வெள்ளி, 13 மார்ச், 2015

சுயேச்சைகள் போட்டியிட தடை விதியுங்கள்! லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கடும் தண்டனை வழங்க வேண்டும்; சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட, தடை விதிக்க வேண்டும்' என்பது உட்பட, பல பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு, மத்திய சட்டக் கமிஷன் வழங்கி உள்ளது.தேர்தல் களத்தை சந்திக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, நிதி மற்றும் நன்கொடைகள் பெறுவது வழக்கமாகி விட்டது. தற்போதைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில், 20 ஆயிரத்திற்கு மேலான நன்கொடைகளுக்கு மட்டுமே, அந்தக் கட்சிகள் கணக்கு காண்பிக்க வேண்டும். அதற்கு குறைவாக பெறும் நன்கொடைகளுக்கு, தேர்தல் கமிஷனிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டியதில்லை.


இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக, மத்திய சட்டக் கமிஷன், மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது; அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* அரசியல் கட்சிகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான அளவில் நன்கொடைகள் பெற்றாலும், அந்த தொகையானது, 20 கோடியை தாண்டினாலோ அல்லது கட்சியின் மொத்த நிதி வசூலில், 20 சதவீதத்தை தாண்டினாலோ, அதுகுறித்த கணக்கு விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக, தேர்தல் விதிகள் மற்றும் வருமானவரி சட்ட விதிகளில், மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், அடுத்த ஆறு மாதத்திற்குள், அரசியல் கட்சிகள் தங்களின் நிதி வசூல் மற்றும் கணக்கு விவரங்களை தணிக்கை செய்து, அதை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அரசியல் கட்சிகள், தங்களுக்கு கிடைத்த நிதி மற்றும் நன்கொடைகள் தொடர்பாக தரும் விவரங்களை, தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

* அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பெரிய நிறுவனங்கள், நன்கொடைகளை வழங்கும் முன், தங்கள் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில், பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.

* தேர்தல் செலவுக் கணக்கு விவரங்கள் மற்றும் தங்களுக்கு கிடைத்த நிதி விவரங்களை, சமர்ப்பிக்க தவறும் வேட்பாளர்கள், தற்போது தேர்தலில் போட்டியிட, மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். அதாவது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

* கட்சிக்கு கிடைத்த நிதி மற்றும் நன்கொடை விவரங்களை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளுக்கு, அன்றாட அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும். அதன்பின்னும், அந்தக் கட்சிகள் விதிமுறைப்படி செயல்படாவிட்டால், அவற்றின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

* கட்சிகளோ அல்லது தனிநபர்களோ, தேர்தல் நேரத்தில் கறுப்பு பணத்தை செலவிட்டாலோ அல்லது செலவுக் கணக்குகளை குறைவாகக் காட்டினாலோ, தற்போது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இனி, இதுபோன்ற குற்றங்களை, ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் கையாள வேண்டும்.

* சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட, தடை விதிக்க வேண்டும்.

* தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து, பத்திரிகைகளில் செய்தி வெளியிடச் செய்வதையும், அரசியல் ரீதியான விளம்பரங்கள் வெளியிடுவதையும், குற்றமாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்வோரை, தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக அறிவிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

* குஜராத்தில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட்டது; அது, சரியல்ல.

* தேர்தல் கமிஷனர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய, மூவர் குழுவினர் தேர்வு செய்ய வேண்டும். லோக்சபாவில், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லை எனில், கூடுதல் இடங்களைப் பெற்றுள்ள எதிர்க்கட்சியின் தலைவர், மூவர் குழுவின் உறுப்பினராக இடம் பெற வேண்டும். மேலும், தேர்தல் கமிஷனர்கள் அனைவருக்கும், அரசியல் சட்ட ரீதியாக, சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, உயர் நீதிமன்றங்களில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, தேர்தல் தொடர்பான அமர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

* வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை மதிப்பிடும் போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு வெளியாகும் நாள் வரையிலான செலவுகளை, கணக்கில் கொள்ள வேண்டும்; அதற்கேற்ற வகையில், விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.

* தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே, லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டும். அதற்கு, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் பிரிவு, 4 மற்றும் 5ல், திருத்தம் செய்ய வேண்டும்.

* தேர்தலில், ஒரு வேட்பாளர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது, தடை செய்யப்பட வேண்டும்.

* விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமையை, தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும்.

* எம்.எல்.ஏ.,க்கள் அல்லது எம்.பி.,க்கள் கட்சி தாவினால், அவர்களின் பதவியை பறிக்கும் உரிமை, தற்போது சபாநாயகருக்கு அல்லது சட்ட மேலவை தலைவருக்கு அல்லது ராஜ்யசபா தலைவருக்கு உள்ளது; இந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும்; பதவியை பறிக்கும் உரிமையை, ஜனாதிபதி அல்லது மாநில கவர்னருக்கு வழங்க வேண்டும்; அதற்கேற்ற வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்தல் கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, ஜனாதிபதி அல்லது கவர்னர், இந்த பதவி பறிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு, சட்டக் கமிஷனின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




கமிஷன் அமைக்கப்பட்டது எப்போது?



* கடந்த 2012 செப்., 1ம் தேதி, பிறப்பித்த உத்தரவுப்படி, 20வது சட்டக் கமிஷன், நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையில் அமைக்கப்பட்டது.

* இந்த கமிஷனின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள்; வரும் ஆக., 15ம் தேதியுடன், 20வது சட்டக் கமிஷனின் பதவிக்காலம் முடிவடைகிறது.

* சட்டக் கமிஷனின் தலைவரான, நீதிபதி ஏ.பி.ஷா, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

* தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக, மேலோட்டமான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டதை அடுத்து, சட்டக் கமிஷன், இந்த பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

* சட்டக் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை, இனி ஆய்வு செய்யும் மத்திய சட்ட அமைச்சகம், அவற்றில் எவற்றை எல்லாம், சட்ட விதிகளின் சேர்க்கலாம் என, முடிவு செய்யும்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக