வெள்ளி, 26 ஜூன், 2015

40வது ஆண்டு காணும் இந்திராவின் எமெர்ஜென்சி! எதிர்த்த ஒரே முதல்வர் கலைஞர் ! ஒரே மாநிலம் தமிழ்நாடு !

எமர்ஜென்சி காலமும் கலைஞரின் சாதுர்யமும்இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட 40வது ஆண்டு இது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை மீறி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள்  எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையை நாடு முழுவதும் அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
அதே ஆண்டு அக்டோபர் 2ல் பெருந்தலைவர் மரணமடைந்தார். இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எமர்ஜென்சி காலத்தைக் கூறலாம். அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, இந்த நெருக்கடி நிலையை எதிர்த்தது. 

இதற்காக கடற்கரையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக 1976ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்தது.  அன்றிரவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். (தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர்) 

பிப்ரவரி 1ந் தேதி கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படை, மு.க.ஸ்டாலினை கைது செய்தது. திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் மனைவி கண்கலங்கி நிற்க, ‘மாமியார் வீட்டு’க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, நீலநாராயணன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தி.க. தலைவர் கி.வீரமணியும் அதே சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். வைகோ உள்ளிட்ட தி.மு.கவினர் பலரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.இரவு நேரத்தில் லாக்கப்பைத் திறக்கக்கூடாது என்பது சிறை விதி. அதை மீறி சென்னை மத்திய சிறையின் லாக்கப் கதவுகள் திறக்கப்பட்டன. காவலர்கள் தடியுடன் சென்று மிசா சிறைவாசிகளைக் கடுமையாகத் தாக்கினர். மு.க.ஸ்டாலின் மீதுதான் கொலைவெறியுடன் தாக்குதல் நடந்தது. அவரைப் பாதுகாப்பதற்காக குறுக்கிட்ட சிட்டிபாபு கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பின்னர் மரணமடைந்தார். தாக்குதலில் ஆற்காடு வீராசாமியின் காது திறனிழந்தது. முரசொலி மாறனின் முதுகுப்பகுதியில் கடுமையான தாக்குதல். கி.வீரமணியையும் பலமாகத் தாக்கினர். இவர்களைப் போலவே மதுரை சிறையில் தாக்குதலுக்குள்ளான தி.மு.க பிரமுகர் சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணமடைந்தார்.தமிழகம் முழுவதும் கைதானவர்களை எந்த சிறையில் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம்கூட வெளியிடப்படவில்லை. தி.மு.கவினரைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என அறிவித்து, அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்தபடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார் கலைஞர். (அவற்றை அச்சிடவும் முடியாதபடி நெருக்கடி நிலை இருந்தது- கையால் எழுதி, சைக்ளோஸ்டைல் எனும் முறையில் அச்சில் உருட்டி நகல் எடுக்கவேண்டும். மு.க.அழகிரியும் கோபாலபுரத்தில் இருந்த தி.மு.கவினரும் இந்த வேலையை செய்திருந்தனர்). கலைஞரின் இந்தப் போராட்டத்திற்குப் பிறகே சிறையில் உள்ள தி.மு.கவினரைக் குடும்பத்தினர் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. ரத்த உறவுகள் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் கலைஞரால் ஸ்டாலினை மட்டுமே பார்க்க முடிந்தது.கலைஞரின் வீடு, முரசொலி அலுவலகம் என அனைத்தும் சோதனைக்குள்ளாயின. அவரது குடும்பத்து உறுப்பினர்களையும்கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. கலைஞரைப் பார்ப்பதற்கு வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வரும் தொண்டர்களையும் போலீசார் மிரட்டத் தொடங்கினர். அன்றைய தி.மு.க தொண்டர்கள் இதற்கெல்லாம் மிரண்டவர்களா என்ன? திருப்பதிக்கும் திருத்தணிக்கும் யாத்திரை செல்வது போல வாகனம் பிடித்துக்கொண்டு, குடும்பத்து உறுப்பினர்கள் சிலரை மொட்டைப் போடவும் வைத்து, சந்தனம் தடவிய மொட்டைத் தலையுடன் வாகனத்தை சென்னை கோபாலபுரத்திற்குள் விட்டு கலைஞரைத் ‘தரிசித்து’விட்டுத்தான் போவார்கள்.


பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டுமென்றால் அது சென்சார் செய்யப்பட்டபிறகே அனுமதிக்கப்படும். சென்சார் செய்யும் பொறுப்பில் இருந்தவர்களோ ராஜாவை (இந்திராணியை) மிஞ்சிய ராஜவிசுவாசிகள். ஆட்சிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல.. பெருந்தலைவர் காமராஜர் என்று எழுதினால் பெருந்தலைவரை கட் செய்துவிடுவார்கள். அறிஞர் அண்ணா என்று எழுதினால் அறிஞரை கட் செய்வார்கள். தந்தை பெரியார் என்ற பெயரை எழுதவே முடியாது. இந்திரா அரசுக்கு எதிராக இருந்த முரசொலி, விடுதலை, துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிக்குள்ளாயின.

எதையும் எழுத முடியவில்லையே என கடுப்பான கலைஞர் 1976ஆம் ஆணடு மார்ச் 2ந் தேதி நாளேட்டின் முதல் பக்கத்தில் இப்படித் தலைப்பிட்டார். “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. இரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலெட்சுமி ஆராய்ச்சி”
எங்கே வெட்டு பார்ப்போம் என்று சென்சார் அதிகாரிக்கு சவால் விடுவது போன்ற தலைப்பு இது.  இதைவிட முக்கியமான ஒன்று உண்டு.

பிப்ரவரி 3ந் தேதி அண்ணாவின் நினைவு நாள். மறுநாள் முரசொலியில், ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என்ற தலைப்புடன் யார், யார் வரவில்லை என்பது வெளியாகியது. பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களின் பட்டியல்தான் வெளிவரும். வராதவர்களின் பட்டியலை வெளியிட என்ன அவசியம்? அங்கேதான் இருக்கிறது கலைஞரின் சாதுர்யம்.

எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைதாகி சிறைப்பட்ட தி.மு.கவினர் யார் யார் என்பது சக கட்சிக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது. அதனை வெளிப்படையாக வெளியிடவும் முடியாது. அதனால்தான் சிறைப்பட்டிருந்தவர்களின் பெயரை ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்டார் இரண்டு, மூன்று நாட்கள் இந்தப் பட்டியல் வெளியான பிறகே சென்சார் அதிகாரிகள் திடுமென விழித்துப் பார்த்தனர். அதற்குள் கலைஞரின் பணி கச்சிதமாக நிறைவேறியிருந்தது.

ஓராண்டு காலத்திற்குப் பின், எமர்ஜென்சியை ரத்து செய்தார் இந்திராகாந்தி அம்மையார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அனைவரும் தியாகத் தழும்புகளுடன் விடுதலையாயினர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக