செவ்வாய், 14 ஏப்ரல், 2015

பரபரப்பு அடங்கும் வரை கிருஷ்ணா நீர்: ஆந்திராவின் ரகசிய திட்டம்?

தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் வரை கிருஷ்ணா நீரை திறக்க, ஆந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், கடந்தாண்டு இதே நாளில், 2.97 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. தற்போது, 2.28 டி.எம்.சி., அளவே உள்ளது. சென்னையில், ஒருமாத குடிநீர் தேவை, ஒரு டி.எம்.சி., கோடைக்காலத்தில் ஏரிகளில் உள்ள நீர் அதிகளவில் ஆவியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், கிருஷ்ணா நீர் திறப்பை, கடந்த மாதம் 20ம் தேதியுடன், ஆந்திரா நிறுத்திக் கொண்டது. 2014 - 15ல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 12 டி.எம்.சி., நீரில், 4.70 டி.எம்.சி., மட்டுமே தரப்பட்டது. இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. இதுகுறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டியது தொடர்பாக, 20 தமிழர்களை, அம்மாநில போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை கமிஷன், கோர்ட் மூலமாகவும் ஆந்திர அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, கடந்த, 10ம் தேதி முதல் தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில், வினாடிக்கு, 1,600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்ணீர், 12 டி.எம்.சி., வரை முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை.ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவாக தண்ணீரை திறந்துவிட்டு, தமிழகத்தில் கொந்தளிப்பு அடங்கியதும், அதை நிறுத்திக்கொள்ள ஆந்திரா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, தமிழக பொதுப்பணித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக