புதன், 18 பிப்ரவரி, 2015

பெரியாரின் தங்கை குடும்பத்துக்குச் சொந்தமான திரையரங்கு இடிப்பு

ஈரோடு பார்க் சாலையில் இடிக்கப்பட்டு வரும் ஸ்டார் திரையரங்கு.பெரியாரின் தங்கை குடும்பத்துக்குச் சொந்தமான 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரையரங்கு இடிக்கப்பட்டு வருகிறது.
பெரியாரின் பல்வேறு போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர்  பெரியாரின் உடன் பிறந்த தங்கை கண்ணம்மாளின் கணவர். பெரியார் பெயரும் (ராமசாமி), இவரது பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததால் கண்ணம்மாளின் கணவர் பெயர் மாப்பிள்ளை நாயக்கர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தது.
கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டத்தின்போது பெரியாருடன் இணைந்து அவரது மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது.

கண்ணம்மாளின் குடும்பத்துக்குச் சொந்தமான நாடகக் கொட்டகை, ஈரோடு பார்க் சாலையில் இருந்தது. திராவிட இயக்க கருத்துகளை மேடை நாடகங்களில் தீவிரமாக பரப்பிய நடிகர் எம்.ஆர்.ராதவின் நாடகங்கள், இந்த கொட்டகையில் அதிகளவில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தொடக்க காலத்தில் பேசாத திரைப்படங்களும் இதில் திரையிடப்பட்டன.
பின்னர் காலப்போக்கில் இது திரையரங்காக மாற்றப்பட்டு ஸ்டார் திரையரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோட்டில் தொடங்கப்பட்ட பழமையான திரையரங்குகளில் ஒன்றாக விளங்கி வந்தது.
தொடர்ந்து ஏற்பட்ட இழப்பு காரணமாகவும், ரசிகர்களின் வருகை குறைந்து விட்டதாலும் இந்த திரையரங்கு மூடப்பட்டது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் இந்த திரையரங்கை இடிக்கும் பணி துவங்கியது. இப்போதும் இந்த திரையரங்கு கட்டடம் கண்ணம்மாளின் பேரன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து, திரையரங்கு உரிமையாளரில் ஒருவர் கூறுயதாவது, "10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈரோடு நகரில் 20 திரையரங்குகள் இருந்தன. இப்போது 10 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. ரசிகர்களின் ரசனை மாறி வருவதால் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
இங்கு மட்டுமல்ல சென்னை, சேலம், கோவை போன்ற நகரங்களில் கூட பழைமை யான திரையரங்குகள் இடிக்கப்பட்டுவிட்டன. எங்களது திரையரங்கை இடிக்க மனம் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் வேறுவழியில்லை.
இந்த திரையரங்கில் ஒரே நேரத்தில் 667 பேர் அமர்ந்து திரைப்படம் பார்க்க முடியும். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் இங்கு 189 நாள்கள் ஓடியது.
இதுதான் இந்த திரையரங்கில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படம். இங்கு இதுவரை ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக