ஞாயிறு, 1 மார்ச், 2015

கேரளாவில் விழுந்த எரிகற்கள்? ஆறு மாவட்டங்களில் வானில் இருந்து நெருப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணணூர், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு வானில் தீப்பிழம்பு தோன்றியதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் அந்த தீப்பிழம்பு வானில் பயணித்ததாகவும் அப்போது பயங்கர சத்தம் கேட்டதாகவும், அந்த நேரத்தில் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அந்த பகுதி பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம தீப்பிழம்பு இந்த 6 மாவட்டங்களில் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி விழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தென்னை மரங்கள் உள்பட பயிர்கள் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக குடியிருப்புகள் மீது இந்த தீப்பிழம்பு விழாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆலப்புழா அருகே புச்சாக்கல் என்ற இடத்தில் ராஜேஷ் என்பவர் வீட்டு முன்பு தீப்பிழம்பில் இருந்து சிதறிய ஒரு இரும்பு வளையம் போன்ற ஒரு மர்ம பொருள் கிடந்ததை அவரது வீட்டினர் பார்த்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் எர்ணாகுளம் பிரவூர் என்ற இடத்தில் ஒரு வீடு அருகேயும், ஓலஞ்சேரி வனவூர் பகுதியிலும், ஆராமுளா பந்தளம் பகுதியிலும் கிறிஸ்தவ ஆலயங்கள் அருகேயும் தீப்பிழம்பின் சிதறல்கள் விழுந்துள்ளன. தெக்கனூர் கிடங்கானூர் என்ற இடத்திலும் தீப்பிழம்பு விழுந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
மொத்தம் 145 இடங்களில் இந்த தீப்பிழம்பு தெளிவாக தெரிந்ததாக நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வானிலை இலாகாவினரும், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரும் இந்த மர்ம தீப்பிழம்பு பற்றி தெரிய உடனடியாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.
அப்போது எர்ணாகுளம் மாவட்டம் கரிமல்லூரில் தீப்பிழம்பினால் பெரிய அளவில் நிலம் கருகி இருந்தது தெரிய வந்தது. இதனால் இந்த இடத்தில்தான் தீப்பிழம்பு விழுந்திருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த தீப்பிழம்பு விழுந்ததற்கான காரணம் பற்றி வல்லுனர்கள் ஆராய்ந்து வருவதாகவும், அவர்களின் அறிக்கைக்கு பிறகு இதுபற்றிய உண்மை காரணம் வெளியாகும் என்று பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் தீப்பிழம்பில் இருந்து சிதறி விழுந்த பொருட்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்று வானிலை இலாகா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த பொருட்கள் விழுந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் சென்று பொருட்களை சேகரித்து வருவதாகவும், இதைப்பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதுபற்றி பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள வானிலை விஞ்ஞானி ராஜகோபாலன் கம்மத் இதுபற்றி கூறும்போது, ‘பூமியின் ஈர்ப்பு விசையால் விண்கற்கள் ஈர்க்கப்பட்டு பூமிக்குள் நுழைந்தபோது தீப்பிழம்பு உருவாகி இருக்கலாம். சீனா விண்ணுக்கு அனுப்பிய ஒரு செயற்கை கோளை செயலழிக்க செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே இந்த தீப்பிழம்பு செயலிழக்கச் செய்யப்பட்ட செயற்கை கோளினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்’ என்றார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக