திங்கள், 27 ஏப்ரல், 2015

ஊடகங்களின் ஊழல்தான் இந்தியாவிலேயே மோசமானது! உதாரணம் 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம்..

தில்லியில் நடைபெற்ற 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம் பத்தொன்பது நாள்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இறுதியில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடியில், கடந்த மார்ச் 25ஆம் தேதி ஏல விற்பனை முடிந்திருக்கிறது.
இது வெறும் செய்தி அன்று. இதற்குள் மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது-. இதே அலைக்கற்றை விற்பனையை வைத்துத்தான் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று சொல்லி, தி.மு.க.வுக்கு எதிரான ஒரு பெரும் சூறாவளியைச் சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்கள் உருவாக்கின. முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.ராசா பதினைந்து மாதங்கள் திகார் சிறையில் இருந்தார். அதே வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னமும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் இதனை ஊழல் வழக்கு என்று சொல்லுவதே மோசடியாகும். பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான் ஊழல் வழக்கு. நம் ஊடகங்கள் அதனை சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு என்று சொல்வதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறுவார்கள். அதிலும் தந்தி தொலைக்காட்சியோ, ‘சொத்து வழக்கு’ என்று மிகக் கவனமாகச் சொல்லும்.
2ஜி அலைக்கற்றை வழக்கு என்பது, அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய வருவாய் இழப்புக் குறித்துத் தணிக்கையாளரின் எதிர்க்குறிப்பினால் (Audit objection) எழுந்த வழக்கு. இதுபோன்ற தணிக்கையாளர் எதிர்க்குறிப்புகள் பல அரசுகளின் மீது, இன்றும் இருக்கவே செய்கின்றன. பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும் இரு எதிர்க்குறிப்புகள் இருக்கின்றன. டாடா நிறுவனம், நானோ கார்கள் தயாரிப்பதற்கு நிலம் வழங்கியது தொடர்பாகவும், சபர்மதி ஆற்றின் கரையோரம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல ஏக்கர் நிலத்தை அளித்தது தொடர்பாகவும் தணிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். ஆனால் அதன் அடிப்படையில் மோடியோ அல்லது வேறு மாநில அமைச்சர்களோ கைது செய்யப்படவில்லை. தி.மு.க.வினருக்கு மட்டும் இந்நாட்டில் சில தனிச்சட்டங்கள் இருக்கின்றன போலும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தீர்ப்பு வரும்வரை ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் குற்றப்பத்திரிக்கை கூடத் தாக்கல் செய்யப்படாத நிலையில், ஆ.ராசா பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் குரல் எழுப்பினார்கள். நீதிபதி கங்குலி, அமைச்சராக ஆ.ராசா இருந்ததை ஒரு போதும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றார். பிறகு, ஒரு பாலியல் வழக்கில் அதே கங்குலி குற்றம் சாற்றப்பெற்று பதவி விலகினார்.
இத்தனை கலவரங்களை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கு என்ன என்பதை இன்றும் கூட முழுமையாக ஊடகங்கள் விளக்குவதில்லை. ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, 52.7(MHz) மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மட்டுமே விற்பனை ஆனது. ஒரு மெகாஹெர்ட்ஸ் 267.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு மொத்தம் 14.98 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. தலைமைத் தணிக்கையாளர் வினோத்ராய் அவராக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். அலைக்கற்றையை ஏலத்திற்கு விட்டிருந்தால், ஒரு விபிக்ஷ் 3,350 கோடிக்கு விலை போயிருக்கக்கூடும் என்றார். அவ்வளவு விலைக்-கு விற்பனையாகியிருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. அது அவருடைய கற்பனை அவ்வளவுதான்! அந்தக் கற்பனையின் அடிப்படையில் கட்டப்பட்ட மாளிகைதான் 1.76 லட்சம் கோடி (52.7 3,350 = 1,76,545).
இப்போது அலைக்கற்றைகளின் பயன்பாடு பன்மடங்கு கூடியிருக்கிறது. கைத்தொலைபேசி இல்லாதவர்கள் கையில்லாதவர்களாகப் பார்க்கப்படும் காலம் இது. எனவே அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 380.75MHz அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளன. ஆம், தணிக்கையாளர் வினோத்ராய் கூறியபடி இம்முறை ஏலம்தான் விடப்பட்டுள்ளது. அப்படியானால் 3,350 கோடிக்குக் குறையாமல் ஒரு MHz அலைக்கற்றை விலைபோயிருக்க வேண்டும். அப்படி ஏலம் நடந்திருக்குமானால்(380.75 3,350), மொத்தம் 12.75 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் வந்திருக்க வேண்டும். ஆனால் வந்திருக்கும் மொத்தத் தொகையோ 1.09 லட்சம் கோடிதான். ஆக, ஒரு MHz அலைக்கற்றை 289 கோடிக்குத்தான் விற்பனையாகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
3,350 கோடி எங்கே, 289 கோடி எங்கே? அன்றைக்கு 2ஜி ஊழல் வழக்கு என்றார்களே, இன்றைக்கு இதனை 3ஜி ஊழல் வழக்கு என்று சொல்ல வேண்டாமா? அன்றைக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கு என்றார்களே, இன்றைக்கு 12.75 லட்சம் கோடி ஊழல் வழக்கு என்று சொல்ல வேண்டாமா?
இன்னமும் சொல்லப்போனால், மேற்காணும் கணக்கே கூட, சற்றுக் குறைவான மதிப்புடையதுதான். 3350 கோடிக்கு விலைபோயிருக்கும் என்று வினோத்ராய் போட்ட கணக்கே ஏழெட்டு ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றைக்கு அதன் மதிப்பு பன்மடங்காகக் கூடியிருக்காதா? மேலும் அன்றைக்கு ஏலம் விடப்பட்டது 2ஜி அலைக்கற்றை மட்டுமே. இன்று 3ஜி அலைக்கற்றை விற்பனையும் சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் கற்பனையில் கணக்குப் போட்டுப் பார்த்தால், 20 லட்சம் கோடிக்கும் மேலே வரும். நாமும் கனவில் ஒரு மாளிகை கட்டி, கற்பனையில் மணி மண்டபமும் கட்டலாம்.
ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது, அவர் செய்த இன்னொரு பெரிய மக்கள் தொண்டினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்று Roll out obligation என ஒரு திட்டத்தை அவர் கொண்டு வந்தார். அதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் நிறுவும் அலைக்கற்றைக் கோபுரங்களில் பத்து விழுக்காட்டினை கிராமங்களில் அமைக்க வேண்டும் என்பது. அப்படி அமைத்தால்தான் அலைக்கற்றையே வழங்கப்படும் என முன் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன் பொருட்டு ஒவ்வொரு நிறுவனமும் கிராம மக்களையும் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. ஒரு நிமிடத்திற்கு பத்துக் காசுகள் வரையில் அவர்கள் இறங்கி வந்ததற்கு இதுவே அடிப்படைக் காரணம்.
இப்போது, அவர்கள் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். எந்தக் கட்டளையையும் இனி அவர்கள் மீது திணிக்க முடியாது. தொலைபேசிக் கட்டணங்கள் ஏறுவதையும் தடுக்க முடியாது. விரைவில் தொலைபேசிக் கட்டணங்கள் உயர இருக்கின்றன என்பதை, தொலைத் தொடர்பு நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் சுனில் பார்தி மித்தல் வெளிப் படையாகவே அண்மையில் ஒரு நேர்காணலில் (Economic Times Now, 22.01.2015) குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொலைபேசிகள் வெகுமக்களைச் சென்றடைந்ததும், அவற்றுக்கான கட்டணங்கள் மிகக் குறைவாக இருந்ததும் ஆ.ராசா அமைச்சராக இருந்த நேரத்தில்தான். இது ஆ.ராசா எனும் தனிப்பட்ட மனிதரின் பெருமையன்று. அவர் கழகத்தின் உறுப்பினர், கலைஞரின் தம்பி என்பதே குறிப்பிடத்தக்கது. என்றைக்கும் எவர் ஒருவரின் சாதனையும், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் சாதனையாகவே பார்க்கப்பட வேண்டும். ஆகவே அன்று மத்திய அரசில் தி.மு.கழகம் செய்த சாதனையை, சாதனையாகக் காட்டாமல் மக்களிடம் வேதனையாகக் காட்டினார்கள், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்.
அவர்கள் கற்பனையில் கட்டிய கோபுரங்கள் அண்மையில் நடந்து முடிந்த ஏலத்திற்குப் பிறகு, உடைந்து, தகர்ந்து, நொறுங்கிப் போயின.subavee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக