செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நேபாளம் நிலநடுக்கம் ஏன்? அதிர வைக்கும் தகவல்கள்!

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்க மானியினால் (செசிஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே வேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் சேதத்தை ஏற்படுத்தும். பூமியின் மேற்பரப்பு (லித்தோஸ்பியர்) பெரும் பாளங்களாக அமைந்துள்ளன. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலும் உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்த பிளேட்டுகள் சுமார் 80 கி.மீட்டர் வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.


இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீட்டர் முதல் சுமார் 13 செ.மீட்டர் வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சில சமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும். ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை எதுவுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள் 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய நிலநடுக்கமானது அண்மையில் 2011ம் ஆண்டு சென்டாய், ஜப்பானில் நிகழ்ந்தது. பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் ஜப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும்.

ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி, ஆசிய பிளேட்டில் இல்லாமல் தனி பிளேட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.

மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்வதால், இந்திய பிளேட் ஆசிய பிளேட்டுடன் மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இதுதான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும், ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால்தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

நிலநடுக்க வகைகள்

நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றவை கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும். புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிக்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிக்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.

ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பூகம்பங்கள் பசிபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன. நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும். 2010ல் ஏற்பட்ட ஹெய்ட்டி பூகம்பத்தால் அழிவடைந்த கட்டடங்கள். இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது.

நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் நிலம் மற்றும் பனிப்பாறைகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பெரிய தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும்.

ஆழிப்பேரலை


நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும். பொதுவாக 7.5 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004ல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கினதாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.

நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும்


சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாகிஸ்தான், போர்ச்சுக்கல்லின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா என உலகில் எங்கும் ஏற்படலாம்.

90 சதவிகிதம் முதல் 81 சதவிகிதம் வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளி பதிவாகியது. இது அந்த நாட்டையே புரட்டிப்போட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வால் சாலைகள், வீடுகள், கோயில்களை சிதைத்து இயற்கை கோர தாண்டவம் ஆடியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்தின் ஓபன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர் டேவிட் ரோத்ரி கூறுகையில், "இமயமலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே, பல விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த அளவிற்கு சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்படுவதற்கு மத்திய ஆசியாவில் உள்ள இந்திய-யுரேசிய தட்டுகள் (டெக்டானிக் பிளேட்) ஒன்றோடொன்று மோதுவதே காரணமாகும். நேபாளத்தில் உள்ள செயல்திறன் வாய்ந்த தட்டுகளில் நிலஅதிர்வு ஏற்படுவதற்கு வரலாற்று ரீதியான பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதிலும், ஆண்டுக்கு 45 செ.மீட்டர் அளவுக்கு பூமியின் இரு அடுக்குகள் மனிதர்கள் உணரமுடியா நிலையில் இப்பகுதியில் நகர்கின்றன.

எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கும் சிறிய குன்றுகளில் நிலஅதிர்வுக்கு இன்னும் அதிக வாய்ப்புகளும், அவ்வாறு நில அதிர்வு ஏற்படும் போது, கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இந்திய தட்டுகளில் இமயமலைப்பகுதி தட்டுகள் மிகவும் செயல்திறன் உடையவை. அதிலும் 2 அல்லது 3க்கும் மேற்பட்ட செயல்திறன் வாய்ந்த அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகள் நகரும் போது, இதுபோல கடுமையாக நில அதிர்வுகள் ஏற்படும்.

மேலும், இமயமலைப்பகுதியில் வெளிஉலகம் உணரமுடியா அளவிற்கு அவ்வப்போது, பூமிக்குள்ளே சிறுசிறு நிலஅதிர்வுகள் ஏற்படும். அதில் ஏற்படும் சக்திகள் ஒன்றாக திரட்டப்பட்டு, இதுபோன்ற நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக ஏற்படக்கூடும். இதற்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கணிப்பின்படி, ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி வரை ஏற்படவாய்ப்பு இருந்துள்ளது. இது போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் முதலில் உயிர்சேதம் குறைவாக இருப்பதாக தெரியும், ஆனால், படிப்படியாக உயரும்" என்றார்.

இமயமலைப்பகுதியில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதிக அளவு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்

இதற்கு முன் நடந்த விபத்துக்களில் சில...

கடந்த 1905ல் ஏற்பட்ட கங்கரா நிலஅதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 7.5 பதிவானது. 1934ல் பீகாரில் ஏற்பட்ட நில அதிர்வு 8.1 ரிக்டர் அளவு பதிவானது. 2005ல் காஷ்மீர் நில அதிர்வு. இதில் 7.6 ரிக்டர் அளவு பதிவானது. இதில் கடைசியாக நிகழ்ந்த இரு நிலஅதிர்வுகளால் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கில் மக்கள் வீடுகள், உடமைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   vikatan.com

-மகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக