சனி, 14 மார்ச், 2015

மனைவியை அடித்துக் கொன்ற ஐ.டி. இளைஞர்! மனைவி வேலைக்கு செல்ல விரும்பியதால் கொன்றாராம்

முதுகலை பட்டம் பெற்ற பெண் வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பியதால், தன் கணவராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகித் சர்மா. 32 வயதான இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ருச்சி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவர் வேலைக்கும் மகன் பள்ளிக்கும் சென்றுவிடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் ருச்சிக்கு மிகவும் போரடித்துள்ளது. எனவே வேலைக்கு போகவேண்டுமென்று கணவரிடம் பலமுறை கேட்டுள்ளார். இதற்கு மோகித் சர்மா சம்மதிக்கவில்லை. வீட்டில் இருந்து மகனை கவனித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக நேற்று முன்தினம் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மோகித் சர்மா தன் மனைவியை அடித்துக் கொன்று விட்டார். ஆனால், போலீசிடம் அவர் மனைவி குளியல் அறையில் விழுந்து அடிப்பட்டு இறந்து விட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார். ஆனால், தடயங்கள் அவருக்கு எதிராக இருந்தன.

குளியல் மற்றும் படுக்கை அறை முழுவதும் ரத்தக் கறைகள் காணப்பட்டன. இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. இந்நிலையில் நேற்றுதான் தன் மனைவியை அடித்து கொன்றதாக போலீசிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் மோகித் சர்மா.

வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பிய மனைவியை கணவரே அடித்துக்கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக