ஞாயிறு, 22 மார்ச், 2015

திலிப் சாங்வி இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் ஆனது எப்படி?

இந்தியா உலகக்கோப்பை வென்றது முதல் பல முக்கியமான சரித்திர நிகழ்வுகள் 1983-ம் ஆண்டு நடந்தது. அதே ஆண்டில்தான் சன் பார்மா நிறுவனர் திலிப் சாங்வியும் தன்னுடைய தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
முதல் தலைமுறை தொழில் முனைவரான இவர் இப்போது இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் திலிப் சாங்வி.
புளூம்பெர்க் தகவல் படி இவரது சொத்து மதிப்பு 2,160 கோடி டாலர்கள். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,150 கோடி டாலர்கள்.
கொல்கத்தாவில் பிறந்தவர் திலிப் சாங்வி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தார். இவரது அப்பா பார்மா துறை நிறுவனம் ஒன்றில் டீலராக இருந்தார். எனவே பார்மா துறை பற்றி அனுபவம் இருந்ததால் அது சார்ந்த தொழில் தொடங்கலாம் என்று தன்னுடைய 27-வது வயதில் மும்பைக்கு வந்தார்.

அப்பாவிடம் வாங்கி வந்த 10,000 ரூபாயை வைத்து ஐந்து நபர்களுடன் சன் பார்மா நிறுவனத்தை குஜராத் மாநிலத்தின் வபி பகுதியில் தொடங்கினார். இப்போது இந்தியாவின் பெரிய பார்மா நிறுவனமாகவும், சர்வதேச அளவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாகவும் சன் பார்மா இருக்கிறது.
இந்தியாவில் மட்டும் பிஸினஸ் செய்வது போதாது என்பதால் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் விரிவு படுத்தினார்.
தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி இருக்கிறது. நிறுவனம் தானாக உற்பத்தி செய்து, சந்தையை பிடிப்பதன் மூலமாக வளர்வது ‘ஆர்கானிக் குரோத்’ என்று சொல்லுவார்கள். இன்னொன்று ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தை கையகப்படுத்துதன் மூலம் சந்தையை விரிவுபடுத்துவது. இது ‘இன்ஆர்கானிக் குரோத்’ என்று சொல்லப்படும்.
திலிப் சாங்வி இரண்டாவது வழியையும் நாடினார். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பார்மா நிறுவனங்களையும் கையகப்படுத்தினார். இதுவரை 17 நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறார். ரான்பாக்ஸி, அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் டாரோ பார்மா (நஷ்டத்தில் இருந்த போது வாங்கப்பட்டது) ஆகியவை இதில் முக்கியமானவை.
இத்தனைக்கும் ரான்பாக்ஸி நிறுவனத்தை கையகப்படுத்தும் போது, அந்த நிறுவனத்தின் மீது பெரும் விமர்சனங்கள் இருந்தன. இருந்தாலும் திலிப் சாங்வியின் முதலீடுகள் மீது முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ரான்பாக்ஸியை கையகப்படுத்தும்போது சன் பார்மா பங்கின் விலை 590 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இப்போது 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிறது.
அதற்கான சரியில்லாத, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டும் இவர் வாங்கவில்லை. துசா பார்மா என்னும் நிறுவனத்தை 38 சதவீதம் அதிக விலை கொடுத்து வாங்கினார். நிறுவனத்தின் செயல்பாடுகளை பொறுத்து அவைகளை கையகப்படுத்தினார்.
ரான்பாக்ஸி, சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆராய்ச்சியாளராக இருந்தவர்கள் நிறுவனத்தை ஆரம்பித் தார்கள். ஆனால் திலிப் சாங்வி ஒரு தொழில்முனைவோர் மட்டுமே.. தவிர புதிதாக மருந்துகளை உருவாக்காமல் நிறுவனங்களைக் கையகப்படுத்துவார். இவர் நிறுவனத்தின் லாப வரம்பு மிக அதிகம் என்பது உள்ளிட்ட விமர்சனங்களும் இவர் மீது உண்டு.
ஆனால் அதையும் தாண்டி இவர் எடுக்கும் முடிவுகள் துல்லியமாக இதுவரை இருந்து வந்ததால் முதலீட்டாளர்கள், பணியாளர்களும் இவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக் கப்பட வேண்டிய விஷயம்.
சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் சந்தை மதிப்பு 12,051 கோடி ரூபாய்
சுஸ்லானில் முதலீடு..
கடன் பிரச்சினையில் தவிக்கும் சுஸ்லான் நிறுவனத்தில் 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதன் மூலம் சுஸ்லான் நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை கையகப்படுத்தி இருக்கிறார்.
சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச்-ல் இவர் பங்கு 67.13%
சன் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.09 லட்சம் கோடி ரூபாய்
சன் பார்மாவில் இவர் பங்கு 63.35%
30 சதவீத வருமானம்
1994-ம் ஆண்டு சன் பார்மா நிறுவனம் பட்டியலிடபட்டது. அதிலிருந்து 2014-ம் ஆண்டு வரை சன் பார்மா பங்கு ஆண்டுக்கு 30 சதவீத வருமானம் கொடுத்து வருகிறது  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக