வியாழன், 26 மார்ச், 2015

மிரட்டலுக்கு பயந்து வீடு மாறிய வேளாண் அதிகாரி குடும்பம்

திருநெல்வேலி: நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், அவிழாத மர்ம முடிச்சுகள் பல உள்ள நிலையில், வழக்கை, 'குளோஸ்' செய்து, அ.தி.மு.க.,வினரை காப்பாற்றும் நோக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வேளாண் துறையில், டிரைவர்கள் நியமன விவகாரத்தில், நெருக்கடி காரணமாக, நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தமிழகத்தில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக நியமனம் ஆன, ஏழு டிரைவர்களிடம் பணம் பெற்ற விவகாரம்தான் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க.,வினரிடம், அரசு வேலைக்காக, இரண்டு லட்சம்; மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்தவர்கள், மொத்தம் 32 பேர்.


பணம் 'ரிட்டர்ன்':

வழக்கமாக, இதுபோல் வேலைவாய்ப்பிற்காக கொடுக்கப்படும் தொகை, திரும்ப கிடைப்பது அரிது. ஆனால், அதிகாரியின் மறைவினால், வேலை கிடைக்காதவர்களுக்கு, பணம் திருப்பி தரப்பட்டதாக கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், அவிழாத முடிச்சுக்களாக, சில கேள்விகள் உள்ளதாக, முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர். முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன், நெல்லை சந்திப்பில் உள்ள அ.தி.மு.க., பிரமுகரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை, பிரமுகர் வீட்டுமுன் நிறுத்திவிட்டு, மொபைல் போனில் பேசியுள்ளார். பணப்பிரச்னையில் திட்டியதால், அருகிலிருந்த ரயில் கடவுபாதைக்கு சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பிற்குப் பின், மோட்டார் சைக்கிளை தேடிய போலீசார், அதை, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டு முன் கண்டுபிடித்தனர்.

* அதை, வழக்கின் ஒரு ஆவணமாக வைத்துக்கொள்ளாமல், அதை, முத்துக்குமாரசாமி குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்?
* முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, அவர் மகன்களிடம், குடும்ப பிரச்னையில், தற்கொலை என்பது போல், கடிதம் பெறச்சொன்ன அதிகாரிகள் யார், யார்?
* இந்த அதிகாரிகள் குறித்து, என்ன விசாரணை நடத்தப்பட்டுள்ளது?
* முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு நச்சரித்த, தகாத வார்த்தைகளால் திட்டிய அ.தி.மு.க.,வினரில், ஒருவருக்கு கூட, இதுவரை, 'நோட்டீஸ்' அனுப்பி விசாரிக்காதது ஏன்? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், முத்துக்குமாரசாமி வீடு வாங்கிய விஷயத்தை, வருமானவரித் துறையின், 'நோட்டீஸ்' உடன் ஒப்பிட்டு, பூதாகரமாக்குவதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். முத்துக்குமாரசாமி, பலராலும் மிரட்டப்பட்டதற்கு, ஆதாரங்கள் குவிந்து கிடக்கிறது ஆனால், வழக்கை இழுத்துமூடும் நோக்கிலும், அ.தி.மு.க.,வினரை காப்பாற்றும் நோக்கிலும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடப்பதாகவும், முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் குமுறுகின்றனர்.

ஆபத்து ஏற்படும்:

இதற்கிடையில், முத்துக்குமாரசாமி இறப்பிற்குப் பின், குடியிருந்த வீட்டை, மனைவியும், மகன்களும், காலி செய்து விட்டனர். இதுவரை, தாங்கள் அமைதி காத்ததால், தங்களுக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. நிலைமை மாறி, அதிகாரிகள், கட்சியினர் சிக்கிக்கொள்ளும் சூழல் வந்தால், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், வீட்டை காலி செய்து, தூத்துக்குடியில் உள்ள முத்துக்குமாரசாமி மைத்துனர் மகாதேவன் வீட்டிற்கு சென்றனர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக