வெள்ளி, 13 மார்ச், 2015

அழிவின் விளிம்பில் சிகப்பு சிந்தி இனமாடுகள் ! கருமாற்று தொழில்நுட்பம் மூலம் 66 சிந்தி கன்றுகள் ஈன்றெடுப்பு

ஓசூர்-ஆங்கிலேயர்கள் காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட சிகப்பு சிந்தி இனமாடுகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. இத்தகைய நாட்டு இனமாடுகளின் எண்ணிக்கையை பெருக்க கருமாற்று தொழில்நுட்பம் என்ற புதிய தொழில்நுட்பத்தை கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஆரோக்கியமான 66 சிகப்பு சிந்தி இன கன்றுகள் ஈன்றெடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பால் உற்பத்தி திறன் அதிகம் கொண்ட சிகப்பு சிந்தி இன மாடுகள், இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஓசூர் கால்நடை பண்ணைக்கும், சிந்தி இனமாடுகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் ஏற்பட்ட வெண்மை புரட்சி காரணமாக, பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் உற்பத்தியை பெருக்கும் நோக்கில், நம் நாட்டினர் அயல் நாட்டு கலப்பின பசுக்களை அதிகமாக இனப்பெருக்கம் செய்வித்தனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் நம்நாட்டில் இருந்த உள்நாட்டு இன வகை மாடுகளான சிகப்பு சிந்தி, சாகிவால், தார்பால் உள்ளிட்ட மாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டன. தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த மாடுகள் ஓசூர், ஒடிசா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் கால்நடை ஆராய்ச்சி மையங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.

நாட்டு மாடுகள் அழியும் ஆபத்தை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2012ம் ஆண்டு அதனை காப்பாற்றும் நோக்கில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, சிந்தி மாடுகள் இனப்பெருக்கம் செய்யும் அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கால்நடை மருத்துவர்கள், சிகப்பு சிந்தி இன மாடுகளின் சினை முட்டைகளை எடுத்து, பிற இன பசுக்களில் அதனை செலுத்தி கருத்தரிக்க செய்தனர். இதன் மூலம் ஆரோக்கியமான, நல்ல தரமான சிகப்பு சிந்தி இன கன்றுகள் பெருக்கம் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஓசூர் கால்நடை மருத்துவர் கூறியதாவது: பிற இன பசுக்களில் சிகப்பு சிந்தி இன கருமுட்டைகளை செலுத்தி பிறக்கும் கன்றுகளுக்கு, மரபணுவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய கருமாற்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் நாட்டு இன பசுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவையாகவும், அதிக சத்தான பால் தருபவையாகவும் உள்ளன. இந்த தொழில்நுட்பம் மூலம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில், இதுவரை 66 சிகப்பு சிந்தி இன கன்றுகள் ஈன்றெடுக்கப்பட்டுள்ளன. ஓசூர் கால்நடை பண்ணையில் இந்த தொழில்நுட்பத்தில் கலப்பின பசு ஒன்று, தரமான சிந்தி இனத்தின் இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த முறையை பயன்படுத்தி தரமான மாடுகளை பெருக்கி அழியும் அபாய நிலையில் உள்ள உள்நாட்டு இனமாடுகளை காக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். - /tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக