வியாழன், 2 ஏப்ரல், 2015

பூட்டான் இந்திய சாலை! சீனாவின் அச்சுறுத்தலால் பூட்டான் தயக்கம்


கவுகாத்தி : அசாம் மாநிலத்தையும், அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் இணைக்கும் வகையிலான சாலையை அமைக்கும்படி, பூடான் அரசிடம், மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. ஆனால், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த சாலையை அமைப்பதற்கு, பூடான் தயக்கம் தெரிவித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாமின் கவுகாத்திக்கும், அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கிற்கும் இடையே, நீண்ட காலமாக வர்த்தக ரீதியான போக்குவரத்து உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த வர்த்தக போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், தற்போது கவுகாத்தியிலிருந்து, தவாங்கிற்கு செல்ல வேண்டுமானால், பூடான் நாட்டைச் சுற்றி, 800 கி.மீ., பயணிக்க வேண்டும்.
மலைப் பிரதேசமான இந்த பகுதியை, சாலை வழியாக கடக்க வேண்டுமானால், 16 மணி நேரமாகும். ஆனால், பூடான் நாட்டின் லும்லா வழியாக சென்றால், 6 மணி நேரத்தில் இந்த தூரத்தை கடந்து விடலாம். 600 கி.மீ., பயணம், 200 கி.மீ.,யாக குறைந்து விடும். தவாங்கையும், கவுகாத்தியையும், பூடான் வழியாக இணைக்கும் சாலையின் பெரும்பகுதியை, பூடான் அரசு அமைத்து விட்டது. ஆனால், அருணாச்சல பிரதேசம், தங்களுடைய பகுதி என, சீனா கூறி வருவதால், இன்னும், 15 கி.மீ., தூர சாலையை மட்டும் அமைக்காமல், பூடான் அரசு தாமதித்து வருகிறது.

'இந்த சாலையை அமைத்தால், சீனாவின் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்' என, பூடான் தயங்குவதே இதற்கு காரணம். இதையடுத்து, இந்த சாலை பணிகளை விரைவில் முடிக்கும்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலம், மத்திய அரசு, தொடர்ந்து பூடான் அரசிடம் வலியுறுத்துகிறது. 'இதற்கு பூடான் அரசு செவி சாய்க்குமா என்பது, கேள்விக்குறியே' என, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக