செவ்வாய், 17 மார்ச், 2015

டெல்லி அதிர்ந்தது! நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆயிரக்கணக்கில் திரண்டு பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்காட்டில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். இதில் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்ணான்டஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது என்று பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்கர் பெர்ணான்டஸ், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மக்களுக்கு ஆதரவான அம்சங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தினோம்.
இதனை வலியுறுத்தும் வகையிலும், பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தின் நோக்கம் பற்றிய உண்மையை பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கொண்டு செல்லும் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். இந்த மசோதாவின் நோக்கம் குறித்து மக்களிடம் நாங்கள் தெரிவிப்போம் என்று பேரணியின்போது கூறிய ஜெய்ராம் ரமேஷ், விவசாயிகளுக்கு எதிரானவர் நரேந்திர மோடி என்று முழக்கம் எழுப்பினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக