திங்கள், 13 ஏப்ரல், 2015

3 ஆண்டுகளாக கிடப்பில் சென்னை துறைமுகம் மதுரவாயில் மேம்பாலம் பணிகள்! திமுகவுக்கு புகழ்வந்து விடகூடாது பாருங்க?

தமிழக அரசின் தடையால், சென்னை துறைமுகம்
- மதுரவாயல் மேம்பால சாலை பணி முடங்கி, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. மத்திய அரசு பலகட்ட முயற்சிகள் எடுத்தும், மாநில அரசு விடாப்பிடியாக இருப்பதால், நெரிசலுக்கு தீர்வு காணும் முக்கிய பணியை துவங்குவதில், சிக்கல் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும், கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை பணியை, தேசிய நெடுஞ்சாலை கமிஷன் மேற்கொண்டது. இதற்கான, 20 சதவீத பணிகள் நடந்த நிலையில், நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், கூவத்தில் துாண்கள் அமைப்பதாக கூறி, 2012 மார்ச் 29ல், தமிழக அரசு தடை விதித்தது; அடுத்த நாள் முதல் பணிகள் முடங்கின. அப்போதைய பிரதமரின் ஆலோசகர், நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்தடுத்து வந்து, முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து, சாலை பணியை தொடர, பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.இது தொடர்பான வழக்கில், 'தடையின்றி பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்காத மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஓராண்டுக்கு மேலாக விசாரணை தொடர்கிறது.


இதற்கிடையே, மத்தி யில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடி பிரதமரானார். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமான போக்கை கடை பிடிப்பதால், சாலை பணிக்கான சிக்கல் தீரும் என, எதிர்பார்க்கப்பட்டது. மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஒத்துழைப்பு கோரினார். ஆனாலும், மாநில அரசு அசைந்து கொடுக்கவில்லை.பணிகள் முடங்கி, மார்ச் 30ம் தேதியுடன், மூன்று ஆண்டுகளாகிவிட்டது. சென்னையின் நெரிசலுக்கு தீர்வு காணும், இந்தப்பணி எப்போது தான் துவங்கும் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.வடிவமைப்பை மாற்ற தயார்:  
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநில அரசு தடையால், மூன்று ஆண்டுகளாக பணிகள் முடங்கி உள்ளன.மாநில அரசு விரும்பினால், வடிவமைப்பை மாற்ற தயாராக உள்ளோம். மாநில முதல்வரை சந்தித்து பேசிய, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமரச தீர்வு காண முயற்சித்து வருகிறார். ஆனாலும், மாநில அரசு அடம்பிடித்து வருகிறது. இதுபோன்ற தடைகளால், தமிழகத்தில் ஒப்பந்தம் எடுக்க, பலரும் தயங்கும் நிலை உள்ளது. இது, மாநில வளர்ச்சி சார்ந்தது என்பதால், மாநில அரசு தன் நிலையை மாற்றி, சாலை பணிக்கு ஒத்துழைப்பு தரும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் - தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக