வியாழன், 16 ஏப்ரல், 2015

ஜெ. அப்பீல் வழக்கில் ஏப். 30ம் தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு? உச்சநீதிமன்றம் 'கிரீன் சிக்னல்'.

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்ப வருமோ? என்னவாகுமோ? என்று தமிழக அரசியல் வட்டாரங்கள் பரபரக்க ஏப்ரல் 30ம் தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கலாம் என்று தெரிகிறது. ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் இருவரும், தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பு மாறுபட்டதால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் எண்ணிக்கையை கொண்ட, பேரமர்வு விசாரணைக்கு செல்கிறது.  பொதுவாக, உயர் நீதிமன்றங்களில், இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பை வழங்கும்போது, அந்த வழக்கை, மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிப்பார். அந்த நீதிபதி வழங்கும் உத்தரவைப் பொறுத்து, முடிவு மாறும். உதாரணத்துக்கு, பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என எடுத்து கொள்வோம். இரண்டு நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்கின்றனர். ஒரு நீதிபதி, 'நியமனம் செல்லும்' என்றும், மற்றொரு நீதிபதி, 'செல்லாது' என்றும், உத்தரவு பிறப்பிக்கின்றனர். அப்போது, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஒருவரின் விசாரணைக்கு அனுப்பப்படும். அந்த நீதிபதி, 'நியமனம் செல்லும்' என, தீர்ப்பளித்தால், ஏற்கனவே, ஒரு நீதிபதி, 'செல்லும்' என தீர்ப்பளித்திருப்பதால், 'நியமனம் செல்லும்' என்பது, இறுதி தீர்ப்பாக அமையும். எனவே, மூன்றாவது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, தீர்ப்பு அமையும். உச்ச நீதிமன்றத்தில், அவ்வாறு இல்லை; இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் போது, அந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு அனுப்பப்படுகிறது. இனிமேல், அந்த, பெஞ்ச்சில் உள்ள நீதிபதிகள், யார் யார் என்பதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவெடுத்து, நீதிபதிகளை நியமித்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தீர்ப்பை, 15ம் தேதி வரை வழங்க வேண்டாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், தீர்ப்பு வழங்குவது, நீதிபதி குமாரசாமியின் கையில் உள்ளது என்று நீதிபதிகளே தெரிவித்துவிட்டனர். அ.தி.மு.கவினரைப் பொறுத்தவரை, இன்று தீர்ப்பு வெளிவந்து விடும் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். அது நடக்காத காரியம் என்பது தற்போது தெளிவாகிவிட்டது. நீதிபதி குமாரசாமியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் விதித்த வரம்பின்படி, மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து விட்டார். தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு சட்ட ரீதியாக அவருக்கு தடை இல்லை என்றாலும், தார்மீக அடிப்படையில் பார்த்தால், தீர்ப்பு வழங்க மாட்டார் என்றே கூறப்பட்டது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி அடிப்படை பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில், 'அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது' என, உத்தரவிடப்பட்டால், உயர் நீதிமன்ற உத்தரவு கேள்விக்குறியாக விடும் என்று கூறப்படுகிறது. மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தாலும், அந்த வழக்கில் முடிவு வரும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்றே, வழக்கறிஞர்களும் கூறிவந்தனர். இது ஒருபுறம் இருக்க சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க, கூடுதல் அவகாசம் தருமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹச் எல் தத்துவுக்கு, கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க ஏப்ரல் 15ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி குமாரசாமி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்க இயலாததால், ஏப்ரல் 30ம் தேதிவரை அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நாளை முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. இதனால் ஏப்ரல் 30ம் தேதியன்று தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி குமாரசாமி தயாராகிவிட்டார்... என்பதையே அவரது கடிதம் வெளிப்படுத்துகிறது. ஆக ஏப்ரல் 30-ல் க்ளைமாக்ஸ்!!

Read more tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக