வெள்ளி, 27 மார்ச், 2015

மேகதாது அணை கட்ட தடை விதிக்க உச்ச நீதிமன்றில் தமிழகம் கோரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. புதுடெல்லி, கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப் படி வழங்குவது இல்லை. தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விடுகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் புதிய அணைகளை கட்ட கர்நாடகம் திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி இருக்கிறது.


தமிழகம் எதிர்ப்பு

இதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து உள்ளது.

கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழ்நாட்டில் நாளை (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிப்பது இல்லை. காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தருவது இல்லை. கர்நாடக அணைகள் நிரம்பியதும் உபரி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. அந்த உபரி நீரையும் தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

விவசாயிகள் அச்சம்

இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டுவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கு காவிரி தண்ணீரை நம்பி இருக்கும் நிலை உள்ளது. விவசாயத்துக்கு காவிரி தண்ணீரை நம்பி இருக்கும் பகுதிகளில், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது. டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பு அடையும் நிலை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதற்கான வரைவு திட்டத்துக்கு திடீரென்று 25 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பது மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.

கர்நாடகத்தை தடுக்க வேண்டும்

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ள போது, கர்நாடக அரசு இதுபோன்ற அத்துமீறலான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

எனவே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், தமிழகத்தில் வறட்சி ஏற்படும் நிலையை தடுக்கும் வகையிலும், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக