வியாழன், 26 பிப்ரவரி, 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டம் பாஜகவின் வாட்டர் லு

ணவளித்து அனைவரையும் காக்கும் விவசாயிகளின் வாழ்வாதரமான விளை நிலங்களை, வெளிநாட்டு கம்பெனிகள் லாபத்திற்குத்  தாரை வார்க்கும்  மத்திய அரசின்  மா பாதக செயலுக்கு, நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஆனால் தாம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இருந்து பின்வாங்கும் கருத்துக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி விடாப்பிடியாக இருக்கிறார். காப்பறேட்டுக்களிடம்  வாங்கின காசுக்கு சத்தம் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருப்பதாக குற்றம் சுமத்தினால் அதை மறுத்து நிருபிக்க முடியுமா மிஸ்டர் மோடி ?


பாஜகவின் முதன்மை அமைச்சர்கள்,ஆர்.எஸ்.எஸ்.மற்றும் சிவசேனா ஆகிய கொள்கை சகோதரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடி," இந்தச் சட்டம் நிச்சயம் விவசாயிகளுக்கு நன்மை தரும்.விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்.எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.  காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்கள் மற்றும் அம்மாநில முதல்வர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நாம் அனைவரும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தான் இங்கே இருக்கிறோம்" என்று முழங்கியிருக்கிறார்.

காலம் காலமாக வேளாண்மை செய்து தங்களின் வாழ்க்கையை  நடத்தி வரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை ஒரு சட்டம் மூலம் நிர்மூலமாக்கவும் உணவு பொருட்களுக்கு அந்நிய நாடுகளை  அண்டி இருக்கவேண்டிய அவலத்திற்கு தள்ளிடவும் மோடி நினைக்கிறார் என்பதை காட்டுகிறது அவரின் பேச்சு.
தொண்ணூறுகளின் மத்திய காலத்தில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் இந்திய முழுமைக்கும் பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட அறிவியல் முன்னேற்றம், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை பலப் படுத்தியது. ஆனால் வேளாண்மை அதல பாதாளத்தில் விழுந்தது.
இதை பற்றி அக்கறை கொள்ளாமல் அந்நிய கம்பெனிகளின் கல்லாவை நிரப்பும் கடமையில் மட்டுமே கண்ணாக  இருந்தது நரசிம்மராவ் அரசும், மன்மோகன் அரசும். மகராஷ்டிராவிலும்,ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் ஆயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைப் பள்ளத்தாக்கில் தள்ளியது.  `கார்ப்ரேட் ` நிறுவனங்களின் பகட்டிற்காக,  வாழ வழியின்றி கடன்சுமை நெருக்க,விளை பொருட்களுக்கு உரிய விலையின்றி, மனம் நொந்து  சாவைத்  தேடிய அப்பாவி விவசாயிகள் அழிந்த கதை இந்திய வரலாற்றில் உறைந்து கிடப்பதை மறந்திட முடியாது.

மீண்டும் இதே போன்ற தற்கொலை வாழ்வை நோக்கி தள்ளும் சட்டமாகத்தான், மோடியின் நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டம் காட்சியளிக்கிறது. இந்த அவசர சட்டம் என்ன திருத்தங்களைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

ஏற்கெனவே உள்ள சட்டத்தில் நிலம் கையகப் படுத்தும்போது  சில குறிப்பிட்ட விசயங்களுக்காக நிலம் கையகப் படுத்தினால்,அதற்கு நில உரிமையாளர்கள் 80 சதவீதம் பேரிடம் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்று சட்டத்தின் 10(ஏ) என்ற விதி கூறுகிறது.இதில்தான் இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட 5 பிரிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதவீதம் பேர்களின் அனுமதி தேவையில்லை.அவை:
1.தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.
2.ராணுவம் தொடர்பானவை.
3.மின்சார திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.
4.தொழில் பூங்காக்கள்.
5.ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள்

மேலும், நிலம் கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்வதற்கு உரிய நிலம் தானா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தால், விளை நிலமா என்பதை பார்க்கவேண்டியதில்லை. செழிப்பான விவசாய நிலத்தைக் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிட முடியும்.
இந்தத் திருத்தம் வருவதற்கு முன்பே மேற்கு வங்க மாநிலத்தில்  சிங்கூர் பகுதியில் கொண்டுவரப்பட்ட கார் கம்பெனிக்கு செழித்த விலை நிலங்கள் பலி கொடுக்கப் பட்டது நினைவிருக்கலாம்.அதற்கு எழுந்த எதிர்ப்பும் விவசாயிகளின் போராட்டம் இன்றும் தீர்ந்த பாடில்லை.
அரசால் கையகப்படுத்தப்படும் போது அதற்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் என்பது புதியதாக ஒன்றும் கூட்டப் படவில்லை.அதே போல எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அது 5 ஆண்டுகளில் நிறைவேற்றப் படவில்லை என்றால் அந்த நிலம் திரும்ப விவசாயிகளுக்கே அளிக்கப் படவேண்டும் என்று முன்பு இருந்த சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தில் இது போன்று எதுவும் கூறப்படவில்லை.
இப்படி தான் நினைப்பதுதான் சிறந்த திட்டம் என்று பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள சட்டம், நிலத்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான  ஏழை, எளிய நடுத்தர விவசாயிகளின் உயிருக்கும் உடைமைக்கும் உலை வைக்கும் திட்டம் என்பதன்றி வேறு இல்லை.
வெளிநாட்டு கம்பெனிகள் மோடியின் கனவுத் திட்டமான `இந்தியாவில் தயாரிப்போம்` என்பதை  நனவாக்க இந்தியாவின் குக்கிராமங்களை நோக்கி படையெடுக்க களம் அமைத்து தரும் பணியை மத்திய அரசு தீவிரமாக்கிதான் உள்ளது. ஆனால் ஏற்கெனவே நாடு முழுவதும் சிப்காட் பேட்டைகள் அமைக்கப்பட்டு தோல்வியில் முடிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை இனம் கண்டிட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

ஏற்கெனவே ஆண்டுக்கு ஆண்டு விளை நிலங்களின் பரப்பளவு இந்தியாவை பொறுத்தவரை சுருங்கி கொண்டே வருகிறது என்று செய்திகள் அச்சப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இதுபோன்று சட்டப் பூர்வமான நில அபகரிப்பில் அரசு ஈடுபடுவது இந்தியாவின் வேளாண்மையை சவக் குழிக்குள் தள்ளிடும் செயலாக அமைந்துவிடும்.
'எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சிகள்' என்று  ஆளும் கட்சி என்ற மிதப்பில் பாஜக கூறினாலும், இந்த விசயத்தில் எதிர்க்கட்சிகள் சொல்லும் உண்மையை பிரதமர் மோடி உணரவேண்டும். பாஜகவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சகோதர உறவு பாராட்டும் சிவசேனா, " விவசாயிகள் நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். விவசாயிகளின் கழுத்தை நெரித்து பாவம் செய்யக் கூடாது. நிலத்தைக் கையகப்படுத்தும் செயல் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளது.

திருவள்ளுவர் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, அவரின் குறள் காட்டும் பாதையில் தானும் செல்ல முன்வரவேண்டும்.
" இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பா ரிலானுங் கெடும் "
இதன் பொருள், கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்பதாகும்.

மக்களவையில் மக்கள் வழங்கிய `பெரும்பான்மை பலம்` கொண்டு தனக்கு  மதம்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது பாஜகவின் கையில்தான் இருக்கிறது.
மத்திய அரசு சிந்தித்து செயல்படவேண்டிய நேரம் இது...
- நடராஜன் ( தஞ்சை) விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக