செவ்வாய், 17 மார்ச், 2015

பெங்களூரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம்! பின்னணியில் மணல் கடத்தல் மாபியா?

பெங்களூருவில் வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக, பெங்களூரு காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, கோலார் மாவட்டத்தில் மக்கள் போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு நகரின் கோரமங்கலம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி (35) திங்கள்கிழமை (இரவு) மர்மமான முறையில் தனது வீட்டில் இருந்த ஃபேனில் தொங்கியபடி இறந்து கிடந்தார். வர்த்தக வரி விதிப்பு அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த இவர், சமீப காலமாக மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து செய்திகளில் இடம்பெற்றிருந்தார்.

திங்கள்கிழமை காலை பணிக்கு சென்ற ரவி, காலை 11 மணியளவில் அலுவலகத்திலிருந்து திடீரென வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாலையில் ரவியின் மனைவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. வீட்டினுள் சென்றபோது, ரவி இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததாக ரவியின் மாமனார் அனுமந்தரய்யப்பா போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு பெங்களூரு காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதற்கட்டமாக இந்த மரணத்தை தற்கொலையாகவே கருத வேண்டியுள்ளது. கொலைச் சதிக்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
அதிகாரி ரவி, அவரது அறையில் உள்ள ஃபேனில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்தார். சம்பவ இடத்தில் தற்கொலை குறிப்புகள் எதுவும் இல்லை" என்றார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜெ. ஜார்ஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது பேசிய அவர், "ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி நேர்மையானவர். தனது பணியிலிருந்து என்றும் அவர் தவறியதில்லை. அவரது இறப்பு கவலை அளிப்பதாக உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலிலும் போலீஸார் விசாரிக்கின்றனர். மணல் கடத்தலுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு, அவருக்கு எதேனும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததா? என்ற விவரம் எனக்கு தெரியவில்லை" என்றார்.
அடுக்கு மாடி குடியிருப்பு வளாகம் போலீஸார் கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டடத்துக்குள் வந்தவர்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது என்றார்.
கோலார் மாவட்ட மக்கள் போராட்டம்
அதிகாரி ரவியின் உடல் விக்டோரியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள், அதிகாரிகள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.
இதனிடையே, அதிகாரி ரவியின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தால் கோலார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்துள்ளது. கோலார் எம்.எல்.ஏ. வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனால், சம்பவ பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளன  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக