ஞாயிறு, 1 மார்ச், 2015

விற்பனைக்கு வந்துள்ள இந்தியா! நிலம் கையக படுத்தும் சட்டத்தை சொல்கிறோம்!

இந்தியா விற்பனைக்கு ரெடி!
புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான். அதேபோலத்தான் இருக்கிறது... 'நிலங்களைத்தானே எடுக்கிறோம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே’ என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும்.
100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு புதிய சட்டம் பிறந்தது. அது, 100 சதவிகிதம் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சட்டம் இல்லைதான். 'வெள்ளைக்காரனின் கொடுங்கோல் சட்டத்துக்கு, ஏதோ பரவாயில்லை’ என்றே ஏற்றுக் கொண்டனர் விவசாயிகள். ஆனால், 'சுத்தம் சுயம்பிரகாசம் நாங்கள், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மட்டுமே கொண்டு சொல்வோம், வெள்ளைக்காரர்களை விரட்டியது போதாது... கொள்ளைக்காரர்களையும் நாட்டைவிட்டு விரட்டுவோம், விவசாயிகளுக்கு எங்களைவிட்டால் வேறு தோழர்களே கிடையாது’ என்றெல்லாம் பசப்பு மொழிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தைவிட, மிகக்கொடுமையான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து விவசாயிகளை ஒரேயடியாக கொல்லத் துடித்தால் எப்படி?

அடிமை இந்தியாவில், 1894-ம் ஆண்டில் 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டு வந்தது, பிரிட்டிஷ் அரசு. வெள்ளைக்காரனுக்கு பிறந்ததால், அந்தச் சட்டத்துக்கு 1000 பற்கள். யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியாது. கடித்துக் குதறிவிடும். தனக்கோ, தன் ஆதரவு பெற்ற தொழில் அதிபர்களுக்கோ, நிலம் வேண்டும் என்றால், எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசாங்கத்தால் நிலத்தை பறித்துக்கொள்ள முடியும். ஏழை நில உரிமையாளர்களால் தடுக்க முடியாது. அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்றால், நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியும். அங்கேயும் இழப்பீடு மட்டுமே கூட்டிக் கேட்க முடியும். நிலம் பறிபோவதை ஒருபோதும் தடுக்க முடியாது. யார் நிலமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட நிலமாக இருந்தாலும் சரி அரசு நினைத்தால்... அதிகாரிகள் புகுந்து விளையாடலாம்; வீட்டை இடிக்கலாம்; மரங்களைப் பிடுங்கி எறியலாம்; கரும்பு, நெல், பருத்தி வயல்களை அழிக்கலாம்; தடுத்தால், காவல் துறையை ஏவிவிட்டு மண்டையப் பிளக்கலாம்; கைது செய்து சிறையில் அடைக்கலாம்; அடிமை இந்திய சட்டத்துக்கு அவ்வளவு பலம்!
சுதந்திர நாட்டின் அடிமைகள்!
'ஆடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே...’ என்று ஆட்டம் போட்டபோதும் கூட இந்தக் கொடுங்கோல் சட்டமே தொடர்ந்தது. ஆம், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாய சட்டமே அரக்கத்தனமாக சிரித்தது. இதில் சிக்கி சின்னாபின்னமான விவசாய ஜீவன்களும் பரலோகம் போய்விட்டன. இப்போது உயிர் உதாரணம்.... மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரில் டாட்டா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்காக, ஆயிரக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டன. எதிர்த்து நின்ற விவசாயிகளை, நாய்களைச் சுடுவதுபோல சுட்டுத்தள்ளியது, அன்றைக்கு அங்கே ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம்.
தமிழகத்திலேயே மேற்குப் பகுதியில் இருக்கும் சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 'கெயில் இந்தியா நிறுவனம்’ எரிவாயு குழாய் பதித்ததைச் சொல்லலாம். விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், இஷ்டம்போல புகுந்து, பொக்லைன் இயந்திரங்களை வைத்து பயிர்களையும் மரங்களையும் அழித்து, வெறியாட்டம் போட்டனர். போலீஸை வைத்துக்கொண்டு விவசாயிகளை மிரட்டினர். இன்றைக்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதோ, டெல்டா பகுதியில் 'மீத்தேன்’ எடுக்கப்போகிறோம் என்றபடி செழிப்பான காவிரித்தாயின் மடியை குதறிப்போடுவதற்காக உறுமிக்கொண்டே இருக்கிறது இன்னொரு பூதம்!
ராஜ்நாத் சிங் ஆதரவு!
சுதந்திர இந்தியாவிலும் இத்தகைய கொடுமைகள் தொடர்கதையா? என்று விவசாயிகளின் இதயங்களில் கனன்றுகொண்டிருந்த அக்னி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படை எடுத்தனர். மௌனகுரு மன்மோகன் சிங் ஆடிப்போனார். ஆட்சியாளர்களை நகரவிடாமல், நங்கூரம் போட்டதுபோல, டெல்லி, ஜந்தர் மந்தரில் முற்றுகையிட்டனர் விவசாயிகள். நாள்தோறும் டெல்லி சுற்றுவட்டாரப் பிரதேசங்களான, உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாபில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், டிராக்டரில் வருவதும், போவதுமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்தும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
போராட்டம் சூடு பிடிக்கவே, அரசியல் கட்சிகள் அதிர்ந்துபோயின. 'விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்றால், வாக்குக் கேட்டு... கிராமங்களுக்குள் நுழைய முடியாது’ என்று பயந்த அரசியல் கட்சிகள், ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டின. இதோ, இன்றைக்கு அவசர அவசரமாக சட்டம் போட்டு, விவசாயிகளை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பத் துடிக்கும் பி.ஜே.பியிலிருந்து ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். ஆம், உள்துறை அமைச்சராக உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே.... அதே புண்ணியவான்தான். மேடையேறி ஒரு மணிநேரம் முழங்கினார் விவசாயிகளுக்கு ஆதரவாக!
பிறந்தது புதிய சட்டம்!
போராட்டம் நான்காவது நாளில் அடி எடுத்து வைத்தபோது, அன்றைய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தலைமையில் 6 அமைச்சர்கள் போராட்ட களத்துக்கே ஓடோடி வந்தனர். வேண்டா வெறுப்பாக. மூன்று மணிநேரம் பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு, விவசாயிகளை இணைத்து கமிட்டிகள் அமைத்தனர். விவசாயிகளின் ஆலோசனையோடும் பி.ஜே.பியின் ஒப்புதலோடும் வந்ததுதான் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம்  2013. இதற்கான விவசாயிகளின் குழுவில் நானும் ஒருவனாக இடம்பிடித்தேன்.
நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டம்-2013 (Land Aquisition Rehabilitation and Resettlement act 2013) என்று புதுச் சட்டத்துக்குப் பெயர் சூட்டினர். இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு முழு திருப்தி இல்லை. அதேசமயம், 'இதுகாலம் வரை எதுவும் இல்லை என்ற நிலை நீடித்தது. இதுவாவது கிடைக்கிறது. இப்போதைக்கு ஏற்றுக்கொள்வோம். பிறகு போராடுவோம்’ என்று அரை மனதுடன் ஏற்றுக்கொண்டோம். நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பீடு சதுர அடியில் கணக்கிடப்படுகிறது. கிராமப்புறங்களிலோ ஏக்கர் கணக்கில் இருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு அதிகம். இதனால், குறைந்தது அரசு மதிப்பீட்டுக்கு மேல் 10 மடங்காவது இருந்திருக்க வேண்டும் இழப்பீடு. புதிய சட்டம் இதைச் செய்யவில்லை.
'ஆடிட்டர் ஜெனரல், அரசு கணக்குகளைத் தணிக்கை செய்வதுபோல், தனிச் சுதந்திரம் பெற்ற அதிகாரி, கையகப்படுத்தப்படும் நிலங்களைக் கண்காணித்து கணக்குப் பார்க்க வேண்டும். பெரும்முதலாளிகள் தொழில் போர்வை போர்த்திக்கொண்டு, அடிமாட்டு விலையில் விவசாயிகள் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பிறகு ரியல் எஸ்டேட்களாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளும் நிலுவையிலேயே உள்ளன.
குறைப்பிரசவம்... கொலை ஆயுதம்!
இப்படி குறைப்பிரசவமாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இந்த அரைகுறையிலும் ஆபரேஷன் என்கிற பெயரில், கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது மோடியின் அரசு. 70 சதவிகிதம் விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்கிற ஷரத்தை நீக்கியதோடு, பாசன நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்று படுபாதகமாக சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. வெள்ளைக்காரன் சட்டம்கூட, ஆற்றுப்பாசனப் பகுதி, ஏரிப் பாசனப் பகுதி, வாய்க்கால் பாசனப் பகுதியை வேறு காரியங்களுக்குக் கையகப்படுத்த அனுமதித்தது இல்லை. ஆனால், மோடி அரசு, வெள்ளைக்கார அடிமை இந்திய சட்டத்தைவிட கொடூரமான சட்டத்தைப் போட்டு, 'பாதிப்பு இருக்காது’ என்று பசப்புகிறது. தேர்தல் நேரத்தில் மோடியே கொடுத்த பி.ஜே.பியின் வாக்குறுதிகளையும் குழி தோண்டி புதைக்கிறது இந்தப் புதியச் சட்டம்.
இப்படி ஒரு மாயத்திட்டத்தை கையில் வைத்துக்கொண்டுதான், 'மேக் இன் இண்டியா’ என்று கவர்ச்சி வலைவீசி, விவசாயிகளை ஒழிக்கத் துடிக்கிறார், 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் போடும் 'ஏழைப் பங்காளன்’ மோடி.
'விவசாய உற்பத்தி தேக்க நிலை அடைந்துவிட்டது... மேக் இன் இண்டியா கோஷத்துக்கு முன்பு குரோ இன் இண்டியா (Grow in India) கோஷத்தைதான் முன்னெடுக்க வேண்டும்’ என உணவுப் பொருளாதார நிபுணர் டாக்டர் தேவேந்திர சர்மா கூறுவதை மறுத்துவிட முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், 'மோடியின் இந்தப் பசப்பு வார்த்தைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்பதை உணர்ந்து, 'மேக் இன் இண்டியா, இருக்கட்டும். மேக் ஃபார் இண்டியா திட்டத்தை முன்னெடுங்கள்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறியிருக்கிறார்.
அளவுக்கு மிஞ்சினால், அன்னிய முதலீடும் ஆபத்தே!
மோடியின் தோழர்களாக இருக்கும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள்கூட இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. தேர்தலில் தோள் கொடுத்த தோழர்களைவிட, கரன்ஸியை அள்ளிவிட்ட பகாசுர நிறுவனங்கள் உங்களுக்கு முக்கியமாகிவிட்டன அல்லவா மிஸ்டர் மோடி? ஆனால், சமீபத்திய டெல்லி தேர்தலில் விழுந்த மரண அடிக்குப் பிறகும் நீங்கள் பாடம் படிக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், உங்களைக் காப்பாற்ற எந்த ராமனாலும் முடியாது, மறந்துவிடாதீர்கள்!
தூரன் நம்பி

சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின் முக்கியமான சில அம்சங்களும்... இதில் பி.ஜே.பி தற்போது செய்திருக்கும் தில்லுமுல்லு திருத்தங்களும் இதோ...! அடைப்புக்குறிக்குள் இருப்பவை இப்போது திருத்தப்பட்டவை.
1. அரசுப் பணிகளுக்காக என்றால்... அதாவது, ரயில், நெடுஞ்சாலை, மருத்துவமனை, ராணுவம் போன்ற காரியங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை.
(ஸ்மார்ட் சிட்டி மற்றும் வீட்டுவசதி திட்டத்துக்கும் ஒப்புதல் தேவையில்லை.)
2. தனியார் தொழில் என்றால் 80 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும். தனியார் அரசு கூட்டுத் தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நகரங்கள் அமைப்பதென்றால் 70 சதவிகிதம் விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும்.
(எதற்கும் ஒப்புதல் பெறத் தேவையில்லை)
3. ஒட்டுமொத்தமாக நிலத்தை இழப்பதால் விவசாயிகள் மனது உடைந்துவிடக் கூடாது என்பதற்காக... இழப்பீடு, குடியிருப்பு, மாற்று வாழ்வாதார வசதிகள் செய்து தரவேண்டும். நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமல்லாமல், அந்த நிலத்தை நம்பியே வாழும் கூலித் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு.
(உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு).
4. எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்தப் பணி, 5 வருடங்களில் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில், நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பிக்கொடுத்துவிட வேண்டும்.
(திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை)
5. பாசன வசதி பெற்ற செழிப்பான நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது.
(பாசன வசதியுள்ள, செழிப்பான நிலங்களையும் கையகப்படுத்தலாம்.)
 vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக