செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக-கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கையொப்பமிட்டார். முன்னதாக, கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக கோக-கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நிலம் ஒதுக்கியும் ஆலை தொடங்காததால் நிலத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என அந்த நோட்டீஸில் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில், கோக-கோலா நிர்வாகம் பெருந்துறை சிப்காட்டில் ஆலை தொடங்க சாத்தியக் கூறுகள் இல்லை என அரசிடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோக-கோலா நிறுவனம் ஆலை அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தது. இதற்கான உத்தரவில் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கையெழுத்திட்டார். கோக-கோலா ஆலை அமைக்க பெருந்துறை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அன்று முதல் இன்று வரை...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோக-கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது. பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்தில் சுமார் 71.3 ஏக்கர் நிலம் அந்நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டது. அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், கோக-கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆனால், அதற்கு கடந்த மார்ச் மாதத்தில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தினர், தாங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தப்போவதில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்தபிறகே வெளியேற்றுவோம் எனவும் உறுதியளித்தனர்.
மேலும், அந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, பெருந்துறையில் கோக-கோலா நிறுவனத்துக்கு இடம் அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் பிரச்சினை எதிரொலித்தது.
இந்நிலையில், கோக-கோலா நிறுவனத்துக்கு சிப்காட் சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், “தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது?” என்று கோரப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கோக-கோலா நிறுவனம் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்ததால் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக