செவ்வாய், 17 மார்ச், 2015

மன வக்கிரத்தின் உச்சம் தொட்ட 'ஐ'

vikram Iசங்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ஐ. தனியார் நிறுவனத்தின் விளம்பர மாடலாக இருக்கும் விக்ரம், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்நிறுவனத்தின் மாடலாக நடிக்க மறுக்கிறார். அதனால் அந்நிறுவனமும், விக்ரமின் சக போட்டியாளர்களும் இணைந்து விக்ரமின் உருவத்தை சிதைப்பதே இத்திரைப்படத்தின் கதை. உருவத்தை சிதைக்கும் மன வக்கிரத்திற்கு எதிராக கருத்து சொல்லியிருக்க வேண்டிய இத்திரைப்படத்தின் காட்சிகளும் , முழுக்க முழுக்க வக்கிரமாகவே அமைந்திருக்கிறது.
எந்த வித சமூக அக்கறையும், கரிச‌னங்களும் இல்லாமல் சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் தன்னுடைய வணிக நலனை அடிப்படையாக கொண்டே சிந்திக்கும் சங்கரின் மற்றொரு படைப்பு இது. 

80களில் கொடி கட்டிப் பறந்த பழிவாங்கும் கதை வரிசைப் பட்டியல்களில் இத்திரைப்படத்தை சேர்க்கலாம். ஆனால், புதுமை இருக்கிறது. அந்த கால விஜயகாந்த், ரஜினிகாந்த் படங்களில் எதிரிகளை திருத்துவார்கள், கொலை செய்வார்கள் அல்லது சட்டத்தின் வழியில் தண்டிப்பார்கள். ஆனால், சங்கர் பிரம்மாண்ட இயக்குனரல்லவா? ஆகையால் எதிரிகளை பிரம்மாண்டமாக தண்டிக்கிறார். எதிரிகளை கொடூரமாக தண்டிக்கும் போது மக்கள் மனதில் எதிர்ப்பு அலை வந்து விடக்கூடாதல்லவா? ஆகையால் எதிரிகளை மிகக் கொடூரமாக சித்தரித்து விடுகிறார். எதிரிகள் விக்ரமை கொடூரமாக தண்டிக்கின்றனர். அதனால், மகா கொடூரமாக எதிரிகளை விக்ரம் தண்டிக்கிறார். கோடிகணக்கில் செலவழித்து, மக்களை கொடூரமாக தண்டித்திருக்கிறார் சங்கர். மக்களும் பணம் கொடுத்து , விதவிதமான பிரம்மாண்டமான அகோரங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும். இதுதான் படைப்பாளியாக சங்கரின் எதிர்பார்ப்பு.
கதாநாயக பிம்பத்திற்காக உழைக்கும் சினிமா வில்லன்கள்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த அளவிற்கு வில்லன் கெட்டவனாக காட்டப்படுகிறானோ அந்த அளவிற்கு கதாநாயக பிம்பம் மக்கள் மனதில் உயரும். பெண்களை பலவந்தமாக வன்புணரும் நம்பியாரை நம்பித்தான் பெண்களை தெய்வமாக வணங்கும் எம்.ஜி.ஆர் என்கிற கதாநாயகன் உருவாக்கப்பட்டார். இந்த பழைய பாணி தமிழ் சினிமாவைத்தான் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரம்மாண்ட திரைப்படமாக தந்திருக்கிறார் சங்கர். ஆனால், எம்.ஜி.ஆர், ரஜினி திரைப்படங்களில் இவ்வளவு வக்கிரம் இருக்காது. இது வரை எம்.ஜி.ஆரோ, ரஜினியோ எந்த வில்லன் மீதும் அமில வீச்சு நடத்தியது கிடையாது. அப்போது அமில வீச்சு சம்பவங்கள் அதிகம் கிடையாது. அமில வீச்சிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் கிடையாது. ஆனால், அமில வீச்சிற்கு எதிராக, நாடு முழுவதும் வீரியமான பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் உணர்த்தும் செய்தி என்ன? முகம் கொடூரமாக எரிந்து போவதையும், அலங்கோலமாக முகம் மாறிப் போவதையும், பகடி செய்து இரசிக்கின்ற மன நிலையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதுதான் சங்கரின் நோக்கம். வில்லன்கள் ஒவ்வொருவரின் முகமும் சிதைந்து போகும்போதும், அதனை பார்வையாளர்கள் விரும்புகிற நகைச்சுவையாக சித்தரிப்பதும் என்னே கொடூர மனம். இதுவல்லவோ பொறுப்புள்ள படைப்பாளியின் கடமை.
ஊமை விழிகள் திரைப்படத்தில் கொடூர வில்லன் ரவிச்சந்திரன் உடல் தீப்பற்றி எரியும் போது, அவனை காப்பாற்ற தன் உடலையும் காயப்படுத்திக் கொள்வார் ஜெய்சங்கர். கண் முன்னால் ஓர் உயிர் பறிபோவதை முடிந்த மட்டும் தடுக்க முயற்சிப்பவனே உண்மையான கதாநாயகன். அந்த உணர்வோடு வெளிவந்த திரைப்படங்களும் உண்டு. மலைஉச்சியிலிருந்து தன்னை கொல்ல வரும் வில்லன் தவறிப் போய் கீழே விழ அவனை காப்பாற்றப் போராடும் கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் ஐ படத்திலோ, கொடூர புத்தி வில்லனுக்கு மட்டுமல்ல, அவனை விட பன்மடங்கு கதாநாயகனுக்கு உண்டு என்று காட்டுகிறது. அந்த கொடூரத்தின் உச்சமே கதாநாயகத்தனம் என்று பிஞ்சுகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் நம்பச் செய்கிறது. வணிக நலனிற்காக எத்தகைய கொடூர நஞ்சையும் கக்கும் இந்த சங்கர்த்தனம்.
படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருக்கும் சந்தான சாக்கடை
எப்போதுமே உழைக்கும் மக்களின் தொழிலை, அவர்களின் உருவ அமைப்பை, நிறத்தை, பெண்களில் உடல் அங்கங்களை இழிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே நகைச்சுவை பண்ணத் தெரிந்த சந்தானத்தின் வசனங்கள் சங்கரின் கொடூர வணிக புத்திக்கு மிகவும் உதவியிருக்கிறது. ஒவ்வொரு வில்லனின் முகமும் அலங்கோலமாக சிதைந்தவுடன் சந்தானம் பேசும் மட்டமான பகடி வசனங்களை சான்றோர் உலகம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக, கால் பெருத்து காணப்படும் ஒரு வில்லனைப் பார்த்து இனிமேல் நீ ஜட்டி போட முடியாது என்று சொல்லும் காட்சியில், பண்பட்ட சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாமோ என்கிற அய்யம் ஏற்படுகிறது. உடல் முழுவதும் கருகின வில்லனின் அருகில் சென்று, எப்படியிருந்த நீ இப்படி ஆயிட்ட என்று பகடி செய்யும் கொடூரம் சங்கர் படத்தில் மட்டுமே சாத்தியம். உண்மையில் அமில வீச்சிற்குள்ளான‌ பெண்கள், தன்னுடய நிலை யாருக்கும் வரக்கூடாது , என்னை இந்த நிலைக்கு உள்ளாக்கிய அவனுக்கு கூட இந்த நிலை வரக்கூடாது என்று சொன்னார்களே, அவர்களின் உயர்ந்த குணம் எங்கே? சிதைந்து போன முகங்களை வைத்து சில்லறை திரட்டும் சங்கரின் வணிக புத்தி எங்கே?
அமெரிக்கா மூளையில் உதித்த பிரம்மாண்ட கொடூரம்
உடலை சிதைத்துப் பார்க்கும் மனநிலை அந்நியன் படத்திலும் வெளிப்படும். இல்லாத கருட புராணத்தை சொல்லி பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக கொலை செய்து பார்த்தவர்தான் இந்த சங்கர். இப்போது, இல்லாத புது புது நோய்களை செயற்கையாக உருவாக்குவதும், புதிதாக கொடூர வில்லன்களையும், அகோர தண்டனைகளையும் சிந்திப்பதும், அதற்காக கோடிக்கணக்கில் செலவிடுவதும்தான் இவரது சாதனை. நம் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சனையாக இருக்கக் கூடிய தேசிய இனச் சிக்கலையோ, சாதி பிரச்சனைகளையோ , ஆணாதிக்க சிந்தனைகளையோ திரைப்படமாக எடுக்க துணிச்சல் இல்லாத இந்த பிரம்மாண்ட இயக்குனர் இந்தியாவிற்காக சிந்திப்பவர் இல்லை. மூன்றாம் உலக நாடுகளை ஊனமாக்க வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு கலப்பட மருந்துகளை தயாரித்து விற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் சந்தைநலனிற்காக மட்டுமே சங்கரின் மூளை சிந்திக்கும். இது அவருக்கு அன்னிச்சை செயல் போன்று, அவரை அறியாமல் நடைபெறும். கலப்பட மருந்துகளால், பல்வேறு உயிர்களை இழந்து கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஏழைநாட்டில், மருந்து கலப்படம் செய்வதை கதாநாயக பிம்பத்தோடு காட்டியிருப்பது எவ்வளவு பெரிய குற்றம்.
திருநங்கைகளை மீண்டும் தெருநங்கைகளாக்கும் சங்கரின் முயற்சி
திருநங்கைகள் என்றால் பாலியல் தொழிலாளிகள், பிச்சையெடுப்பவர்கள் போன்ற பொது புத்தியிலிருந்து தமிழக மக்கள் விடுபட்டு வரும் இந்த காலகட்டத்தில், மீண்டும் மக்களை மூன்றாம் தர குடிகளாக மாற்ற முயற்சித்திருக்கிறார் சங்கர். ஆண் தீண்டலுக்காக ஏங்குபவர்களாக திருநங்கைகளாக சித்தரிப்பதும், திருநங்கையை கதாநாயகன் கேவலமாகப் பார்ப்பதும், பாட்டு பாடுவதும் அறிவுலகின் மீது கல் எறியும் முயற்சி.
எதார்த்த சினிமாவை நோக்கி இன்றைய இளைஞர்கள் சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில், அபத்தமான சினிமாத்தனமும், ஆபத்தான சங்கர்த்தனமும் நிறைந்த பிற்போக்கு திரைப்படம் ஐ. பகுத்தறிவு உலகம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டியது காலத்தின் கடமை. பெருமாள் முருகனுக்கு ஆதரவாக போராடுபவர்களும், எதிராகப் போராடுபவர்களும் அமில வீச்சிற்கு ஆதரவான இத்திரைப்படத்திற்கு எதிராகவும் போராட வேண்டும்.
எழுத்தாளர்: t;ஜீவசகாப்தன் பிரிவு: திரைவிருந்துபிரிவு:  //keetru.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக