வியாழன், 30 ஏப்ரல், 2015

10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை ! மலாலா கொலை முயற்சி வழக்கு

பாகிஸ்தானில் மலாலாவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடித்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடினார். ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காத நிலை மற்றும் தாலிபான்களின் தொடர் மிரட்டல்களை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் இங்கிலாந்து அரசு உதவியோடு பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது மலாலாவின் வயது 15. மலாலாவைச் சுட்டுக் கொல்ல முயற்சித்தது தொடர்பாக 10 தாலிபான் தீவிரவாதிகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2014-ல் கைது செய்தது.
இந்த நிலையில் மலாலாவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்கு தொடர்புடைய வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலாலா மீது தாக்குதல் நடத்திய திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி இந்த தண்டனை பட்டியலில் இடம்பெறவில்லை.
பெண் கல்விக்கு ஆதரவாக, தீவிரவாதிகளை தனது எழுத்தின் மூலம் எதிர்த்த மலாலாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது./tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக