செவ்வாய், 23 ஜூன், 2015

ஒரு வேளை நான் தான் பிழையோ ? ஒரு ஈழத்து சிறுகதை


இது அறுபதுகளில் நடந்த சம்பவம். வெறும் புழுதி படிந்த தலையும் தூசி படிந்த கோட்டுமாக நிறை வெறியில் மணிக்கூட்டு கோபுர வீதியில் சுகமாக  அசந்து தூங்கி கொண்டிருந்தார் ஒரு படித்த பெரிய மனிதர்.
 சகல விதமான வழிப்போக்கர்களுக்கும் இது ஒரு புதிய காட்சி அல்ல.அவரின் கதையும் ஓரளவு எல்லோரும் அறிந்ததுதான்.
அந்த படித்த பெரிய மனிதன் சிவசுப்ரமணியம் இந்த இடத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு பெரிய காரணம் இருப்பது என்னவோ உணமைதான்.
இவரை பற்றி மக்கள் பேசிக்கொள்வது இதுதான்,
இவர்  இளமையில் சாதியில் குறைந்த பெண்ணை காதலித்தார். இதை கண்டு பிடித்த பெற்றோர் தந்திரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டார்கள். இவரும் படிப்பு முடித்து வந்து இந்த பெண்ணை சத்தம் போடாமல் கூட்டிக்கொண்டு ஓடி விடலாம் என எண்ணிக்கொண்டே நாட்டை விட்டு புறப்பட்டார்.
சாதி தடிப்புடன் குள்ளநரித்தனமும் கொண்ட இவரது குடும்பத்தினர் இவர் நம்பும்படி இவரது நண்பர் மூலம் இவரது காதலிக்கு வேறு கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இரண்டு குழந்தைகள் வேறு உள்ளதாகவும் கதை அளந்தார்கள்.இந்த அப்பாவி மனிதன் அதை நம்பி மனம் உடைந்து குடிக்க தொடங்கினார். பின்பு என்ன நிறுத்த முடியாமல் அல்ல அல்ல நிறுத்தத்த விருப்பம் இல்லாமல் குடியே கதியானர்,

இவர்  குள்ள நரி பெற்றோர் கொழும்பிலேயே சொந்தத்தில் ஒரு டொக்டர் பெண்ணை பேசி கல்யாணமும் செய்து வைத்தனர்.
இழந்து போன காதலை மறக்க முயற்சித்து ஒரு மாதிரி புது மனைவியுடன் வாழ்வை தொடங்கினார்.
ஒருவருடம் உருண்டோடி விட்டது. யாழ்ப்பாணம் வரவே பிடிக்கவில்லை.
ஒரு நாள் தவிர்க்கவே முடியாத படி ஒரு உறவினரின் மரண செய்தி அவரை ஊருக்கு அழைத்தது.
அதிகாலை நேரம் மனதில் தாங்க முடியாத சோகம் எப்படியும் கலாவை ஒருதரம் பார்த்துவிட வேண்டும் என்று மனம் படபடத்தது. மெதுவாக அவள் குடிசை இருந்த கிராமத்தை நோக்கி தயங்கி தயங்கி நடந்தார். மனதில் என்னேவேன்றே சொல்ல முடியாத சோகம். அவள் எப்படி கல்யாணத்திற்கு சம்மதித்தாள்? ம்ம்ம் என்ன செய்வது குடும்பத்தின் நிர்பந்தம் அவள் பாவம். இப்படி என்னென்னெமோ நினைத்து கொண்டு நடக்கையில் ஒரு மின்னல்...
ரஞ்சிதம் நடந்து நடந்து வந்துகொண்டிருந்தாள்.
மெலிந்து இருந்தாள் முகத்தில் எந்த விதமான ஒளியும் இல்லைரஞ்சிதம்... தட்டுதடுமாறி குரல் வந்தது.
ரஞ்சிதம் கூர்ந்து பார்த்தாள் பின் என்ன நினைத்தாலோ விறுவிறு என்று நடந்து போனாள்...மீண்டும் என்ன நினைத்தாளோ திரும்பி பார்த்தாள்.. ஓரமாக எச்சிலை துப்பி விட்டு வேகமான சென்று விடடாள்.
முன்பு வழமையாக செல்லும் கள்ளு கொட்டிலுக்கு நுழைந்தார். மனம் சரியில்லை யாரிடமாவது ரஞ்சித்தின் விபரங்களை கேட்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
கேட்காமலேயே இருந்திருக்கலாம். விதி விளையாடிய கதையை தெரியும் நேரம் வந்து விட்டது.
ரஞ்சிதத்திற்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி வேறு கல்யாணம் செய்து வைத்துவிட்ட நயவஞ்சகம் வெளிச்சமாகியது.
அரைக்குடி முக்கால் குடி என்று இருந்த பாரிஸ்டரின் வாழ்க்கை முழு குடியென்று ஆனது இப்படித்தான். முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டது  
பாரிஸ்டரின் மனைவி பார்வதியும் ஒரு பாவப்பட்ட ஜென்மம்தான் நாள்முழுதும் வேலைக்கு பொய் விட்டு குடிகார புருஷனை தேடி பிடித்து காரில் போட்டு கொண்டு வீட்டுக்கு செல்வது அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது

வழமையாக அவர் தூங்கி வழியும் மக்கன் கடை வாசலில் அன்று சற்று மோசமான நிலையில் அவர் படுத்திருக்கும் நிலையை அந்தக்கடையின் வேலை செய்யும் சிறுமி உமா பார்த்து கத்தினாள்.
உங்களுக்கு வெக்கமாய் இல்லையா? நான்  அம்மாவிட்ட சொல்ல போறன்.

ஏய் ஏய் அப்படி செய்து போடாத அவள் சும்மாவே சாமியாட்டம் ஆடுவாள் வேறு வினையே வேண்டாம்,
உமா நான் காரிலே போய் இருக்கப்போறன் அம்மாவிட்டை போய் திறப்பை வாங்கிவா என்று விட்டு மெதுவாக நடக்கதொடங்கினார்.

அய்யா நீங்கள் ஏன் அம்மாவோடை எப்பவும் கோபமாக பேசுறநீங்கள் ?

 இந்த கேள்வியை மட்டுமல்ல இது போன்ற கேள்விகள் பலவும் அவரது வாழ்க்கை முழுவதும் பலராலும் கேட்கப்படுவதும் அவர் சரியாக பதில் சொல்ல முடியாமல் மெண்டு முழுங்குவதும் பழங்கதைதான்.
ஆனால் இன்று அவர் ஏனோ யாரவது கேட்கமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்தவர்போல தனது முடிவைத்த ரகசியங்களை கொட்டத்தொடங்கினார்.
உமா உனக்கு தெரியுமா எனக்கு ஒரு சிநேகிதி இருக்கிறாள்.
அவளை தான் நான் கல்யாணம் செய்ய  இருந்தன் .. அவளை கண்டு முப்பது வருஷமாச்சு .. 
 அவளையும் நான் இன்னும் காணவில்லை அவளை மாதிரி ஒருத்தியையும் கூட நான் இன்னும் காணவில்லை .

முதல்ல அவளிண்ட பெறுமதி  எனக்கு தெரியவில்லை மனசுக்குள்ள நினைச்சதை சொல்ல பயம் . ஒரு நாள் அவள்தான் முதல்ல விருப்பத்தை சொன்னாள் . உண்மையிலேயே அவள் தைரிய சாலிதான் .
அவளிண்ட இடத்தில் இருக்கிற ஒரு பொம்பிளைக்கும் அந்த தைரியம் வராது .
எங்கட வீடு சதி சனம் எல்லாம் பூதம் போல என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது .ஆனால்  அவளை பாக்க பாக்க தைரியம் எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை?
 எத்தனை வருஷமேன்டாலும் நான் வரும் வரை காத்திருப்பதாக சொன்னாள் ,
அவரின் கண்கள் வெறித்து பார்த்தபடி கனவில் மூழ்கியது..
நேரம் போக போக பொறுமையிழந்த உமா , பிறகென்ன நடந்தது? ஏன்  அந்த அக்காவை கட்டவில்லை ?
உமாவின் கேள்வியில் இருந்த தர்மாவேசம் சற்று காரமாக இருந்தது.

அய்யாவின் கண்கள் அடிபட்ட பறவை போல் துடித்தது .
எல்லாம் தலைவிதி...  இல்லை இல்லை எல்லாம் என் முட்டாள்தனம், சாதிசனம் அவிட்டு விட்ட பொய்யை அப்படியே நம்பி குடியில் எல்லாத்தையும்...  நான் ஒரு விசரன்.
உமாவுக்கு மேலும் பல கேள்விகள் கேட்க வேண்டும் போல் இருந்தது ஆனால்  திடீரென  அய்யாவின் தர்மபத்தினி   பார்வதி  வந்துவிட்டார்.

ஏன் சொல்ல மாட்டீர் ? நான் ஒருத்தி வசமாக மாட்டிகொண்டுவிட்டன் 
உமக்கென்ன  குறை நான்தான் முழு விசரி.
காரில் வீடு வந்து சேரும்வரை எதோ உளறிக்கொண்டே வந்தார் ..நான் உனக்கு ஒரு சந்தோஷத்தையும் தரவில்லை ஐ ஆம் சொறி ..

பேசாம டிராமா போடாமல் வாரும் உம்மடை டியலோக்குகள் எனக்கு புளித்து கன காலமாகிவிட்டது .

ம்ம்ம் நீ பாவம் உனக்கு நான் ஒரு ,நன்மையையும் செய்யவில்லை.
இந்த மனிசனுக்கு என்னப்பா வந்தது ஒரே கூத்து கதை என்று வியப்பாக இருந்தது..ஒரு பக்கம் கோபமும் வந்தது. 

பார்வதியை  பொறுத்தவரை கோவிக்கவும் கூட ஒரு தராதரம் பார்க்கவேண்டும் வெறும் ஒரு புருஷன் என்ற தகுதி போதாது என்ற முடிவுக்கு வந்து வெகு நாளாகிவிட்டது .

தடிப்பு பிடிச்ச சனங்களின்  பித்தாலட்டத்தில் ஒரு விசித்திர மனிதனுக்கு  மனைவி என்ற விபத்தை சந்தித்து விட்டவள் வேறு என்னதான் என்ன முடியும் ?
 அடுத்த நாள் வழமைக்கு மாறாக சற்று அதிகமாகவே தன்னை அலங்கரித்துக்கொண்டு  காரில் ஏறினார் .
பார்வதிக்கும்  கூட எதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது .
அவரை பார்க்க பாவமாகவும் இருந்தது  ஆனால்  எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்ட தயங்கினாள்.
இந்த மனிசனை நம்ப முடியாது பாவம் எண்டு மென்மையாக பேசி இடம் குடுத்தால்  குடிக்க காசு கேட்கும்.
அவரை  கலாதேவி  புத்தக சாலை க்கு அருகில் காரில் இருந்து இறக்கி விட்டாள்.
இது வழமையாக நடக்கும்  ஒரு செயல்தான் ஆனால் என்னவோ அவளுக்கு இன்று மனம் சரியில்லை அவரில் எதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

எவ்வளவு அழகான கம்பீரமான மனிசன்? பெரிய அறிவாளி படிப்பாளி  ம்ம்ம் என்ன இருந்தென்ன குடியில் கூத்தடிக்கும் மனிசனை எப்படித்தான் கணக்கிலே சேர்க்கமுடியும் என்று ஏதோதோ யோசித்தாள்.
மனம் கேட்கவில்லை காரை விட்டு அவர் மறையும் முன்பு திரும்பி பார்த்தால்  நல்ல மனிசன் என்று தனக்கு சொல்லிகொண்டாள் .

வழக்கத்திற்கு மாறாக அருகில் இருந்த பெரிய நூலகத்தை நோக்கி நடந்தார் சிவா  இந்த நூலகத்திற்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு  உண்டு.
தனது விலைப்படாத புத்தகங்களை இங்குதான் வருவோர் போவோருக்கு  அற்ப சொற்ப விலைகளில் தானம் செய்வது,

நேற்றிலிருந்து உமாவுக்கு சரியாக நித்திரை வரவில்லை அய்யாவின் கதையின் மீதியை கேட்கும் ஆவலில் இன்று வேகமாக அய்யாவை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தாள்/

அய்யா என்று சற்று உரக்கவே  அழைத்தாள் .

பதில் பேசாமல் உமாவை  நோக்கி கையை அசைத்தார் ,
உமா உனக்கொரு ரகசியம் சொல்லப்போறன் ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது என்றவண்ணம்  கையில் எதோ ஒன்றை வைத்திருந்தார் ,
அது ஒரு சிறு பழைய போட்டோ ஒன்று அதில் ஒரு சிறு பெண் முறைத்தபடி இருந்தாள் .
ஓஹோ இவதான் அந்த அக்காவோ?
உமா இதுதான் ரஞ்சிதம்  இவளை பார்த்தால் இதை கையிலே குடு. அவளுக்கு எல்லாம்  விளங்கும்.
ஒருவேளை நான் செத்துபோட்டால் அவளை எப்படியாவது தேடி கண்டு பிடித்து இதை அவளிட்டை கொடுக்க வேணும் .

உங்களுக்கு இண்டைக்கு என்ன பிடிச்சது?

அதை சட்டை செய்யாமல் மீண்டும் உமாவை கேட்டார்.. நான் சொன்னதை செய்வியா?
ஐயோ இந்த ஆளுக்கு இண்டைக்கு எதோ பிடிச்சிருக்கு..
சரி சரி அந்த அக்காவை எப்படியாவது தேடி கண்டு பிடிச்சு இதை குடுக்கிறன்.

இப்ப அப்பு தேடப்போகுது நான் போகப்போறன் பிறகு வாறன் என்று கத்திக்கொண்டு உமா ஓடிவிட்டாள்.
ஆறு மணி யாகியும் சிவாவை  காணாமல்  காரில் மெதுவாக  தெரு தெருவாக ஊர்ந்து செல்கையில் ஒரு இடத்தில் பாலா நன்றாக குடுத்து விட்டு ஒன்றுமே தெரியாத குழந்தை போன்று உறங்கி கொண்டிருந்தார்.

இந்த கண்றாவி எல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று மனதுக்குள் நொந்த வண்ணம் அருகே சென்று கையை பிடித்தாள்.

ஆழமான உறக்கம் ஒன்றுமே தெரியவில்லை என்று திட்டிகொண்டல்வல் ஒரு கணம் நடுங்கினாள்.

கை குளிர்ந்து சில்லென்று இருந்தது
ஒ அய்யா போய் விட்டார் .

அப்படியே அருகில் உள்ள மரக்குற்றியில் உட்கார்ந்தாள்.
தரை அப்படியே தன்னை விட்டு செல்வதாக தெரிந்தது. உண்மையில் இந்த நாளை அவள் ஓரளவு எதிர்பார்த்தபடிதான் இருந்தாள், இருந்தாலும் தாங்கவே முடியவில்லை 

தன்னை சுற்றி நடப்பதை எதோ தொடர்பே இல்லாதவள் போன்று   பார்த்துகொண்டு இருந்தாள்.
எங்கிருந்தோ வந்த போலீசார் ஏதோதோ கேள்விகள் கேட்டனர் தெருவில் செல்லும் பலரும் வாகனங்களை நிறுத்தி விசாரித்த வண்ணம் மெதுவாக சென்றனர்.
 உற்று கவனித்தாள் பலரும் உண்மையாகவே கவலைப்படுவது தெரிந்தது.

அதிலும் சிலர் கண்ணீர்விட்டு அழுவதும் ஒன்றிரண்டு   பேர்வழிகள் அய்யாவை பற்றி ஏதோதோ சொல்லி சொல்லி அழுவதும் முகத்தை பொத்திக்கொண்டு  அழுவதும் பார்வதிக்கு  அதிசயமாக இருந்தது .

அதிலும் சின்னப்பெண் உமா ஒ வென்று அழுகொண்டே ஓடிவந்த காட்சி அவளை என்னவோ செய்தது .
உமா பார்வதியை  கட்டிபிடித்துகொண்டு கதறினாள்.

பார்வதிக்கு  ஒன்றும் விளங்கவில்லை இவர்கள் எல்லாம் நடிக்கவில்லை என்பது புரிந்தது.
ஏன் அவர் மீது இந்த அளவு பாசமாக இருக்கிறார்கள்?

நிச்சயமாக இந்த மனிசன் இவர்களுக்கு ஒரு சதமும்  கொடுத்து இருக்காது

சில வேளை குடித்து விட்டு நிறைய  தொந்தரவும் குடுத்திருக்கும் .

ஏன் இவர்கள் அழுகிறார்கள்? உண்மையில் அழவேண்டியது நான்தான். அதுதான் வாழ்க்கை முழுதும் அழுதுவிட்டேனே.
என்னதான் மாத்தி மாத்தி யோசித்தாலும்  பதில் ஒன்றும் காண முடியவில்லை
மீண்டும் மீண்டும் அழுது ஒப்பாரி வைக்கும் அந்த சாதாரண மக்களின்  கவலை தோய்ந்த முகங்கள் ஏதோ  ஒன்றை அவளுக்கு சொல்லுவது போல் தோன்றியது .
இந்த மனிசனுக்கு எப்படி இவ்வளவு பாசமுள்ள கூட்டத்தை சம்பாதிக்க முடிந்தது ?
ஒரு வேளை  நான் தான் பிழையோ ?
தரையில் நிற்க முடியவில்லை 
தன்னை ஆசுவாசப்படுத்த வழி தேடினாள். radhamala.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக