வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஆந்திர செம்மர மாபியாகளின் ஏவல் நாய்களாகிவிட்ட வனத்துறை ! ராமச்சந்திர ரெட்டி, கிஷோர் குமார் ரெட்டி போன்றவரகளை அல்லவா....

இருபது அப்பாவி உயிர்கள் நர வேட்டையாடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படுபயங்கரமான கடத்தல்காரர்கள் என்று சித்தரிக்கின்றது ஆந்திர போலீசு. ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே! பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தங்களை தாக்க முனைந்ததாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர்கள் இறந்ததாகவும் கதையளக்கிறது ஆந்திர போலீசு. என்கவுண்டருக்காக இந்திய போலீசு கூறும் அரதப்பழசான பச்சைப் பொய் இது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆய்வின் படி ஒரே ஒரு கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை. அதாவது ஆந்திரப் போலீசின் கதையில் வரும் பயங்கர ஆயுதம், ஒரே ஒரு கத்தி மட்டுமே!
சுட்டுக் கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ருயா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகளோ நடந்தது அப்பட்டமான போலி மோதல் கொலைகள் என்று நமக்கு உணர்த்துகின்றது. கொல்லப்பட்ட உடல்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களைப் பரிசோதித்த போது, அவை மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் ஏற்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தோட்டாக்கள் மிகச் சரியாக உயிராதாரமான பகுதிகளான மார்பு, கழுத்து, தலை போன்ற உறுப்புகளைத் தாக்கியுள்ளன. குண்டு காயம் பட்ட பல தொழிலாளர்களின் உடல்கள் அழுகிக் காணப்பட்டதாகவும், அவர்கள் திங்கட்கிழமையே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

செம்மரம் படுகொலை
சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் வெட்டுக்காயங்களும் அந்த உடல்களில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இவை தவிர, சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் வெட்டுக்காயங்களும் அந்த உடல்களில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவ்வுடல்களை சம்பவ இடத்தில் நேரில் கண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களும், தீயினால் உடல்கள் பொசுக்கப்பட்டதையும் பல உடல்களில் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்ததையும், இறந்தவர்களின் ஏழு பேரின் முகம் மற்றும் கழுத்தின் பின்புறமாக துப்பாக்கிச் சூட்டின் அடையாளம் இருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
தற்போது ஆறு உடல்களை சென்னை உயர்நீதிமன்ற தடையுத்தரவினால் இறுதிச் சடங்கு செய்யாமல் வைத்துள்ளனர். ஒருவேளை மறு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு, நடுநிலையான மருத்துவர்களால் மீண்டும் ஆய்வு செய்யப்படும் போது மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்யப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்.
நடந்தது கொடூரமான கொலைகள் தான் என்பதற்கு வேறு சில சாட்சியங்களும் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் கடந்த 6-ம் தேதி திருத்தணி சென்று அங்கிருந்து சித்தூருக்கு நகரி வழியாக பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது நகரி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று பேருந்தில் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளது ஆந்திர அதிரடிப்படை போலீசு. இந்தச் சோதனையில் ஏழு தமிழர்களை சந்தேகத்தின் பேரால் கைது செய்வதாக கூறி அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கைதாகாமல் தப்பிய எட்டாவது நபரின் பெயர் சேகர். சேகர் கைதான ஏழு பேருடன் அமராமல், பெண்கள் இருக்கையில் தனியே அமர்ந்திருந்ததாலேயே மயிரிழையில் தப்பியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர்கள்
படுகொலை செய்யப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)
நகரியில் கைது செய்த இவர்களை உடனடியாக வேறு இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே வேறு இடங்களில் பிடிபட்ட தொழிலாளர்களோடு இவர்களையும் கொடூரமாக வதைத்த பின் சேஷாச்சலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கைகளைப் பின்னால் கட்டி அருகிலிருந்தே சுட்டுக் கொன்றுள்ளனர்.
இறந்த உடல்களுக்கு அக்கம் பக்கமாக தயாராக கொண்டு வந்த சில செம்மரக் கட்டைகளை பரப்பிப் போட்டு என்கவுண்டர் கதையை எழுதியுள்ளது ஆந்திர போலீசு.
ஆனால், உடல்களின் அருகில் போடப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள் வேறு சந்தர்ப்பங்களில் பிடிபட்டவை என்றும், அவற்றின் மேல் எழுதப்பட்டிருந்த பழைய வழக்கு எண்கள் அழிக்கப்பட்ட அடையாளங்கள் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், கொலைகள் நடந்த இடத்தைச் சுற்றிய ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் செம்மரங்கள் இல்லை என்பதும், உடல்களுக்கு அருகே கிடந்த செம்மரங்கள் காய்ந்து போன பழைய மரங்கள் என்பதும் ஊடகங்களில் வரும் செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.
நடந்தது தெளிவாக திட்டமிடப்பட்ட போலி மோதல் படுகொலை. சம்பவம் நடந்து இரண்டே நாட்களில் வெளியாகியுள்ள தடயங்கள் மற்றும் சாட்சியங்களே இதை மெய்ப்பிப்பதாக உள்ளது. இதற்கு மேல் நடக்கவுள்ள விசாரணைகளில் மேலும் விவரங்கள் வெளிப்படக்கூடும் அல்லது இருக்கும் விவரங்கள் அழிக்கப்படவும் கூடும். நினைக்கவே நெஞ்சு பதறும் படுபாதகச் செயலை வனச்செல்வத்தைக் காப்பாற்றும் நோக்கில் நடந்ததாகச் சித்தரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
செம்மரக் கடத்தல்
முதலாளித்துவ ஊடகங்கள் இப்போது நடந்திருக்கும் போலி மோதல் கொலைகளை ஆந்திர போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிப்பது போன்ற வார்த்தைகளில் நியாயப்படுத்துகின்றன.
செம்மரக் கடத்தலைத் தடுக்க தமது தரப்பிலிருந்து கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகாவும், தமது மாநில போலீசு கடத்தலைத் தடுக்க கண் துஞ்சாமல் கடமையாற்றுவதாகவும் ஆந்திர மாநில ஆளும் வர்க்கம் ஒரு சித்திரத்தை தோற்றுவித்து வருகிறது. தங்கள் மாநில எல்லையை ஒட்டிய தமிழக மலைக்கிராமங்களில் இருந்தே மரக் கடத்தல் பேர்வழிகள் ஊடுருவுவதாகவும், அதைத் தடுக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை ஏற்படுத்தி அக்கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவிக்கிறது.
‘இதையும் தாண்டி தமது மாநிலத்திற்கும் பணத்தாசை பிடித்த தமிழ்க் கடத்தல்காரர்கள் புகுந்து அரியவகை வனச் செல்வமான செம்மரங்களை கடத்திச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள், பல முறை ஆந்திர வனக் காவலர்களை தமிழ்க் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்றும் ஆந்திர அரசால் சொல்லப்படுகிறது. முதலாளித்துவ ஊடகங்கள் இப்போது நடந்திருக்கும் போலி மோதல் கொலைகளை ஆந்திர போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிப்பது போன்ற வார்த்தைகளில் நியாயப்படுத்துகின்றன.
மேற்படி கதைகளில் தொக்கி நிற்கும் கோணம் செம்மரக் கடத்தல் என்பது ஆந்திரப் போலீசு மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் நடக்கும் ஒரு சம்பவம் என்பதாகும்.
இது உண்மையா?
செம்மரக் கடத்தல்
செம்மரக்கட்டைகள் சட்டைப் பைக்குள் ஒளித்து வைத்து கடத்தி விடக் கூடிய சமாச்சாரம் இல்லை.
ஆந்திரக் காடுகள் அரசால் அணுகப்பட முடியாத அடர் பிரதேசங்கள் இல்லை. ஆந்திராவில் செயல்பட்டு வந்த மக்கள் யுத்த குழுவை (தற்போது மாவோயிஸ்ட்டுகள்) ஒடுக்கும் நோக்கில் ஆந்திராவின் காடுகள் மற்றும் மலைப் பிரதேசங்கள் பற்றி மிகப் பருண்மையான ஆய்வுகளை ஆந்திர மாநில போலீசும் வனத்துறையும் எண்பதுகளிலேயே செய்து முடித்து விட்டனர். இப்பகுதிகளைப் பற்றிய புவியியல் அறிவு மாத்திரமின்றி, மிகப் பரந்துபட்ட அளவிலான உள்ளூர் உளவு வலைப்பின்னலும் ஆந்திராவின் அதிகார வர்க்கத்துக்கு உண்டு.
செம்மரக்கட்டைகள் சட்டைப் பைக்குள் ஒளித்து வைத்து கடத்தி விடக் கூடிய சமாச்சாரம் இல்லை. காட்டுக்குள் வெட்டப்படும் செம்மரங்களை துண்டுகளாக்கித் தலைச்சுமையாகவோ, மாட்டு வண்டிகள் மூலமாகவோ டிரக்குகளுக்குக் கொண்டு வர வேண்டும். அந்த டிரக்குகளை வனத்துறை, சுங்கத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் செக் போஸ்டுகளைத் தாண்டி வெளியே கொண்டு வர வேண்டும்.
செம்மரம் அறைக்கலன்கள்
மருந்து பொருட்கள், அறைக்கலன்கள், இசைக் கருவிகள் செய்ய செம்மரம் சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது .
செம்மரக்கட்டைகளுக்கு சீனாவின் கள்ளச் சந்தையில் நல்ல விலையுண்டு என்பதால், அவை சென்னைத் துறைமுகத்தின் மூலமோ, மும்பை துறைமுகத்தின் மூலமாகவோ அனுப்புகிறார்கள். அல்லது கோடியக்கரை வழியாக இலங்கைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து சீனாவுக்கு அனுப்புகிறார்கள். இந்த வழித்தடங்கள் நெடூக போலீசு, கலால்துறை, சுங்கத்துறை, துறைமுகம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏராளமான அரசுத் துறைகளின் கண்காணிப்பு உண்டு.
கடந்த பதினைந்தாண்டுகளில் கடத்தப்பட்ட மொத்த செம்மரக்கட்டைகளில் பத்தில் ஒரு பங்கைத் தான் கைப்பற்றியிருப்பதாக ஆந்திர அதிகார வர்க்கத்தினர் தெரிவிக்கின்றனர் – அதன் அளவு மட்டுமே 10,000 டன்கள். எனில், 90 சதவீத செம்மரக் கட்டைகள் அரசின் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தப்பட்டனவா?
செம்மரக் கடத்தல் நடக்கும் முறையைப் புரிந்து கொள்வோம்.
செம்மரக் கடத்தல் என்பது நான்கு வெவ்வேறு செயல் அடுக்குகளின் (Operational Layers) ஒத்திசைவோடு நடக்கிறது. இதில் மரத்தை வெட்டுகிறவர்கள் கீழ்மட்ட அடுக்காக வருகிறார்கள். மரத்தைச் சாய்த்து, அதைத் துண்டுகளாக்கி டிரக்குகளுக்கு கொண்டு செல்லும் வேலையை முதல் அடுக்கில் வரும் கூலித் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இந்த டிரக்குகளை அரசின் பல்வேறு செக்போஸ்டுகளைக் கடந்து ஏற்றுமதி செய்பவரின் கையில் ஒப்படைக்கும் வேலை இரண்டாவது அடுக்கு.
செம்மரக் கடத்தல்
செம்மரக் கடத்தல் என்பது நான்கு வெவ்வேறு செயல் அடுக்குகளின் (Operational Layers) ஒத்திசைவோடு நடக்கிறது.
இரண்டாவது அடுக்கில் மூன்று உள்வேலைப் பிரிவினைகள் உள்ளன. முதலில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் டிரக் செல்ல வேண்டிய வழித்தடத்தில் சென்று தோதான அதிகாரிகள் தான் செக் போஸ்டில் இருக்கின்றனரா என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து, குறைந்த எடையோடு ஒரு லோடு முன்னே செல்கிறது. இவ்வாறு குறைந்த செல்லும் லோடை சிலவேளைகளில் கணக்குக் காட்டுவதற்காக அதிகாரிகள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற வண்டிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கிறார்கள்.
டிரக்குகளின் மூலம் மூன்றாவது அடுக்காக செம்மரக் கட்டைகள் ஏற்றுமதி செய்பவர்களிடம் வந்து சேர்கிறது. நான்காவதாக, இம்மூன்று அடுக்குகளையும் மேலிருந்து இயக்கும் வேலையை செம்மர மாஃபியா கும்பல் கட்டுப்படுத்துகிறது. இந்த மாஃபியா கும்பலின் தலைமையில் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த கம்மா மற்றும் ரெட்டி சாதியைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.
செம்மரக் கடத்தல்
இந்தக் குற்றக் கும்பல்கள், தமக்குள் தெளிவான வேலைப் பிரிவினைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலைப் போல் செயல்படும் இந்தக் குற்றக் கும்பல்கள், தமக்குள் தெளிவான வேலைப் பிரிவினைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றன. தமிழகத்தின் மலைகிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசிப் பழங்குடியினரை கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரும் பொறுப்பை அதற்கான ஏஜெண்டுகள் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏஜெண்டுகளுக்கு தமிழகப் பகுதியில் உள்ள உள்ளூர் அரசியல் ரவுடிகளோடு நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இத்தகைய மரங்களை வெட்டும் தேர்ச்சியும், அனுபவமும் தமிழக தொழிலாளிகளுக்கு அதிகமுள்ளதும் மாற்று வேலை வாழ்க்கை இல்லையென்பதும் இம்மக்கள் இத்தொழிலை துணிந்து மேற்கொள்ள முக்கிய காரணமாகும்.
தமிழகத்தின் வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் சேலம் சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள பகுதிகளைச் சேந்த சர்வ கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர்த் தலைவர்கள் தத்தமது பகுதிகளில் இருந்து கூலித் தொழிலாளர்களை அமர்த்திக் கொடுக்கிறார்கள். அதற்கான கமிஷனாக பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலின் அடுத்த வேலைப் பிரிவு வனத்துறை, காவல்துறை, சுங்கத்துறை, மற்றும் துறைமுக அதிகாரிகளை விலைக்கு வாங்கி அதிகார மட்டத்தில் தமக்குத் தோதானவர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அடுத்து மாஃபியா கும்பலின் தலைவனுக்கு நெருக்கமான குழுவொன்று மொத்த வேலைகளையும் மேலிருந்து வழிகாட்டி இயக்குவது மற்றும் நிதி விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது.
சேஷாச்சலம் வனப்பகுதி
2013 மற்றும் 2014 காலப்பகுதியில் இதே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்களை ஒடுக்குவது என்ற பேரில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 11 கூலித் தொழிலாளிகள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர்.
செம்மரக் கடத்தல் கும்பலின் செயல்பாட்டு முறைகள் (Modus Operandi) பற்றி பட்டியலிடப்படாத பழங்குடியினருக்கான தேசிய மனித உரிமை இயக்கத்தின் (National Campaign for DNT Human Rights (NCDNTHR) ஏற்பாட்டில் 2014-ல் வெளியான உண்மையறியும் குழுவொன்றின் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
2013 மற்றும் 2014 காலப்பகுதியில் இதே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்காரர்களை ஒடுக்குவது என்ற பேரில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 11 கூலித் தொழிலாளிகள் போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 2000 கூலித் தொழிலாளிகள் செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஆந்திரத்தின் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருந்தனர் (இன்றைக்கு இந்த எண்ணிக்கையோடு மேலும் சில நூறு பேர் இணைந்திருக்க கூடும்)
குறிப்பாக 2014 மே, ஜூன் மாதங்களில் மட்டும் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவங்களை ஒட்டி NCDNTHR மேற்படி உண்மை அறியும் குழுவை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்தப் படுகொலைகள்?
சேஷாச்சலம் வனப்பகுதியில் நடக்கும் போலி மோதல் கொலைகளுக்கு அடிப்படை காரணம் என்ன? கடத்தலைக் கட்டுப்படுத்துவது யார் என்பதற்காக மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியே முதன்மையானது.
சேஷாச்சலம் வனப்பகுதி ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, கர்நூல், சித்தூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கி தமிழத்தின் ஜவ்வாது மலை வரை நீள்கிறது. செம்மரங்கள் உலகிலேயே இப்பகுதியில் மட்டுமே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் அரிய வகைக் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
செம்மரப் பொருட்கள்
அரிய வகைக் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படும் செம்மரங்கள்.
செம்மரங்களின் அரிய தன்மையும் குறைவாகக் கிடைப்பதும் சந்தையில் அதன் தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் டன் ஒன்றுக்கு 27 லட்சம் ரூபாய் வரை விலைபோகும் செம்மரம், சீனாச் சந்தையில் 50 – 80 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. 2000-வது ஆண்டில் அருகி வரும் தாவரவியல் பட்டியலில் செம்மரம் இணைக்கப்பட்ட பின், அதன் எல்லாவகை ஏற்றுமதியும் வர்த்தகமும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.
இரண்டாயிரங்களின் துவக்கத்தில் ஆந்திராவின் செல்வாக்கு மிகுந்த ரெட்டி மற்றும் கம்மா ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் தங்கள் முதலீடுகளைக் கொட்டியிருந்தனர். 2007-ல் துவங்கிய பொருளாதார மந்த நிலை ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக பாதித்தது. தங்களது முதலீடுகள் மொத்தமும் நிலத்தில் முடங்கி விட்ட நிலையில், ஆந்திராவின் அரசியல் ரவுடிகளின் பார்வை செம்மரங்களை நோக்கித் திரும்பியது.
ஏற்கனவே தம்மிடம் உள்ள குற்ற கும்பல் வலைப்பின்னலையும் அரசு அதிகார மட்டத்தில் தமக்கிருந்த செல்வாக்கையும் செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இந்தக் கும்பல்களில் பிரதானமானது பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி (peddyreddi Ramachandra Reddy) என்பவர் தலைமையில் இயங்கிய கும்பலாகும். இவருக்கு போட்டியாக கிஷோர் குமார் ரெட்டியின் கும்பல் இயங்கி வந்தது. இவ்விரு மாஃபியா கும்பல்களைத் தவிர வேறு சில குற்ற கும்பல்களும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தன.
கிஷோர் குமார் ரெட்டி, கிரண் குமார் ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி, கிரண் குமார் ரெட்டி (ராமச்சந்திர ரெட்டியின் போட்டி கும்பலை இயக்கும் கிஷோர் குமார் ரெட்டி முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் தம்பி)
தனது கல்லூரி காலத்திலிருந்தே சந்திரபாபு நாயுடுவின் அரசியல் எதிர் முகாமில் செயல்பட்டு வந்த நாயுராமச்சந்திர ரெட்டி தற்போது YSR காங்கிரசின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், முன்பு ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது வனத்துறை அமைச்சராக இருந்தார். ராமச்சந்திர ரெட்டியின் போட்டி கும்பலை இயக்கும் கிஷோர் குமார் ரெட்டி முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் தம்பி.
பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டிக்கு ராயலசீமாவின் மூன்று மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நல்ல செல்வாக்கு உண்டு. ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் ராமச்சந்திர ரெட்டியை தனது தெலுங்கு தேசம் கட்சிக்கு இழுத்துக் கொண்டால் இம்மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்பது சந்திரபாபு நாயுடுவின் கணக்கு. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த போலி மோதல் கொலைகள் இந்தப் பின்புலத்தில் ராமச்சந்திர ரெட்டிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நடத்தப்பட்டன.
இவ்விரு குழுக்கள் தவிர தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வட்டார தளபதிகள் தலைமையின் கீழ் இயங்கும் சிறிய குழுக்களும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தன. இந்த வெவ்வேறு குழுக்களும் அரசு அதிகார மட்டத்தில் தமது செல்வாக்கின் கீழ் இயங்கும் பிரிவினரை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதற்காகவே லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் அரசு எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே மசகு எண்ணை போல் கொட்டப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி
சீமாந்திராவின் தென்பகுதியைச் சேர்ந்த அரசு எந்திரம் செம்மரக் காசில் மூழ்கிக் கிடக்கிறது. தமது போட்டி கும்பல் காட்டில் புகுந்து மரம் வெட்டுவதை அறிந்தால் அதை போலீசு மற்றும் வனத்துறையில் உள்ள தமது விசுவாசிகள் பிரிவை வைத்துத் தடுப்பதும், எதிரணிக்கு விசுவாசமான அதிகாரிகளை விலைக்கு வாங்குவதுமான கழுத்தறுப்புப் போட்டிகள் இரண்டாயிரங்களின் இறுதி ஆண்டுகளில் வேகமெடுத்தது.
ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின் ஆட்சியதிகாரத்தின் துணையை ராமச்சந்திர ரெட்டி இழக்கிறார். கிரண் குமார் ரெட்டி பதவிக்கு வந்ததும் தனது வனத்துறை அமைச்சர் பதவியை இழக்கிறார். எனினும், இருப்பதிலேயே பெரிய மாஃபியா கும்பல் என்ற முறையில் அரசு நிர்வாக எந்திரத்தில் ஏற்கனவே இவருக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளை ஓரளவுக்குப் பராமரித்து வந்துள்ளார்.
கிரண்குமார் ரெட்டியின் தம்பி கிஷோர் குமார், ராமச்சந்திர ரெட்டிக்கு விசுவாசமான அதிகாரிகளை தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு பதிலீடு செய்துள்ளார். இந்த அதிகாரிகளைக் கொண்டு ராமச்சந்திரனின் ’தொழிலை’ கட்டுப்படுத்தி கையகப்படுத்த முனைந்துள்ளார். கடத்தலை தடுக்க வரும் அதிகாரிகளோடு ராமச்சந்திர ரெட்டியின் ஏஜெண்டுகள் பேசி சிலரை விலைக்கு வாங்கியுள்ளனர் – அப்படி படியாதவர்களை மிரட்டியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
இந்த தொழில் போட்டியின் பின்னணியில் தான் இரண்டு வனக்காவலர்கள் 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ராமச்சந்திர ரெட்டிக்காக மரம் அறுக்கச் சென்ற தொழிலாளர்களை தனது விசுவாச போலீசைக் கொண்டு போலி மோதல்களில் கொன்று கணக்குத் தீர்த்துள்ளார் கிஷோர் குமார் ரெட்டி.
தற்போது நடந்துள்ள போலி மோதல் கொலைகளும் இக்கடத்தலை கட்டுப்படுத்துவது எந்த மாஃபியா கும்பல் என்ற போட்டியின் பின்னணியிலேயே நடந்துள்ளது. ஆனால் இந்த குற்றக் கும்பல்களின் போட்டி என்பது கீழ் நிலையில் உள்ள தொழிலாளிகளைக் கொன்று மட்டும் நடந்துள்ளது.
ரெட்டி மற்றும் கம்மா சாதியைச் சேர்ந்த கும்பல்களே ஆந்திராவின் அரசியல் செல்வாக்கைக் கைப்பற்றுவதற்கான கழுத்தறுப்புப் போட்டியில் இறங்கியுள்ளன. பலமான சமூக பொருளாதார செல்வாக்கு மிக்க பழைய நிலபிரபுக்களான இவர்கள், ரியல் எஸ்டேட் முதல் கணிம வளக் கொள்ளை வரை அனைத்து விதமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமக்கென சொந்தமாக ஆயுமேந்திய குற்ற கும்பல்களையும் பராமரித்து வருகின்றனர்.
சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் போலி மோதல் கொலைகள் இந்த மாஃபியா கும்பலின் சீருடையணிந்த பிரிவாக போலீசும் இணைந்து கொண்டதைக் குறிக்கிறது. ஆனால் தேசிய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் வாந்தியெடுத்து வரும் காக்கி நிற மூளை கொண்ட சில மண்டை வீங்கிகளும் நடந்த கொலைகள் காடுகளைக் காப்பாற்ற நடந்தவை என்றே சொல்கின்றனர்.
உண்மையில் காடுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வனப்பாதுகாப்புச் சட்டத்தின் ஷரத்துகளைத் திருத்தி, இந்தியாவெங்கும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையும் மலைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சுரண்டலுக்கும் சூறையாடலுக்குமாக திறந்து விட்டுள்ளவர்களை அல்லவா என்கவுண்டர் செய்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?
எஸ்.கே.பி கருணா
எஸ்.கே.பி கருணா – என்ஜினியரிங் கல்லூரி நடத்தும் கல்வி வியாபாரியான இவர், சீட்டுக்கு ஒரு லட்சம் அடித்தால் முன்னூறு சீட்டுக்கு மூன்று கோடி.
அவர்கள் அனைவரும் பணத்தாசை பிடித்தவர்கள் என்று எழுதுகின்றன பார்ப்பன கொழுப்பேறிய தேசிய ஊடகங்கள். ஜெயமோகனின் புரவலர்களில் ஒருவரும் தி.மு.கவில் இருந்து கொண்டு சுயநிதிக் கல்லூரி தொழிலை நடத்தும் எஸ்.கே.பி கருணா நாளொன்றுக்கு இவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது என்று வியக்கிறார். மேலும் இறந்த இருபது பேர்களுக்கும் நினைவகங்கள் திறப்பார்களா என்று எக்காளத்துடன் கேட்டு ஜெய்ஹிந்தோடு முடிக்கிறார்.
என்ஜினியரிங் கல்லூரி நடத்தும் கல்வி வியாபாரியான இவர், சீட்டுக்கு ஒரு லட்சம் அடித்தால் முன்னூறு சீட்டுக்கு மூன்று கோடி. இத்தகைய ‘சாமர்த்தியம்’ திருவண்ணாமலை விறகு வெட்டும் தொழிலாளிகளுக்கு இருந்தால் அவர்கள் ஏன் ரிஸ்க் எடுத்து விற்கு வெட்ட போக வேண்டும்? கருணா மட்டுமின்றி வேறு சிலரும் சமூக வலைத்தள ’பிரபலங்களும்’ இவ்வாறாக பிதற்றித் திரிகின்றனர்.
போகட்டும்.
வெவ்வேறு ஊடகங்களில் கூலித் தொழிலாளர்களின் ஊதியமாக வெவ்வேறு கணக்குகள் சொல்லப்படுகின்றன. வெட்டப்பட்ட செம்மரத்தின் எடையைக் கணக்கிட்டு ஒரு கிலோவுக்கு 700 ரூபாய் வரை வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இந்தக் காசில் ஜவ்வாது மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினக் கூலித் தொழிலாளிகள் கட்டிய கோட்டைகள் எத்தனை, வாங்கிய ஆடி கார்களின் எண்ணிக்கை என்ன, சுற்றுலா சென்ற நாடுகள் எவ்வளவு என்னவென்றெல்லாம் யாரும் சொல்லவில்லை.
தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்கள்
தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்களான இவர்கள், இந்தக் கொலையை தங்களுக்குப் பிடித்தமான “வடுக வந்தேறி” சட்டகத்துக்குள் அடைக்க முற்படுகின்றனர்.
உண்மையில், விவசாயம் பொய்த்துப் போய் பிழைப்புக்கான பிற வழிவகைகள் அடைபட்டுப் போன நிலையிலேயே தங்கள் உயிர்களை சில ஆயிரங்களுக்காக பணயம் வைக்கத் துணிந்துள்ளனர். இந்த ’வேலையும்’ மாதத்தின் எல்லா நாட்களும் கிடைக்க கூடியதில்லை. ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாஃபியா கும்பல் நடத்தும் ‘ஆப்பரேஷன்களுக்காக’ ஏஜெண்டுகளால் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஒரு முறை சென்று வந்தால் கிடைக்கும் தொகையைக் கொண்டு மறுமுறை செல்லும் வரை பட்டினியைத் தவிர்த்துக் கொள்ள முடியுமே தவிர பணக்காரர்கள் ஆகிவிட முடியாது.
அடுத்து, நடந்துள்ள போலி மோதல் கொலைகளை வைத்து வறண்டு போன தங்கள் அரசியல் வாழ்க்கையை வளமாக்க முடியுமா என்ற கோணத்தில் சில சிந்தாந்த ஓட்டாண்டிகள் சிந்திக்கின்றனர். பெயர் பலகை அமைப்புகளை நடத்தி வரும் தமிழ் தேசிய தேங்காய் மூடி பாகவதர்களான இவர்கள், இந்தக் கொலையை தங்களுக்குப் பிடித்தமான “வடுக வந்தேறி” சட்டகத்துக்குள் அடைக்க முற்படுகின்றனர்.
மேற்படி தேங்காய் மூடி தமிழினவாத கோஷ்டிகள், பரமக்குடியில் தமிழனைக் கொன்றது – நாய்க்கன்கொட்டாயில் குடிசைகளைக் கொளுத்தியது வடுகர்களா தமிழர்களா என்று தமது முந்தைய கச்சேரிகளில் சரியாக விளக்கவில்லை. பழைய பாக்கியே மீதமிருக்கும் போது தற்போதும், ஆந்திர ரெட்டிகள் தமிழகப் பகுதியில் உள்ள தமது தமிழ்ச்சாதி கூட்டாளிகளின் துணையோடு தான் கூலித் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
“வடுகர்கள்” வெட்டிய மரணக்குழிக்குள் தமிழ்ப் பிள்ளைகளைத் தள்ளிவிட்ட மற்ற ஆதிக்க சாதித் தமிழ்ப்பிள்ளைகளை என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ்தேசிய தேங்காய்மூடிகள் விளக்க வேண்டும். வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் மலைப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுர்களில் பலர் செம்மரக் கடத்தல் கும்பல் படியளந்த இரத்தப்பணத்தை ருசித்தவர்கள் தான்.
தேங்காய் மூடி பாகவதர்கள் பெரிதும் பொருட்படுத்தத் தக்கவர்கள் இல்லையென்றாலும், எழவு வீட்டிலும் பொறுக்கித்தின்ன முயலும் அவர்களது அரசியல் கழிசடைத்தனம் காறித் துப்பத் தகுந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை வளத்தைச் சூறையாட அரசியல் குற்ற கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியின் விளைவே இப்படுகொலைகள். தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஆற்று மணலுக்கும் கிரானைட் மலைகளுக்கும் மத்திய இந்தியாவின் தாது மலைகளுக்கும் நேர்ந்தது என்னவோ அதுவே சேஷாச்சலம் காட்டிற்கும் நடக்கிறது.
இங்கே மணற் கொள்ளையர்களும், வைகுண்டராசனும், பி.ஆர்.பி.யும் எப்படி தமிழகத்தை காயடித்து கோடிகள் பலவற்றை சுருட்டி அதிகாரத்துடன் உலா வருகிறார்களோ அது போலவே ஆந்திரத்து கம்மா, ரெட்டி முதலாளிகள் உலா வருகின்றனர். இவர்கள் போட்டிக்கு தமிழக தொழிலாளிகள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த இறப்புகள் ஏற்படுத்தியிருக்கும் மனிதாபிமானத்தின் ஆயுசு சொற்பமானது – நாம் இதன் பின் உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதோடு இச்சாவுகளுக்கான ஆணிவேரைப் பிடுங்கியெறிய வேண்டும். மக்களைக் காப்பாற்றுவதைத் தனது கடமையாகச் சொல்லிக் கொள்ளும் காவல் துறை தனக்கென விதிக்கப்பட்ட கடமையை ஆற்றாததோடு மாஃபியா கும்பலின் அங்கமாக மாறி மக்களைக் கொல்லும் கொலைக் கருவியாக சீரழிந்துள்ளது.
கடத்தலைத் தடுத்திருக்க வேண்டிய அரசின் ஒவ்வொரு துறையும் கடத்தல் கும்பலின் விசுவாசமான பிரிவுகளாக மாறிவிட்டிருக்கின்றன. மக்களைக் கொல்லும் இந்த அரசு கட்டுமானத்தை இனியும் நம்பிப் பலனில்லை. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதோடு மக்கள் விரோதிகளைத் தாங்களே கணக்குத் தீர்ப்பது ஒன்றே இது போன்ற படுகொலைகள் இனிமேலும் நடக்காமல் தடுக்கும்.
அப்போது மட்டுமே நமது தொழிலாளிகள் மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் காப்பாற்ற முடியும்.
–    தமிழரசன். வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக