வெள்ளி, 13 மார்ச், 2015

மோடி, சிறிசேன கூட்டாக பேட்டி: ஈழ தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க ஆதரவு: மீனவர் பிரச்னைக்கு மனிதாபிமான தீர்வு


கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்பு ஏர்போர்ட்டில் நேரில் சந்தித்து வரவேற்பு அளித்தார்.  இதை தொடர்ந்து இலங்கை அதிபர் சிறிசேனவுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். ஈழ தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க இந்தியா ஆதரவு அளிக்கும். மேலும்  தமிழக மீனவர் பிரச்னை மனிதாபிமான முறையில் அணுகி தீர்க்கப்பட வேண்டு¢ம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி செசல்ஸ்,  மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். செசல்ஸ் மற்றும் மொரிஷியஸ் பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு  இலங்கை பயணத்தை தொடங்கினார். மொரீஷியசில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் மோடி இன்று காலை கொழும்பு சென்றார்.
அங்கு கட்டுநாயக்க  ஏர்போர்ட்டில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோடி வருகையையொட்டி ஏர்போர்ட்,  தலைமை செயலகம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று காலை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு இலங்கை கடற்படையில் 71 குண்டுகள் முழங்க  ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அதனைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இன்று காலை கொழும்பில் அதிபர் மாளிகையில் அவருக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்புக்கு பின்னர் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா, சுங்க வரி, இளைஞர் மேம்பாடு, ரவீந்திராத் தாகூர் நினைவகம் கட்டுதல் உள்ளிட்ட இந்தியா இலங்கை  இடையிலான நான்கு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மோடியும், சிறிசேனவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

திரிகோணமலையில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு அமைக்க இந்தியா உதவ தயாராக இருப்பதாக மோடியும், சிறிசேனவும் அப்போது தெரிவித்தனர். பின்னர் இந்திய  பிரதமர் மோடி கூறுகையில், இலங்கை பணத்தின் மதிப்பை நிலைப்படுத்த இலங்கை மத்திய வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.9000 கோடி நிதியுதவி  அளிக்கும். தமிழக மீனவர் பிரச்னையை வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய முறையில் அணுகி தீர்வு காணப்படும். ஆனால் இதற்கு சிறிது கால அவகாசம்  தேவைப்படும். இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீனவர் பிரச்னையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். தொலைநோக்கு முறையில் மீனவர்  பிரச்னையை தீர்க்க இரு தரப்பிலும் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தீர்வுகள் அமைய வேண்டும்.

எனவே இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். இலங்கையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட இந்தியா எப்போதும் பக்கபலமாக இருக்கும். இலங்கை  தமிழர்களுக்கு சம உரிமை, 13வது சட்டதிருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா ஆதரவு அளிக்கும். இந்தியா இலங்கை உறவை பலப்படுத்தும்  வகையில், ராமாயண, புத்தமத கலாச்சார நிகழ்வுகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். விரைவில் டெல்லியில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை  தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  இதனையொட்டி கொழும்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக