ஞாயிறு, 22 மார்ச், 2015

அண்ணா ஹாசாரேக்கு கலைஞர் பதில்:உங்களின் நியாயமான போராட்டத்திற்கு நாம் என்றும் ஆதரவளிப்போம்!

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் கலைஞர்,  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில்,  ’’பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டமசோதா குறித்து தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அந்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தும் படியும், மத்திய அரசு விவசாயிகளை பற்றி சிந்திக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.அக்கடிதத்தில் அந்த மசோதாவில் உள்ள 6 முக்கிய அம்சங்களையும், அவற்றை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மிக தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது குறித்தும் தெரிவித்து இருக்கிறீர்கள். அவை வருமாறு:–


நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நிலம் சர்வே செய்யப்படவில்லை. நிலம் 1, 2, 3, 4, 5, 6 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1, 2, 3 வகை நிலங்கள் விளை நிலங்களாகும். அவற்றை தொழிற்சாலைகளுக்கு வழங்க கூடாது. இந்த சட்டம் அது குறித்த தேவைகளுக்கு உடனடியாக சட்டம் இயற்றுவதற்கு தடையாக உள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த 2013–ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் விவசாய நிலங்களை தனியார் திட்டங்களுக்கு வழங்க விவசாயிகளின் 80 சதவீத ஒப்புதல் தேவை என கூறப்பட்டுள்ளது.

இந்த அரசு அந்த நிபந்தனைகளை நீக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற அனைத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது. எனவே இந்த நிபந்தனை 2013–ம் ஆண்டு சட்டப்படி தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

2013–ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்கபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது.

2013–ம் ஆண்டு சட்டத்தில் தேசநலன் கருதி அதில் சில விதிவிலக்குகள் இருந்தன. தற்போது அவற்றில் தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இவை பொதுமக்களிடம் இருந்து கட்டாய வசூல் செய்யக்கூடியவை. எனவே அவை தேச நலன் என கருத முடியாது.

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு பொருட்களின் தேவையை சமாளிக்க விவசாய பொருட்களின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியது அவசியம். எனவே, விளை நிலங்களை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை உள்ளது.

ஆச்சரியம் என்னவெனில் இந்த நிபந்தனையும் இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது தேச நலனுக்கு முற்றிலும் எதிரானது.

இவ்வாறு நீங்கள் விளக்கியது சரியானதே. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே கொடுமையானது. விவசாயிகளுக்கு எதிரான நிபந்தனைகளுடன் கூடிய இந்த சட்டத்தை தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

உண்மையாதெனில் இந்த சட்டத்துக்கு எதிராக கடந்த 20–ந்தேதி தி.மு.க. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தியது. நான் சென்னையில் நடந்த மிகப் பெரிய போராட்டத்துக்கு தலைமை தாங்கினேன். இறுதி வரை இந்த சட்டத்துக்கு எதிரான எங்கள் கடுமையான எதிர்ப்பு தொடரும்.

சமூக நலனுக்காக தாங்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்துக்கு தி.மு.க. என்றும் ஆதரவளிக்கும். தேச நலன்கருதி தாங்கள் நடத்தும் இது போன்ற போராட்டங்களுக்கு நாங்கள் உங்களுடன் இருப்போம்’’என்று கூறப்பட்டுள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக