திங்கள், 16 மார்ச், 2015

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் அர்விந்த் கேஜ்ரிவாலின் அடுத்த கட்டமும்?

அரவிந்த் கேஜ்ரிவால்குஜராத்தில் தயாரிக்கப்பட்ட மோடி ஹோலோகிராம் டில்லியில் பொசுக்கென்று மறைந்து விட்டது. தனது சொந்த முகத்தையே முகமூடியாக அணிந்து கொள்ள விரும்பும் சுயமோகியும், உடல் முழுவதும் தனது பெயரையே எழுதி மினுக்கிக் கொண்டிருந்த மனநோயாளியுமான மோடிக்கு, தனது பத்து லட்சம் ரூபாய் கோட்டையும் அதன் மீது நெளிகின்ற ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்ற பெயரையும் சேர்த்து ஏலம் விட்டால்தான், “பெயரை”க் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஆம்-ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்
“எனக்குப் பயந்து ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்று டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் திமிர்ப்பேச்சு பேசிய மோடி, ‘தனக்குப் பயந்து’ தானே ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு மோடியின் சட்டையைக் கழற்றிய ஒரு காரணத்துக்காகவாவது டில்லி மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 46.63% ஆக இருந்த பா.ஜ.க.-வின் வாக்குகள், 32.2% க்கு வீழ்ந்து விட்டன. “அராஜகவாதி, ஆளத்தெரியாதவன், ஓடுகாலி, நகர்ப்புற நக்சல், குடியரசு தினத்தை அவமதித்தவன்” என்று மோடியும் அமித் ஷாவும் பலவாறாக கேஜ்ரிவாலை அர்ச்சித்துப் பார்த்தனர். இவை அனைத்தையும் கேஜ்ரிவாலுக்கு சூட்டப்பட்ட புகழாரங்களாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று இந்த மூடர்கள் எதிர்பார்க்கவில்லை.
“தேசியப் பெருமிதம், வளர்ச்சி, ஒழுங்கு” என்பன போன்ற சொற்களின் மீது தான் ஏற்றியிருந்த சாம்பிராணி நெடியை, தனது 8 மாத கால ஆட்சியே இறக்கி விட்டது என்பதையோ, தன்னுடைய பஞ்ச் டயலாக்குகள் நொந்த மாட்டைக் கொத்துவது போல, மக்களைக் கொத்தி அவர்களது ஆத்திரத்தைக் கிளறி விடுகின்றன என்பதையோ மோடி புரிந்திருக்கவில்லை.
‘56 அங்குல மார்பு கொண்ட ஆம்பிளை’ என்ற திமிரில், “ஜோ தேஷ் கா மூட் ஹை, வஹி தில்லி கா மூட் ஹை” (தேசத்தின் மனநிலை எதுவோ அதுதான் தில்லியின் மனநிலை) என்று தேர்தல் பிரச்சாரத்தில் பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டார் மோடி. “தில்லியின் மனநிலை எதுவோ அதுதான் தேசத்தின் மனநிலை” என்று அதே தோசை திருப்பிப் போடப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்றோ, வெற்றிக்குக் காரணம் நான்தான் என்று காட்ட முயன்றால், தோல்விக்கான பொறுப்பிலிருந்தும் தப்ப முடியாது என்றோ மோடி யோசிக்கவில்லை. பஞ்ச் டயலாக்குகள் மூளைக்குள் மின்னலாக வெட்டும் தருணங்களில், மூளையின் மற்ற பகுதிகள் அனைத்தும் செயலிழந்து விடும் போலும்!
மோடி - அமித் ஷா கூட்டணி
ஆணவமும் செருக்கும் கொண்ட மோடி – அமித் ஷா கூட்டணி தில்லியில் செருப்படி பட்டு மண்ணைக் கவ்வியது.
சொற்களைக் கண்டு மயங்கி ஏமாறும் மக்கள், “சொற்களை வைத்து சோறு பொங்க முடியாது” என்பதையும் ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளத்தானே செகிறார்கள். 2013 தேர்தலில், டில்லி எல்லைக்குட்பட்ட 14 கிராமப்புற தொகுதிகளில் 13-ஐ பா.ஜ.க. வென்றது. இப்போது 14-லும் ஆம் ஆத்மி வென்று விட்டது. காரணம், விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதி வைக்கும் மோடியின் நிலப்பறி அவசரச் சட்டம்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக மோடி பெற்ற வாக்குகளை, மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கத்துக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என்று வியாக்கியானம் செய்தன ஆளும் வர்க்கங்கள். “குஜராத்தில் இலவசமே கிடையாது” என்று பெருமை பொங்க பிரச்சாரம் செய்தார் மோடி. ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சியில் குறைக்கப்பட்ட தண்ணீர், மின்சாரக் கட்டணங்களை பா.ஜ.க. வின் கட்டுப்பாட்டிலிருந்த டில்லியின் கவர்னர் ஆட்சி பழையபடி உயர்த்தியது. விளைவு, மாத வருவாய் ரூ.13,500 க்கு கீழ் உள்ள டில்லியின் 60% வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர்.
டில்லியின் 40 சதவீத மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது கணிசமான குடிசைப் பகுதிகளை நகரை விட்டு அகற்றிய பின்னரும் இதுதான் நிலைமை. இந்த குடிசை வாழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிரண் பேடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதிகளை ஒழிப்போம். மோடி அனைவருக்கும் வீடு தருவார்” என்று பேசினார்.
அவர் பேசிய இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியம் மட்டும்தான் மக்களின் காதில் விழுந்திருக்கிறது. இரண்டாவது வாக்கியம் பொய் என்பது அவர்களுக்குத் தெரியும். “பா.ஜ.க. முதலாளிகளின் கட்சி” என்று டில்லி மக்கள் பேசுவதைப் பரவலாகக் கேட்க முடிந்தது என்கின்றன பத்திரிகைகள். இது மக்கள் தமது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்த கொண்ட உண்மை. நாடாளுமன்றத் தேர்தலின்போது எந்த ஆடம்பரத்துக்கு மக்கள் மயங்கினார்களோ, அது சில மாதங்களிலேயே அருவருக்கத்தக்கதாகி விட்டது. மோடிக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த மக்களின் வர்க்கக் கோபத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு வாகனமாகியிருக்கிறது.
விளக்கமாத்துக்குத்தான் நல்லகாலம் !
தூய்மை இந்தியா விளம்பரங்களைக் காட்டி, “மோடியின் ஆட்சியில் விளக்கமாத்துக்குத்தான் நல்லகாலம் பிறந்திருக்கிறது” என்று கேலி செய்தார் நிதிஷ் குமார். தற்போது டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வேறொரு பொருளில் விளக்கமாத்துக்கு நல்லகாலம் பிறந்திருப்பதைக் காட்டுகின்றன.
தாங்கள் பா.ஜ.க.வைப் போல எதிர்மறையாகப் பிரச்சாரம் செய்யாமல், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி நேர்மறையாகவும் நாகரிகமாகவும் பிரச்சாரம் செய்ததாகவும், அதற்குக் கிடைத்த பலன்தான் இந்த வெற்றி என்றும் ஆம் ஆத்மி கூறிக்கொள்கிறது. உண்மை அதுவல்ல; காங்கிரசு கட்சி பத்தாண்டு காலம் உழைத்து மோடியின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது. மோடியோ, ஆம் ஆத்மியின் அமோக வெற்றியை எட்டே மாதங்களில் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்.
"அமித்து, கோட் ஆர்டர் கேன்சல்"
“அமித்து, கோட் ஆர்டர் கேன்சல்”
இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியிருப்பது, மோடியின் 8 மாத ஆட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு மட்டுமல்ல; காங்கிரசு உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகள் மீதும் போலீசு-அதிகார வர்க்கம்-நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையும் வெறுப்பும் டில்லி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன. இது, தோற்றுப்போன இந்த அரசமைப்பு அளித்திருக்கும் வெற்றி என்றும் கூறலாம். நம்பிக்கை இழந்த மக்களின் நம்பிக்கைதான் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி. அதனால்தான் வெற்றியின் இந்தப் பரிமாணம் தன்னை அச்சுறுத்துவதாகக் கூறுகிறார் கேஜ்ரிவால்.
ஒரு தேர்தல் வெற்றி என்ற முறையில் பார்த்தால், கேரளம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில், துவக்க காலத்தில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றியோடு கூட ஒப்பிடும் அளவு இது ‘சாதனை’ அல்ல. இந்திய நாடாளுமன்ற அரசியலின் இளமைக்காலத்தில், ஜனநாயக அரசமைப்பு குறித்த பிரமைகள் தகர்ந்து விடாத காலத்தில், விடுதலைப் போராட்டத்தின் மரபுரிமையாக காங்கிரசு கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், பெறப்பட்ட வெற்றிகள் அவை.
இருந்த போதிலும், மோடி – அமித் ஷா கும்பல் தங்களைப் பற்றி உருவாக்கியிருக்கும் ‘வெல்லப்பட முடியாதவர்கள்’ என்ற பிம்பத்தை இது தகர்த்திருப்பதால், இந்த வெற்றியின் பரிமாணம் பெரிதாகத் தெரிகிறது. 70 க்கு 67 என்பது எண்ணிக்கை அளவில் நிச்சயமாகப் பெரிய வெற்றிதான் என்ற போதிலும், வெற்றியின் அரசியல் உள்ளடக்கத்தை எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை.
நம்பிக்கை நட்சத்திரமா ஆம் ஆத்மி?
பார்ப்பன பாசிசத்தின் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்தவர்களுக்கும், இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மேற்பட்ட ஒரு அரசியல் இலட்சியத்தை அடைய இயலும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சி புதிய நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.
“இந்த அரசமைப்பை அதன் கோட்பாடுகளுக்கு ஏற்ப இயங்க வைக்க தீவிரமாக முயற்சிப்பதன் மூலம், அதன் அதிகபட்ச சாத்தியங்களை கறந்து எடுப்பதுடன், அதன் முரண்பாடுகளையும் ஆம் ஆத்மி கட்சி அம்பலப்படுத்துகிறது.”
“தண்ணீர், மின்சாரம், சாலை, மருத்துவம், கல்வி போன்ற மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற விசயங்கள் குறித்து முன்னெப்போதும் கண்டிராத வகையில் மக்களுக்கு அரசியல் கல்வி அளிக்கிறது.”
– இவை ஆம் ஆத்மி எனும் நம்பிக்கை நட்சத்திரத்தை விதந்து அறிவுத்துறையினர் தெரிவித்து வரும் கருத்துகளில் சில. நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகத்தான், ஆம் ஆத்மியைப் போன்ற கட்சிகள் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் என்.ஜி.ஓ. க்கள் என்பதையும், கேஜ்ரிவால் முன்வைக்கின்ற அரசியல் ‘மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டது’ என்பதையும் ஏற்கெனவே பு.ஜ.வில் எழுதியிருக்கிறோம். (பார்க்க: பெட்டிச் செய்தி)
ஆம் ஆத்மி – அவதார ரகசியம்!
அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கமாக இருக்கட்டும், அதிலிருந்து கிளைத்து எழுந்த ஆம் ஆத்மி கட்சியாக இருக்கட்டும். இவை சுயேச்சையாகவோ தற்செயலாகவோ பிறப்பெடுத்தவை அல்ல.
தனது உலகப் போர்த்தந்திரத்துக்குத் தேவைப்படும் நாடுகளில் தலையீடுகள் செய்வதற்கும், அரசியல் எழுச்சிகளையும் வண்ணப் புரட்சிகளையும் உருவாக்கி ஆட்சிக் கவிழ்ப்பு செவதற்கும், ’80-கள் முதற்கொண்டே குடிமைச் சமூகங்களைத் தனது அரசியல் – அமைப்புக் கருவியாக அமெரிக்கா பயன்படுத்தி வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளாகத் திணிக்கப்பட்டுவரும் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின்படி, இந்தியா உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூகத்துறைகளின் சட்ட திட்டங்கள், அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அரசுசாரா நிறுவனங்களும் குடிமைச் சமூக அமைப்புகளும் அரசு அதிகாரத்தின் அங்கமாகியிருக்கின்றன.
கேஜ்ரிவால், அன்னா ஹசாரா, கிரண் பேடி
ஆர்.எஸ்.எஸ்.-ன் பின்புலத்தோடு, கார்ப்பரேட் ஊடகங்களால் தயாரித்து வழங்கப்பட்ட “ஊழலுக்கு எதிரான இந்தியா” இயக்கம் டெல்லி – ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தில் கிரண் பேடி, கேஜ்ரிவால் மற்றும் அன்னா ஹசாரே (கோப்புப் படம்)
முறைசார்ந்த அமைப்புகளான கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் இலஞ்ச-ஊழல், கிரிமினல் நடவடிக்கைகள் காரணமாக அவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேர்மட்ட ஜனநாயகம் (grassroot democracy) மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு சேர்த்தல் (Empowerment of people) என்ற பெயர்களில் குடிமைச் சமூக அமைப்புகள் இதனை நியாயப்படுத்திக் கொள்கின்றன. கேஜ்ரிவால் முன்வைக்கும் ஜன் லோக்பால் முதல் மொகல்லா சபாக்கள் வரையிலான “ஜனநாயக” அமைப்புகள் இந்த அடிப்படையிலானவைதான்.
கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கை, நமது நாட்டின் அரசியல் – பொருளாதார – சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி முற்றச் செய்திருக்கின்றன. அரசியல் – பொருளாதார – சமூக கட்டமைப்பு அசாதாரணமான நெருக்கடியில் சிக்கி அதன் உறுப்புகள் அனைத்தும் அவற் றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாமல் எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டன. இந்தக் கட்டமைப்பை நியாயப்படுத்தி வந்த ஆளும் வர்க்க சித்தாந்தங்களும் நெறிமுறைகளும் தோற்றுப்போய் அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இத்தகைய சூழ்நிலையில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை நிறுவனமயப்படுத்துவதற்கும், இந்த அரசமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் என்.ஜி.ஓ. க்கள் எடுத்திருக்கும் அரசியல் அவதாரம்தான் ஆம் ஆத்மி கட்சி.
புனித முதலாளித்துவம்?
ஆம் ஆத்மியின் அரசியல் இதனைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. “வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல். இது சித்தாந்தங்கள் முடிவடைந்துவிட்ட காலம். நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. தனியார்மய எதிர்ப்பு, உலக வர்த்தக கழக எதிர்ப்பு தேவையில்லை. காரியம் நடப்பதற்கு எது பொருத்தமோ அதைச் செய்வோம்”. இவையெல்லாம் ஆம் ஆத்மியின் ‘நிலைப்பாடுகள்’.
இந்நிலைப்பாடுகளிலிருந்து மட்டும் அல்லாமல், டில்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி எப்படி சாதித்தது என்பதை அவர்களுடைய நடைமுறையின் ஊடாகவே நாம் பரிசீலித்துப் பார்க்கலாம்.
தேர்தல் கட்சிகள் கையாளுகின்ற வழமையான சாதி, மத அரசியலை நிராகரித்து, குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம், போலீசு – அதிகார வர்க்கத் தொல்லைகள், குடிசைகளை அப்புறப்படுத்துதல் போன்ற மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி, “வர்க்கம்” என்ற முறையில் மக்களை அணுகியதாகவும் அதற்குக் கிடைத்த வெற்றிதான் இது என்றும் ஆம் ஆத்மி கூறிக்கொள்கிறது.
கேஜ்ரிவாலுக்கு இந்த ‘வர்க்க அரசியல்’ ஞானோதயம் வந்த கதை என்ன? ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலை அன்னா ஹசாரேவின் போராட்டமாக வடிவமைத்த கேஜ்ரிவால், அரசியலை சாக்கடை என்று கூறிவந்தவர். அந்த “சாக்கடை”யில் இறங்குவது என்று முடிவு செய்ததும், ஊழலை மட்டும் சொல்லி ஓட்டு வாங்க முடியாது என்பதால், மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடத் தொடங்கினார்.
மின் கட்டண உயர்வு, தண்ணீர் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய கேஜ்ரிவால், அதற்கு அடிப்படைக் காரணமான தனியார்மயத்தை எதிர்த்துப் பேசவில்லை. “மின்சாரத்துக்கு அநியாய விலை வைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை சி.ஏ.ஜி. யின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், வாட்டர் மாஃபியாவின் பிடியிலிருந்து தண்ணீர் விநியோகத்தை விடுவிக்க வேண்டும்” என்று கூறி இப்பிரச்சினைகளை “ஊழல்-முறைகேடுகளை அகற்றுதல் – வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுதல்” என்று உலக வங்கி வடிவமைத்திருக்கும் சட்டகத்துக்குள் நிறுத்தினார்.
கேஜ்ரிவால் மின் கட்டணம்
மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால் துண்டிக்கப்பட்ட இணைப்பை, மீண்டும் ‘சட்டத்தை மீறி’க் கொடுக்கும் கேஜ்ரிவாலின் ‘கலக’ நடவடிக்கை (கோப்புப் படம்)
இருப்பினும், தனது 49 நாள் ஆட்சியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தணிக்கைக்கு உட்பட மறுத்தால் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, மின் கட்டணக் குறைப்பு ஆகிய கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தனியார்மய எதிர்ப்பாளர் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தின. ஆனால் தனது “கலக” நடவடிக்கைகளின் ஊடாக மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, கட்டண நிர்ணயம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அடிப்படைகளையோ, ஒழுங்குமுறை ஆணையத்தையோ, கட்டுமான மறுசீரமைப்பு கொள்கையையோ அவர் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியதில்லை.
இவற்றை மக்களுக்குப் புரிய வைப்பதன் ஊடாகவும் போராடுவதன் ஊடாகவும்தான் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். அத்தகைய புரிதலின் வழியாகத்தான் மக்கள் அதிகாரம் என்பதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால், தனியார்மயம் என்ற பிரச்சினையையே பேசாமல் தவிர்ப்பதன் மூலம், ஆம் ஆத்மி கட்சி, தனியார்மயக் கொள்கையை இயல்பானதாக்குகிறது. கட்டணக் குறைப்பைத் தனது சாதனையாகக் காட்டி, மக்களைச் செயலற்ற பார்வையாளர்களாக இருத்தி வைக்கிறது.
லோக்பாலை உருவாக்குவதன் மூலம் ஊழலை ஒழித்து அரசமைப்பைத் தூய்மைப்படுத்த முடியும் என்ற பிரமையை உருவாக்கியதைப் போலவே, சமூக நலனுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு, இயங்கும் “புனித முதலாளித்துவத்தை” உருவாக்க முடியும் என்ற பொய்மையையும் பரப்புகிறது ஆம் ஆத்மி. தோற்றுப்போய் நிலைகுலைந்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கும் இந்த அரசமைப்பைச் சீராக்க முடியும் என்ற பிரமையையும் தோற்றுவிக்கிறது.
02-caption-1ஆகவே, “ஆம் ஆத்மி மோடியை வெற்றி கொண்டு விட்டது” என்று மட்டும் இத்தேர்தல் முடிவை மதிப்பிடுவது தவறு. காங்கிரசு உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து, மோடியின் மீதும் வெறுப்புற்றிருந்த பெரும்பான்மையான மக்களின் மனதில், தேர்தல் அரசியல் மீதும், இந்த அரசமைப்பின் மீதுமான நம்பிக்கையைப் புதுப்பிப்பதில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதே நம் கவனத்துக்குரியது.
இந்த அரசமைப்பை அம்பலப்படுத்துகிறதா, பலப்படுத்துகிறதா?
வேறொரு கோணத்திலிருந்தும் இதனைப் பார்க்கலாம். பிப்ரவரி 2014-ல், “ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றுவதை காங்கிரசும் பா.ஜ.க.வும் தடுத்த காரணத்தினால் பதவி விலகுவதாக”க் கூறினார் கேஜ்ரிவால். “49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்த ஓடுகாலி” என்று பாரதிய ஜனதா சாடியது. மக்களிடம் இந்த விமரிசனம் எடுபட்டதென்னவோ உண்மைதான். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் டில்லியில் ஆம் ஆத்மி தோற்றது.
சற்று யோசித்துப் பாருங்கள். ஜன் லோக்பால் சட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வும் காங்கிரசும் கூட்டு சேர்ந்தன. கட்டணக் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி நிறுவனங்கள் டில்லியை இருளில் அமிழ்த்தின. கீழ்நிலை போலீசாரே ஆம் ஆத்மி அரசை மிரட்டினார்கள் – இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம் தனது ராஜினாமா முடிவின் நியாயத்தை அவர் மக்களுக்கு விளக்கியிருக்கலாம். நாடாளுமன்ற அரசியலின் வரம்பை புரிய வைத்திருக்கலாம்.
மாறாக, “இனி ஒரு போதும் ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று தெருத்தெருவாகச் சென்று மன்னிப்பு கேட்டதன் பொருள் என்ன? “மக்களிடம் பணிவாக மன்னிப்பு கேட்டார்” என்று கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையைப் புகழ்ந்தன ஊடகங்கள்.
உண்மையில் அந்த மன்னிப்பு மக்களிடம் கேட்கப்பட்டதல்ல. ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வந்து விட்டு, ஒழுங்காக அதன் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காமல், ‘வரம்பு மீறி பாலிடிக்ஸ் பண்ணிய குற்றத்துக்காக’ அவர் ஆளும் வர்க்கத்திடம் மன்னிப்புக் கேட்டார் என்பதே உண்மை.
தற்போது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “நாங்கள் அகங்காரம் கொள்ள மாட்டோம்; பணிவாக நடந்து கொள்வோம்” என்று கேஜ்ரிவால் பேசியிருப்பதும் மக்களுக்குத் தெரிவிக்கும் செய்தி போலத் தோன்றினாலும், உண்மையில் அது ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அவர் மறைமுகமாக முன்வைக்கும் விஞ்ஞாபனம்.
மக்கள் என்ற முகமூடி!
தனது சந்தர்ப்பவாதத்தை மறைக்கும் முகமூடியாகவும் மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் கேஜ்ரிவால். 2014 ஜனவரி மாதம், காங்கிரசு ஆதரவு பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னர், கேஜ்ரிவால், “மக்களைக் கலந்தாலோசித்தார்”. அதாவது மக்கள் கொள்கை வழி நடப்பதை விரும்புகிறார்களா, காங்கிரசு ஆதரவுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பவாதத்தை விரும்புகிறார்களா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவெடுத்தார். 2014 பிப்ரவரியில் ராஜினாமா செய்வதற்கு முன்னரும் அதேபோல “மக்களைக் கலந்தாலோசிக்கத் தவறி விட்டேன்” என்பதுதான் கேஜ்ரிவாலின் சுய விமரிசனம்.
02-caption-1இந்த போலி ஜனநாயகத்தின் மீதான பிரமை, தேசவெறி, தேச முன்னேற்றம் குறித்த தப்பெண்ணங்கள், சாதி-மதவெறி, ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆளும் வர்க்கக் கருத்துகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் கடமை. ஆனால், மக்களிடம் பணிவாக நடந்து கொள்ளும் தோரணையில், “மக்களின் சொல்படி” ஆளும் வர்க்கக் கருத்துகளை வழிமொழிகிறது ஆம் ஆத்மி கட்சி.
நேரடியாகச் சொல்வதென்றால், மக்களின் பெரும்பான்மையினர் இந்து மதவாதத்துக்கு ஆட்பட்டிருந்தால், சாதி ஆதிக்கத்தை விரும்பினால், தேசவெறிக்கு ஆட்பட்டிருந்தால் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குவது ஆம் ஆத்மியின் அரசியல் அல்ல. முசாபர்பூர் குறித்து கேஜ்ரிவால் மவுனம் சாதித்தார். “மோடியை மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்” என்றார். “காப் பஞ்சாயத்துகளை நமது பாரம்பரிய கலாச்சார அமைப்புகள்” என்றார். காஷ்மீரில் நடக்கும் இராணுவ அடக்குமுறையை நியாயப்படுத்தினார்.
எது வர்க்க அரசியல்?
வர்க்க அரசியல், மக்கள் அதிகாரம், அமைப்பு முறையை (system) கேள்விக்குள்ளாக்குதல் என்பன போன்ற கம்யூனிச அரசியல் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பயங்கரமானதொரு யுத்தத்தை தொடங்கவிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே, இந்த அரசமைப்புக்கு சலாம் வரிசை எடுத்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசு கட்சிகளின் ஆளும் வர்க்க அரசியல் கருத்துகளை வழி மொழிந்து கொண்டே, சாதி-மதம் என்ற சட்டகத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் தேர்தல் அரசியலை, அதிலிருந்து நகர்த்திச் சென்று, தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் என்று மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நோக்கித் திருப்பி சாதனை புரிந்திருப்பதாகவும், இதுதான் வர்க்க அரசியல் என்றும் ஆம் ஆத்மி சித்தரித்துக் கொள்கிறது.
உழைக்கும் வர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினைகளைப் பேசுவதும் அவற்றில் சிலவற்றை தீர்த்துக் கொடுப்பதுமே வர்க்க அரசியல் அல்ல. (இதை ஆம் ஆத்மியை விட பலநூறு மடங்கு அதிகமாக போலி கம்யூனிஸ்டு கட்சியினர் செய்திருக்கிறார்கள்.) இந்த அரசமைப்பு ஆளும் வர்க்கத்தின் நலனுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராகவும் எந்தெந்த கட்சிகள், கொள்கைகள், நிறுவனங்கள் வழியாக எப்படியெல்லாம் செயல்படுகிறது என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி, தனது வர்க்கத்தின் நலனுக்காகப் போராடும் ஓர்மையை மக்களுக்கு ஏற்படுத்துவதே வர்க்க அரசியல். சாதி ஒழிப்பு, இந்து மதவெறி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, தேசிய இன, மொழி உரிமைகளை நிலைநாட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியதுதான் வர்க்க அரசியல்.
தனது வர்க்க நலன் எது என்பதைப் புரிந்து கொள்ளாத, தனது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காணவியலாத, அதற்கான போராட்டத்தில் ஈடுபடாத மக்களின் கையில் அதிகாரம் கிடைக்குமாயினும், அது ஏற்கெனவே உள்ள சமூக ஆதிக்க சக்திகளின் நலனுக்குத்தான் பணிவிடை செயும். ஆம் ஆத்மி முன்வைக்கும் ‘மக்கள் அதிகாரம்’ எனப்படுவதும் மொகல்லா சபாக்களும் அத்தகைய போராட்டத்தின் ஊடாக உருவானவை அல்ல, அப்படிப் போராடுவதும் அவற்றின் நோக்கமல்ல.
மாறாக, அவை இந்த அரசமைப்புக்கு எதிரான போராட்டம் எழும்பாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வால்வுகள். மக்களிடம் மதிப்பிழந்து போன இந்த அரசமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், பஞ்சாயத்து மட்டம் வரை தங்களது நேரடித் தலையீட்டை உத்திரவாதப் படுத்திக் கொள்வதற்காகவும், வேர்மட்ட ஜனநாயகம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனங்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின் 73 மற்றும் 74-வது சட்ட திருத்தங்கள் கூறுகின்ற “அதிகாரப் பரவலாக்கம்” என்ற இட்லி மாவைத்தான் கேஜ்ரிவால் “ஸ்வராஜ்” “மொகல்லா சபா” என்ற பெயர்களில் ஊத்தப்பமாகவும், தோசையாகவும் ஊற்றியிருக்கிறார் என்றும், இதற்காக கேஜ்ரிவாலை “நகர்ப்புற நக்சல்” என்றெல்லாம் சித்தரிப்பது அபாண்டமானதென்றும் மோடி ஆதரவு அதிதீவிர வலதுசாரிப் பத்திரிகையான ஸ்வராஜ்யா சுட்டிக் காட்டுகிறது.
பழைய மீட்பரின் கோட்டும்,புதிய மீட்பரின் மப்ளரும்!
இவையெல்லாம், ஆம் ஆத்மியின் அதிசயிக்கத்தக்க வெற்றி கண்டு மனக்கிளர்ச்சி கொண்ட அறிஞர் பெருமக்கள் அறியாத உண்மைகளல்ல. எனினும், திடீர் சாம்பார் மீதும் உடனடி லாட்டரி மீதும் அறிவாளிகள் மையல் கொள்வதொன்றும் புதிய விடயமில்லையே! எட்டு மாதங்களுக்கு முன் மோடியை மீட்பனாகக் கருதிய டில்லி மக்கள் இன்று கேஜ்ரிவாலை மீட்பனாக கருதியிருக்கிறார்கள். கேஜ்ரிவால் தங்களை எப்படி மீட்கப்போகிறார் என்று புரிந்து அவர்கள் வாக்களிக்கவில்லை. மீட்பார் என்ற நம்பிக்கையில் வாக்களித்திருக்கிறார்கள். மோடி என்ற மீட்பரை நம்பியதைப் போலத்தான்!
ஆம் ஆத்மி, கொள்கை தேவையில்லையென்று கூறும் கட்சி. உட்கட்சித் தேர்தலோ ஜனநாயகமோ இதுவரை இல்லை. தனது உறுப்பினர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத ஒரு தலைவர், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட ஒரு ஆட்சியை தான் வழங்கப்போவதாகக் கூறுகிறார். கொள்கைக்கும் ஜனநாயகத்துக்கும் மாற்றாக கேஜ்ரிவாலின் நேர்மை முன்நிறுத்தப்படுகிறது. மோடியும் கூட இப்படித்தானே முன்நிறுத்தப்பட்டார்.
ஆடம்பர ஆத்மியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.வினவு.com
- மருதையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக