வெள்ளி, 10 ஏப்ரல், 2015

நேரடி சாட்சியம் : பஸ்சில் சென்றவர்களை இறக்கி இழுத்துச் சென்று காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றார்கள்

ஆந்திர போலீசார் பஸ்ஸில் சென்றவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றதாக தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் பேட்டியினை அளித்துள்ளார். இதனால் பஸ்சில் ஆந்திரா சென்ற தமிழகத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக இறக்கி இழுத்துச் சென்று காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 7 பேர், பஸ்சிலிருந்து ஆந்திர போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.  இதனை நிரூபிக்கும் முக்கிய சாட்சியான சேகர் என்பவர், ஆந்திர போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிவந்தார். அவரை இந்த வழக்கின்போது ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. எனவே சேகரை தொண்டு நிறுவனம் ஒன்று பாதுகாப்பாக ரகசிய இடத்தில் வைத்து உள்ளது. ஆந்திர ஹைகோர்ட்டில் சேகர் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் சேகரை ஆஜர்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான சேகர் என்பவர் பத்திரிக்கை ஒன்றிக்கு அளித்த பேட்டியில், "ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மகேந்திரன் எனது தாய்மாமாவின் மகன். அவன் சென்னையில் பிளம்பராக வேலை பார்த்துவந்தான். அவனுடைய பக்கத்து வீட்டில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மகேந்திரன் சென்னையில் வேலைபார்த்து விட்டு 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தான். கடந்த 6 ஆம் தேதி என்னை சென்னைக்கு கட்டிட வேலைக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றான். பஸ் திருத்தணி நோக்கி சென்றதால் சென்னைக்கு தான் கூட்டிச் செல்கிறான் என நினைத்தேன். ஆனால் திருத்தணியில் இறங்கி அங்கிருந்து ஆந்திரா சென்ற பஸ்சில் அழைத்துச் சென்றான். அப்போது தான் என்னை ஆந்திராவுக்கு அழைத்து செல்வது தெரிந்தது. நகரிக்கு முன்னதாக பஸ்சை ஆந்திர போலீசார் நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்த சிலரை கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது மகேந்திரனையும் கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்றனர். நான் பெண்கள் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்ததால் போலீசார் என்னை விட்டுவிட்டார்கள். மகேந்திரனை போலீசார் பிடித்துச் சென்றதால் அதிர்ச்சியும், பயமும் அடைந்த நான் அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவில் வேறு பஸ் பிடித்து ஊருக்கு வந்துவிட்டேன். அடுத்தநாள் காலையில் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் படங்களை பார்த்தபோது அதில் மகேந்திரனும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வீட்டில் சும்மா இருந்த என்னை கட்டிட வேலைக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றுவிட்டு, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் அவன் பரிதாபமாக இறந்துவிட்டான்" என்று தெரிவித்துள்ளார். இவரது கூற்று ஆந்திர போலீஸார் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. பஸ்சில் சென்றவர்களை பாதியிலேயே இறக்கி காட்டுக்குள் கொண்டு சென்று அங்கு வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read more at tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக