புதன், 4 மார்ச், 2015

பார்பன பனியா கும்பலின் இந்துத்துவாவை குறிவைத்து ஏன் தாக்கவேண்டும் ?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கருவறை நுழைவுப் போராட்டம், அரசு பதவிகளில் லஞ்சம் மற்றும் தலித் அமைப்புகள் குறித்து புதிய ஜனநாயகம் பத்திரிகையில் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான கேள்வி-பதில்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் வீறு பெறுவதன் அவசியத்தையும், இந்த அரசியல் அமைப்பே லஞ்ச ஊழலை ஊக்குவிப்பதாக இருப்பதையும், தலித் அமைப்புகளின் அரசியல் செயல்பாட்டு வரம்பையும் விளக்குகின்றன.
கேள்வி: பார்ப்பனர்களே தங்களது தவறைத் திருத்திக் கொண்டு சூத்திரர்களின் கருவறை நுழைவை அனுமதித்தால் உங்கள் போராட்டம் என்னவாக இருக்கும்?
இது நல்ல, வளமான கற்பனை மட்டுமல்ல, காலங்கடந்த கற்பனையும் கூட.
சூத்திரர்களும், பஞ்சமர்களும் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டு வந்தார்கள். இப்போது அத்தடை சட்டப்படி நீக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்றுள்ளது.
ஆனால், சட்டப்படியான அத்தடை நீக்கமும் அனுமதியும் கூட பார்ப்பனர்கள் தாங்களே தவறை உணர்ந்து திருத்திக் கொண்டதன் விளைவு அல்ல. பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் போராட்டங்களின் விளைவும் நிர்ப்பந்தமும்தான்.
அதேபோல் பஞ்சமர்களும், சூத்திரர்களும் கருவறை நுழைவதை அனுமதிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது உட்பட சம உரிமை பெறுவது, தாய்மொழி வழிபாடு போன்றவற்றை பார்ப்பனர்கள் தாங்களே உணர்ந்து திருத்திக் கொள்ளமாட்டார்கள் என்பதை நமது போராட்டங்களுக்கு அவர்கள் காட்டும் கொலை வெறி எதிர்ப்பே நிரூபிக்கிறது. ஆகவே, நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது அவர்களாகவே உணர்ந்து திருத்துவதாக இருக்காது; அந்தப் பிரமையும் நம்மிடம் கிடையாது. நமது போராட்டங்களின் விளைவும், நிர்ப்பந்தமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
பார்ப்பனர்களின் எதிர்ப்பால் நியமனம் பெற முடியாமல் விடப்பட்டுள்ள அனைத்து சாதியினருன் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)
இந்துக் கோவில் மற்றும் கருவறை நுழைவுப் பிரச்சினையில் இன்னும் விளக்கப்பட வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. பார்ப்பனர்கள் மட்டுமே தமது தவறை உணர்வது, திருத்திக் கொள்வது என்பதோடு இப்பிரச்சினை தீராது. பார்ப்பனரல்லாத – சத்திரிய, வைசிய வழிவந்த மேல் சாதியினரும் தமது தவறை உணர்ந்து திருத்திக்கொள்வது; பஞ்சமர் (தாழ்த்தப்பட்டவர்), சூத்திரர் தமது அடிமை விலங்கோடு அடிமை உணர்வைத் தகர்த்துத் தலை நிமிர்ந்து நிற்பது ஆகியவையும் நமது போராட்டத்தில் அடங்கும். பெரியாரும் தமது இறுதிக் காலத்தில் இந்த அம்சங்களை வலியுறுத்தி இருக்கிறார். இன்றைய சமூக நிலைமைகளும் இவற்றின் அவசியத்தைக் கோருகின்றன.
கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சூத்திர, பஞ்சம சாதிகளுக்குத்தான் இருந்தது. பார்ப்பனரல்லாத மேல் சாதியினருக்கு இத்தடை எப்போதுமே கிடையாது. சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சட்டப்படிதான் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர சமூக நடைமுறைப்படி அல்ல. பார்ப்பனர் மட்டுமின்றி, பார்ப்பனியத்தை ஏற்று ஆதாயம் அடையும் பார்ப்பனரல்லாத மேல் சாதியினரும் சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள் நுழைவதை இன்னமும் சமூக நடைமுறையின்படி தடுத்து வருகின்றனர்; இதற்கு கர்நாடகாவில் உள்ள பதனவாலு, தமிழகத்தில் உள்ள சிவகங்கை ஆகிய சமீபத்திய நிகழ்ச்சிகள் சான்றுகளாக உள்ளன.
ஆகவே, சூத்திரரும், பஞ்சமரும் சமூகநீதியும, சம உரிமையும் பெறவேண்டுமானால் பார்ப்பனரோடு, பார்ப்பனரல்லாத மேல் சாதியினரது ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும். சட்டப்படி பெற்ற உரிமையை நிலைநாட்டுவதற்குத் தமக்குள்ள அடிமை உணர்வைத் தகர்த்துத் தலைநிமிர்ந்து நின்று போராடுவதும் அவசியம்.
கோவில் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனருக்கு மட்டுமே இப்போது சட்டப்படிக்கு அனுமதி உண்டு; பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினருக்கும் இதற்கு அனுமதி கிடையாது; தடையும் தீண்டாமையும் தான் நிலவுகிறது. ஆகவேதான் பார்ப்பனர் மட்டுமே இத்தடை, தீண்டாமையைக் காப்பதற்கு மூர்க்கமாகப் போராடுகின்றனர். அதோடு நமது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரிடமிருந்தும் பரவலான ஆதரவு கிடைக்கிறது.
பார்ப்பன- பனியா கும்பலால் தலைமை தாங்கப்படும் இந்து மதவெறி பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டியது நமது உடனடி அரசியல் கடமையாகவும் உள்ளது. இக்காரணங்களால் இப்போதைக்குக் கருவறை நுழைவுக் கோரிக்கைக்குப் போராடுகிறோம்.
அதேசமயம் “திருவரங்கம் கருவறை என்ன? எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்குள் நுழைவதைக்கூட பார்ப்பனரல்லாத மேல் சாதியினர் தடுத்துத் தாக்கினரே? இதுதான் சமூகநீதியா? சம உரிமையா?” என்று பஞ்சமர் (தலித்துகள்), சூத்திரர் கேட்பது முற்றிலும் சரியே, நியாயமே. அவற்றுக்குப் பதில் சொல்வதும், தீர்வுகாணப் போராடுவதும் அனைத்துப் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களின் கடமையும் ஆகும்.
நமது போராட்டத்தில் இந்த அம்சமும் இணைந்திருப்பதால்தான் தி.க.–வின் வீரமணி போன்றவர்கள் ஆத்திரப்படுகிறார்கள்; அவதூறு பொழிகிறார்கள்.
கேள்வி: பதவிக்கு வருவதற்குமுன் ‘’நேர்மையாகவும், ஊழல் செய்யாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பேன்’’ என்று சொல்பவர்கள் பதவிக்கு வந்தவுடன் கொஞ்சநாள் கழித்து ஊழல், லஞ்சம் வாங்கி மக்களுக்கு எதிராக மாறிவிடுகிறார்கள் அதற்குக் காரணம் அவர்களது கொள்கையில் இருக்கும் பலவீனமா? அல்லது நமது அரசியல் மற்றும் அதிகார முறையில் இருக்கும் கோளாறா?
நேர்மையாகவும் லஞ்ச ஊழலில் ஈடுபடாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பவர்கள் இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையில் பதவிக்கு வரமுடியாது; அப்படியே தப்பித்தவறி பதவிக்கு வந்தால் ஒன்று நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டும் அல்லது அப்பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவர்; நேர்மையான, தூய்மையான கொள்கை உறுதி கொண்டவர்களைக் கூட ஆசையூட்டி, மாசுபடுத்தி சீரழித்துவிடக் கூடியதாக இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையும் சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பும் உள்ளன.
ஊழல் இரட்டையர்
‘ஓடறான் பாடு பிடி’ என்று ஓடும் திருடர்கள்.
http://truthdive.com/2012/09/04/corrupt-duo.html (கோப்புப் படம்)
‘தவிர்க்க முடியாது எந்த அமைப்பிலும் இக்குறை நிலவவே செய்யும்’ என்று மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுமளவுக்கு இது புரையோடிப்போயிருக்கிறது. அதாவது பதவிக்கு வரவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலிலும், மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை இன்றைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு அவசியமாக்கியுள்ளது.
ஆகவே, இந்த அமைப்பையை தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு முறையை ஏற்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த லட்சியத்தை உத்திரவாதப்படுத்தும் அமைப்பும் கொள்கையும் இல்லாமல் வெறுமனே நேர்மை, ஒழுக்கம், கொள்கை உறுதி, கறைபடியாத கைகள், மக்கள் நல்வாழ்க்கை போன்ற வாக்குறுதிகளைப் பிரகடனப்படுத்துபவர்களின் கொள்கை பலவீனமானதாக மட்டுமல்ல, பெரும்பாலும் பித்தலாட்டமாகவே உள்ளது.
அதோடு அந்த லட்சியம், கொள்கையை நேர்மையாகவும், உறுதியாகவும் பின்பற்றக் கூடியதுதான் என்று வாழ்விலும் செயலிலும் நடந்து காட்டி சோதித்தறியப்பட்ட தலைமை வேண்டும். அவற்றில் இருந்து விலகிச் சரிந்துபோகும் தலைமையை எதிர்க்கவும் கலகம் செய்யவும் தேவையான ஜனநாயக அமைப்பும் துணிச்சல்மிகு அணிகளும் வேண்டும். தமது சொந்த உழைப்பால் வாழும் உழைக்கும் மக்கள், குறிப்பாக பாட்டாளிகளுக்கே அத்தகைய துணிச்சலும், வீரமும் இருக்க முடியும். இப்படிப்பட்டவர்களை முதுகெலும்பாகக் கொள்ளாமல் பிழைப்புவாதப் பிரமுகர்களையும், பொறுக்கி (உதிர்) வர்க்க அணிகளையும் கவர்ச்சிவாத அரசியல் கொள்கைகளையுமே இன்றைய அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. ஆகவே அவர்கள் பதவிக்கு வரும் முன்பு ஒன்றாகவும், வந்தபின் வேரொன்றாகவும் நடந்து கொள்வதில் வியப்பில்லை.
கேள்வி: தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்கப் பாடுபடுவதாகச் சொல்லி அமைப்பு நடத்தும் டி.பி.ஜ. (தலித் சிறுத்தைகள் இயக்கம்) திருமாவளவன் போன்ற தோழர்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு, கருத்து என்ன? இப்படியான அமைப்புகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?
தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துக்களுக்கானவை என்கிற பெயரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான அமைப்புகள் தமிழ் நாட்டில் மட்டும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வை.பாலசுந்தரம், சுந்தரராஜன், ஜான்பாண்டியன், இளையபெருமாள், தமிழரசன் போன்ற பிழைப்புவாத, ஆளும்வர்க்க (மேல்சமூக)க் கைக்கூலிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இவை அதிகபட்சமாகச் சாதிப்பதெல்லாம் அம்பேத்காருக்கு சிலைவைப்பதும் விழா நடத்துவதும், நன்கொடைகளை வசூலிப்பதும், அறிக்கைகள் பிரசுரங்கள் வெளியிடுவதும், தங்களுக்குச் சொந்த ஆதாயம் தேடிக் கொள்வதும்தான்.
கூடவே, நடுத்தர வர்க்கத்தினராக மாறிவிட்ட தாழ்த்தப்பட்ட சில தனிநபர்களின் நலன்களுக்காக நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறுவதற்கான அரசியல் தரகு வேலை பார்க்கின்றன. மற்றபடி கிராமப்புறங்களில் கூலி ஏழை விவசாயிகளாகவும், நகரப் புறங்களில் உதிரிப் பாட்டாளிகளாகவும் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் திரட்டி, முறைப்படியான அமைப்பைக் கட்டுவதற்கு அவர்கள் முயலுவதுமில்லை; அம்மக்கள் அன்றாடம் சந்திக்கும் சாதி ஒடுக்குமுறை, சுரண்டல்களுக்கு எதிராக, நேரடியாகக் களத்தில் இறங்கித் தலையீடு செய்து போராடியதும் இல்லை. ஆகவே தாழ்த்தப்பட்டவர் விடுதலைக்கான போராட்டங்களில் அவற்றை நம்பிக் கூட்டுச் சேர முடியாது என்று கருதுகிறோம்.
ஆனால், மேற்கண்ட அமைப்புகளின் போக்குகள், நடைமுறைகளுக்கு மாறாக தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி அரசியல், சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட உறுதி பூண்டு தலித் சிறுத்தைகள் இயக்கம், இம்மானுவேல் பேரவை போன்ற சில புதிய அமைப்புகள் தோன்றியுள்ளன. இத்தகைய நடைமுறையில் உறுதியோடிருக்கும் பட்சத்தில் இப்புதிய அமைப்புகளை ஜனநாயக சக்திகளாகக் கருதி நேர்மறையில் அணுகி, போராட்டங்களில் ஐக்கியப்படுவதுதான் சரியானது என்று கருதுகிறோம். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக