ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சரத் பவர்: புகையிலையால் நானே புற்று நோய்க்கு ஆளானேன்


புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்று கூறிய பா.ஜனதா எம்.பி. திலீப் காந்திக்கு, சரத்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘சிகரெட்டுகள், இதர புகையிலைப்பொருட்கள் சட்டம்–2008’–ல் திருத்தங்கள் செய்வது குறித்து, அகமத் நகரை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி., திலீப் காந்தி தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இந்தநிலையில், ‘புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதை உள்நாட்டில் நடந்த ஆய்வுகள் நிரூபித்து காட்டவில்லை’ என திலீப் காந்தி எம்.பி. கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், புகையிலை பயன்படுத்துவது செரிமானத்துக்கு உதவும் என்று கூறிய அவர், இதை பயன்படுத்துபவர்கள் 100 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–


புகையிலை தீவிர விளைவுகளை ஏற்படுத்தாது என்று மக்கள் பிரதிநிதிகள் சிலர் சொல்கின்றனர். மருத்துவ துறையில் நான் ஒன்றும் பெரிய நிபுணர் அல்ல. நான் ‘குட்கா’ பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதனால் தான் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். இதற்கான ஆபரேசனும் செய்தேன். முடிவில் எனது பற்களை இழக்க நேர்ந்தது.

இந்த ஆபரேஷனை சரியான நேரத்தில் செய்ததால், வாய் புற்றுநோயில் இருந்து என்னால் மீள முடிந்தது. ஆனால், அகமத் நகரில் சில அறிவார்ந்த மக்கள் பிரதிநிதிகள், புகையிலை பயன்பாட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். மருத்துவ அறிவியலில் அவர்கள் ஆழமான அறிவைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் இது காட்டுகிறது.

இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார். dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக