சனி, 18 ஏப்ரல், 2015

சிதம்பரம் இளங்கோவன் சமரசம்! சிதம்பரத்தால் ஆன பயன் என்கொல் அவர் மந்திரியானத்தை தவிர?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைச் சந்தித்து ப.சிதம்பரம் அணியினர் வெள்ளிக்கிழமை சமரசம் செய்து கொண்டனர். பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தொடர்ச்சியாக மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டனர். "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கும் என்பது தனக்கு முன்னரே தெரியும்' என்று ப.சிதம்பரம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அதற்கு இளங்கோவன், "அப்படித் தெரிந்தவர் கட்சியைச் சீர்படுத்தும் வழியைச் செய்யாதது ஏன்? இப்படி கட்சியை விமர்சித்துப் பேசுபவர்கள்தான் நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மந்திரியாகவும் மாறி விடுவர்' என்றார்.

இதன் தொடர்ச்சியாக இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து மாற்றுவதற்கு தில்லியில் சிதம்பரம் முயற்சித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, வள்ளல்பெருமான், சுந்தரம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் வந்தனர். அவர்கள் இளங்கோவனைச் சந்தித்து சுமார் 45 நிமிஷங்கள் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு இளங்கோவன் கூறியது:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டம் தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். பொதுத் தேர்தல் வர உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெறும். அந்த வெற்றியை அடைவதற்கு எவ்வாறு செயல்படலாம் என்பது தொடர்பாக ஆலோசித்தோம்.
காங்கிரஸ் கட்சியில் கருத்து வேற்றுமை இல்லை. கருத்து ஒற்றுமை தான் உள்ளது என்றார்.

சந்திப்பில் நடந்தது என்ன? இளங்கோவனைச் சந்தித்த சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் "ஒரே கட்சியில் இருந்துகொண்டு விமர்சித்துக் கொள்வது ஆரோக்கியமானது அல்ல. இது கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கும்' என்று கூறியுள்ளனர்.
அதற்கு இளங்கோவன், "காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டு காங்கிரûஸயே சிதம்பரம் விமர்சனம் செய்ததால் தான் நானும் விமர்சிக்க வேண்டியிருந்தது. மற்றபடி, சிதம்பரம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதும் இல்லை' என்று கூறியுள்ளார்.
அதன்பின், இளங்கோவனும், சிதம்பரமும் இணைந்து பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவது என்றும், இருவரும் இணைந்து செயல்படுவது என்றும் அந்த சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மேலிட உத்தரவின் பேரில் இளங்கோவன் - சிதம்பரம் அணியினர் சந்தித்து சமரசம் செய்துகொண்டுள்ளனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக