாயகரை அவர்களிடம் திணிக்கிறார்கள். இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களைத் தங்களின் அடியாளாக மாற்றுகின்றனர்.
‘நாங்களும் இந்துக்கள்தான். எங்கள் வீதி வழியாகச் சாமியை கொண்டு செல்லுங்கள்’ என்று தாழ்த்தப்பட்டவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இந்துக்களே இல்லாத இஸ்லாமியர்களின் வீதி வழியாக எதற்கு விநாயகரை கொண்டு செல்ல வேண்டும்?
விடியல்: அம்பேத்கர் குறித்த புரிந்துணர்வு மக்கள் மத்தியில் எப்படி உள்ளது?
மதிமாறன்: டாக்டர் அம்பேத்கர் என்றவுடன் அரசியல் சாசன சட்டமும் அவர் பௌத்த மதத்திற்கு மாறியதும்தான் மக்களின் நினைவுக்கு வருகிறது. 1948 வரை இருந்த அம்பேத்கர் குறித்து யாரும் சொல்வதில்லை. அரசியல் சாசனம் குறித்தும் பௌத்த மதத்திற்கு மாறியது குறித்தும் நீங்கள் பேச வேண்டுமென்றால் அவரின் போர் குணத்தை அறிந்திருக்க வேண்டும்.
இந்து மத எதிர்ப்பு, பார்ப்பண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகியவைதான் அவரின் போர்க் குணம். இதைத்தான் தன் வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டார்.
விடியல்: அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?
மதிமாறன்: இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு சூழல்களில் தோன்றியவை. அவற்றிற்கும் வேத பார்ப்பன முறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், பௌத்த மதம் முழுக்க முழுக்க வேத எதிர்ப்பில் இருந்து வந்தது. சாதி மனோபாவத்தை எதிர்த்தவர் புத்தர். இந்து மதத்தை எதிர்த்து நின்றவராகப் புத்தரை கண்டார் அம்பேத்கர். எனவே, வேத பார்ப்பண இந்து எதிர்ப்பின் வெளிப்பாடாகவே அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்.
வேதம், புராணம், நாலு வர்ணம் என இந்து மதத்தின் கூறுகளாக எதுவெல்லாம் சொல்லப்பட்டதோ, அவை அனைத்திற்கும் பதில் சொன்ன ஒரே இந்திய தத்துவத் தலைவர் அம்பேத்கர் மட்டும்தான்.
விடியல்: தற்போதைய சூழலில் தலித் இயக்கங்கள் மீதான கடமை என்ன?
மதிமாறன்: இந்தியாவில் இந்து மரபு அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழிவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சாதி வன்முறையும் இருக்கிறது. இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் தலித் இயக்கங்களும் பெரியார் இயக்கவாதிகளும் சமூக ஆர்வலர்களும் செய்ய வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள்.
இதை நாம் செய்யத் தவறியதால் இந்துத்துவ இயக்கங்கள் தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான சதித் திட்டம்தான் இது.
அம்பேத்கர் குறித்த தெளிவான பார்வையைக் கொடுத்தால், இனி அம்பேத்கர் படத்தைச் சங்பரிவார் கூட்டங்கள் கையில் எடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களே அவர்களை விரட்டியடிப்பார்கள்.
* பேட்டி:ரியாஸ். நன்றி: புதிய விடியல் 2015 மே மாத இதழ்.

1 கருத்து: