புதன், 18 பிப்ரவரி, 2015

கணவனின் மலட்டுத்தன்மையை மறைக்க மனைவி என்னதான் செய்யமுடியும்? மாதொருபாகன் ?


எழுத்தாளர் பெருமாள்முருகன் மலட்டுத்தன்மை ஆணுக்கா, பெண்ணுக்கா என்று அறிய முடியாத சவுகரியத்தால், சமீப காலம் வரையில் பெண்தான் மலடி எனத் தூற்றப்பட்டாள். கணவன் இரண்டாம் தாரம் கட்டி விடுவானோ என்று பெண் அஞ்சவேண்டியிருந்தது. ஆணோ, தான் ஆண்மை உள்ளவன் என்று நிரூபிக்கவேண்டியிருந்தது. இந்தப் பின்புலத்தில் பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் எண்ணிலடங்காதவை. கேட்கக் கூசுபவை.திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவது எது? மாதொருபாகன் கூறும் மரபா? ஆணாதிக்க – கவுண்டர் சாதிப் பண்பாடா?மாதொருபாகன் நாவலுக்கு எதிராக கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இணைந்து அரங்கேற்றிய காலித்தனங்களும், சாதி, மத வெறியர்களுடன் கைகோர்த்து நின்று மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, பெருமாள்முருகனுக்கு எதிராக நடத்திய கட்டைப் பஞ்சாயத்தும் அப்பட்டமான பாசிச நடவடிக்கைகள் என்பதை விளக்கத் தேவையில்லை. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி உணர்விலிருந்து பிறந்து, ஆர்.எஸ்.எஸ். துணையுடன் திருச்செங்கோடு இந்துக்களின் உணர்வாக மாற்றப்பட்ட இந்த ‘மானப்பிரச்சினையில்’ திருச்செங்கோடு பகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பும், ‘போராட்டங்களும்’ தவிர்க்க இயலாமல் நமக்கு வடிவேலுவின் பிரபல நகைச்சுவைக் காட்சியொன்றைத்தான் நினைவூட்டுகின்றன.
“கடவுளைக் காட்டுகிறேன்” என்று வசூல் வேட்டை நடத்திய வடிவேலுவிடம் பணத்தைக் கொடுத்த மக்கள், “கடவுளைக் காட்டு” என்று கேட்க, “யாருடைய பெண்டாட்டியெல்லாம் பத்தினியோ, அவிங்க கண்ணுக்கு மட்டும்தான் கடவுள் தெரிவார்” என்று சொல்லிவிட்டு, பக்திப் பரவசத்துடன் இறைவா என்று கூவியபடியே வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்
வடிவேலு. உடனே மானத்துக்கு அஞ்சி எல்லோரும் வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்களே, அந்த நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பண்ணாரி அம்மன் என்று நினைவு! இதே கொங்கு வட்டாரத்தின் தெய்வம்தான்!
“நம்ம பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பெருமாள்முருகன் எழுதிவிட்டான், கடையை அடைக்கிறாயா, இல்லையா?” என்று சாதிச் சங்கத்துக்காரன் கேட்கும்போது, பொண்டாட்டி பத்தினியாக இருக்கும்பட்சத்தில் யாரொருவனும் கோவப்பட்டு கடையை அடைத்துத்தானே ஆகவேண்டும். இல்லையென்றால் பெண்டாட்டியின் கற்பைச் சங்கத்துக்காரன் அல்லவா சந்திக்கு இழுப்பான்! நாவலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கருத்து என்பது இப்படித்தான் உருவாகியிருக்கிறது, அல்லது உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்திய தொலைக்காட்சி விவாதமொன்றில் கவுண்டர் சங்கத்துக்காரர் (எழுச்சி பெற்ற இந்துவாகவும் இருக்கலாம்) ஒருவர் இப்படி பேசினார். “நாலு வருசமாக கொழந்தை இல்லாத தம்பதி. பொண்ணுக்கு திருச்செங்கோடு. திருவிழாவுக்குப் போய்ட்டு வந்ததும் கர்ப்பமாயிருக்கு. புருசன் சந்தேகப்படுறான். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்” என்று கோபாவேசமாக கேட்டார். ஒரு கதையைப் படித்துவிட்டு 4 வருசம் குடும்பம் நடத்திய மனைவியின் நடத்தையை சந்தேகப்படுகிறான் கணவன் எனும்போது, அவன் மீதுதான் கோபப்பட வேண்டும் என்று அந்த எழுச்சி பெற்ற இந்துவுக்குத் தோன்றவில்லை. கர்ப்பிணி சீதையைச் சந்தேகப்பட்டு காட்டுக்குத் துரத்திய ராமனைத் தேசிய நாயகனாகக் கொண்டாடும் கூட்டமல்லவா?
ஒருமுறை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டின் போது பெரியாரை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, “நாகம்மை தேவடியாள்” என்று ஊர் முழுவதும் சுவரில் எழுதியிருந்தார்களாம் ஆஸ்திக மெய்யன்பர்கள். இதைக் கண்டு கொதித்துப்போன தொண்டர்களை அடக்கிய பெரியார், “நாகம்மை பத்தினி என்று கூறக் கேட்டால் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தால்தானே, அவரைத் தேவடியாள் என்று சொல்வதைக் கேட்டு நான் கோபப்படுவதற்கு? போய் வேலையைப் பாருங்கள்!” என்றாராம். அப்படிப்பட்ட பெரியார் பணியாற்றிய மண்ணில்தான் இன்று இத்தகைய சாதி, மதவெறிச் சக்திகள் ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். நடைபெற்ற செய்திகள் வாசகர்களுக்குத் தெரியுமாதலால் விசயத்துக்கு வருவோம்.

கட்டப் பஞ்சாயத்து
சாதி, மதவெறியர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் முதல்வர் அம்மாவின் அரசு, எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய கட்டப் பஞ்சாயத்து.
சாதிய சமூகத்தில் குழந்தைப் பேறின்றித் தவிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் துயரத்தைப் பேசுகிறது மாதொருபாகன் கதை. சாதிய, ஆணாதிக்க சமூக அமைப்பில் குழந்தையில்லாத பெண்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் நாம் அறியாததல்ல. மலட்டுத்தன்மை ஆணுக்கா, பெண்ணுக்கா என்று அறிய முடியாத சவுகரியத்தால், சமீப காலம் வரையில் பெண்தான் மலடி எனத் தூற்றப்பட்டாள். கணவன் இரண்டாம் தாரம் கட்டி விடுவானோ என்று பெண் அஞ்சவேண்டியிருந்தது. ஆணோ, தான் ஆண்மை உள்ளவன் என்று நிரூபிக்கவேண்டியிருந்தது. இந்தப் பின்புலத்தில் பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் அநீதிகள் எண்ணிலடங்காதவை. கேட்கக் கூசுபவை.
மேற்கூறிய கதையிலும்கூட பொன்னாள் என்ற அந்தப் பெண் மலடி என்ற துயரத்துக்கு ஒரு தீர்வு தேடித்தான் திருவிழாவுக்குப் போகிறாளேயன்றி, காமக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டுச் செல்லவில்லை. அதுவும் அவளாகச் செல்லவில்லை. குடும்பத்தால் அனுப்பப்படுகிறாள். கதையின்படி திருவிழாவுக்கு வருகின்ற இளைஞர்கள்தான், பெண்களைக் குறி வைத்து வருகிறார்கள். பொறுக்க வருகிறார்கள் என்றும் சொல்லலாம்.
சொல்லப்போனால், “எங்க ஊர் (அல்லது சாதி) ஆண்களை பெருமாள்முருகன் பொம்பள பொறுக்கிகளாக எப்படிச் சித்தரிக்கலாம்?” என்றுதான் ஈசுவரன் கட்சிக்காரர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு ஆள் கூடக் கோபப்படவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். ஒரு ஆம்பிளை தனது ஆம்பிளைத்தனத்துக்காகப் பெருமைப்படத்தனே முடியும்? ஒருவேளை, “நாவல் கூறும் காலத்தில் நாம் வாழாமல் போனோமே” என்று ஏங்கியும் இருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த குரு கோல்வால்கர்
மறைந்த ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்த குரு கோல்வால்கர்
இவர்களுடைய கவலை தங்கள் தூய்மை பற்றியதோ, தங்கள் குலப் பெண்டிரின் தூய்மை பற்றியதோ அல்ல. தங்கள் சாதியின் தூய்மை பற்றியது.
“தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது?” என்பதுதான் நாவலில் அந்தப் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை. ஈசுவரன் கட்சிக்காரர்களுடைய கவலையும் அதுதான். அதனால்தான் ஆதாரம் கேட்கிறார்கள். திருவிழாவில் அப்படி ஒரு மரபு இருந்தது என்று நிரூபிக்கச் சொல்வதன் மூலம் சாதித்தூய்மை குறித்து தாங்கள் பரப்பி வரும் பொமைகளை உண்மையெனக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
“திருச்செங்கோட்டில் அப்படி ஒரு மரபு இருந்ததற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டு கொந்தளிப்பவர்கள், தங்களது சாதியின் வரலாற்றை, சாதித் தூய்மைக்கான ஆதாரத்தை மரபணுச் சோதனை மூலம் நிரூபித்துக் காட்டுவார்களா? நிரூபிக்க முடியாது. ஆகவே, சாதியின் தூய்மையை எங்கே, எப்படித் தொலைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.
தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள இத்தனை ஆயிரம் சாதிகளில், ஒவ்வொரு சாதியும் எப்படி, எந்த தேதியில் உருவாகின? அவற்றின் வரலாறு என்ன? யாராவது சொல்ல முடியுமா? ஆரிய – திராவிட இனக்கலப்பு  ஏற்பட்டே நூற்றாண்டுகள் பல கடந்து விட்டன. வரலாறு முழுவதும் பல்வேறு போர்களில் கவர்ந்து கொண்டு செல்லப்பட்ட பெண்கள், பஞ்ச காலங்களில் இடம்பெயரும்போது ஏற்பட்ட சாதிக்கலப்புகள், சாதிய சமூகத்தின் ஜனநாயக மறுப்பின் காரணமாக இன்றைக்கும் கிராமப்புறங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கள்ள உறவுகள்…  என சாதித்தூய்மை என்ற பித்தலாட்டத்தை நிராகரிப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வளவு ஏன், வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்ட ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள்ளேயே கலப்பு ஏற்பட்டு, ஆங்கிலோ இந்தியர்கள் என்றொரு புதிய பிரிவினர் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள் எனும்போது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நடந்திருக்க கூடிய சாதிக்கலப்பு, இனக்கலப்பு பற்றிச் சொல்லவா வேண்டும்?
சாதித்தூய்மை கிடையாது என்பதும் அதை நிலைநாட்ட முடியாது என்பதும் அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் பிளேட்டைத் திருப்பிப் போட்டு தமது பெண்களின் கற்புக்காகக் குமுறிக் கொந்தளிக்கிறார்கள். கற்பின் பின்னால் ஒளிந்து கொண்டு இல்லாத சாதித்தூய்மை குறித்து தம் சாதிக்காரர்களுக்கு வெறியூட்டுகிறார்கள். வேறு எந்த வழியிலும் சொந்த சாதி உழைக்கும் மக்களின் மதிப்பையோ நம்பிக்கையையோ பெற முடியாத இந்த சாதிச் சங்கத் தலைமைகள், தமது சாதியினர் மீது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் தந்திரம் இது. இவர்களுடைய கவலை கற்போ, தூய்மையோ அல்ல. ஆதிக்கம்!
07-perumal-murugan-captionஎம்.எஸ். சுப்புலட்சுமி கதையை எடுத்துக் கொள்வோம். அவர் இசைவேளாளர் சமூகத்துப் பெண் என்பதற்காக துவக்க காலத்தில் அவரை மட்டம் தட்டிய பார்ப்பனர்கள், பிற்காலத்தில் அவர் ஒரு பார்ப்பனரை மணந்து, பார்ப்பனியத்துக்குத் துதி பாடி, மன்னனைவிடப் பெரிய ராஜவிசுவாசியாகத் தன்னை நிரூபித்துக் கொண்டதால், அவருக்கும் மடிசார் கட்டிவிட்டு, மாமி கணக்கில் சேர்த்து விட்டார்கள்.
வன்னிய சாதியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த திவ்யாவைப் போன்றவர்களுக்கு சாதி நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தெரிகிறது. ஆனால் வன்னியர், கவுண்டர், தேவர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த கல்வி வள்ளல்கள், கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், அதிகார வர்க்கத்தினர், நீதிபதிகள்,  அறிவுஜீவிகள் ஆகியோருக்கு தங்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள சாதி தேவைப்படுகிறது. அதனால்தான் மாதொருபாகன் நாவல் தமிழில் வெளிவந்த போது எழும்பாத பிரச்சினை, ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தவுடன் வந்திருக்கிறது. எங்கேயாவது சிலிக்கான் வேலியில் செட்டில் ஆகியிருக்கும் சின்னக் கவுண்டர்களின் மனம் புண்பட்டிருக்கும்.
நத்தம் காலனியைக் கொளுத்திய கையோடு, சாதிக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி திராவிட இயக்கத்தை ஒழிக்கப்போவதாக ராமதாசு அறிவித்தபோது, அதற்கு முந்திக்கொண்டு ஆதரவு கொடுத்தது கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கட்சி. அ.தி.மு.க.-வின் ஓட்டு வங்கியும், ஆர்.எஸ்.எஸ்.-ன் செல்வாக்குப் பகுதியும், தமிழகத்திலேயே அதிக கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக்குவளை வைத்திருப்பதும் கொங்கு மண்டலம்தான். அதே நேரத்தில் “வன்கொடுமைச் சட்டத்தால் தாங்கள் அநியாயமாகப் பாதிக்கப்படுவதால், அந்த சட்டத்தையே நீக்க வேண்டும்” என்று மூர்க்கமாக குரல் கொடுப்பதும் இக்குறிப்பிட்ட சாதியினர்தான். திருச்செங்கோட்டில் பெருமாள்முருகனுக்கு எதிராக அரசே முன்நின்று நடத்திய கட்டப் பஞ்சாயத்தையும், கடையடைப்பு போன்ற நடவடிக்கைகளையும் இந்தப் பின்புலத்திலும் புரிந்து கொள்ளவேண்டும்.
மீண்டும் மாதொருபாகன் கதைக்கு வருவோம். கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டின் மீது திணிக்கப்பட்டு வரும் “தொழில் வளர்ச்சியும்” அது தோற்றுவித்திருக்கும் வாழ்க்கையும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே குழந்தைப் பேறின்மையை அதிகரித்திருக்கிறது. கருத்தரிப்பதற்காக மாதொருபாகன் நாயகியைக் காட்டிலும் கொடிய துன்பங்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். கருத்தரிப்பதற்காக திருவிழாவுக்குப் போன பொன்னாள் அனுபவிக்கும் பதற்றத்தை விடவும் அதிகமான பதற்றத்தை, தங்கள் சொந்தப் படுக்கையறையிலேயே அனுபவிக்கிறார்கள் பெண்கள்.
குழந்தைப் பேறின்மைக்கு ஆண் மலட்டுத்தன்மையும் குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது? அறிவியல் முன்னேறிவிட்டதால் திருச்செங்கோடு திருவிழாவுக்குப் பதிலாக விந்து வங்கிகள் வந்து விட்டன. இந்த வங்கிகளில் தமது விந்துவை காசுக்கு விற்பவர்கள் பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள். விந்துவை வாங்க வருபவர்கள் (அதாவது பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தினர்) விந்துவுக்குரிய இளைஞனின் நிறம், உயரம், ஆரோக்கியம், கல்வித் தகுதி ஆகியவற்றை மட்டுமல்ல சாதியையும் கேட்கிறார்கள். தன்னுடைய சாதிக்காரனின் விந்துவாக இருக்கவேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொள்கிறார்கள் என்கிறார், பாட்னா நகரில் ஃபுரோசன் செல் (Frozen cell) என்ற விந்து வங்கியை நடத்தும் டாக்டர் சவுரவ் குமார். “இனிமேல் பிராமின், பூமிகார், யாதவ், ராஜ்புத் என்று சோதனைக் குழாகளில் எழுதி ஒட்ட வேண்டியதுதான் பாக்கி. அந்த அளவுக்கு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்” என்கிறார் இன்னொரு மகப்பேறு மருத்துவர். (செய்தி-பிறப்பதற்கு முன்னரே தொடங்குகின்றன சாதிப்பிரிவுகள், நியூயார்க் டைம்ஸ், ஜுலை 12, 2012)
இந்தக் கேவலத்தைக் காட்டிலும், மாதொருபாகன் கூறும் அந்தத் திருவிழா மரபு மிகவும் நாகரிகமான வழிமுறையாகத் தெரியவில்லையா? “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ?” என்று நவீன அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கேட்டார் சிவவாக்கிய சித்தர். அறிவியலின் துணை கொண்டு சாதியை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் வெறியர்கள், “இலக்கமிடு” என்று சமூகத்தை மிரட்டுகிறார்கள். சாதி வாரியாக கல்லூரி தொடங்கியிருக்கும் இந்த வர்க்கம், விந்து வங்கிகளையும் சாதிவாரியாகத் தொடங்க வாய்ப்பிருக்கிறது.
இப்பிரச்சினையில் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்துடன் இராம. கோபாலனும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதால், மேற்படி பிரச்சினை குறித்து, ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத் தலைவரான கோல்வால்கர் முன்வைத்திருக்கும் அரிய கருத்தினைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வோம். குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை மாணவர்கள் மத்தியில், தனது ஆரிய இனவெறிக் கோட்பாட்டை முன்வைத்து டிசம்பர் 17, 1960 அன்று கோல்வால்கர் ஆற்றிய உரையின் பகுதி இது.
“இன்று கலப்பினங்களை உருவாக்கும் சோதனைகள் விலங்குகளின் மீதுதான் செய்யப்படுகின்றன. அத்தகைய சோதனைகளை மனிதர்கள் மீது செய்து பார்க்கும் தைரியம், நவீன விஞ்ஞானிகள் என்கிறார்களே, அவர்களுக்குக்கூட இல்லை. இன்று மனிதர்களிடையே கலப்பினத்தை நாம் காண்கிறோம் என்றால், அது அறிவியல் சோதனையின் விளைவல்ல, கீழ்த்தரமான காமத்தின் விளைவு. இந்த விசயத்தில் நமது முன்னோர்கள் செய்திருக்கும் சோதனைகளை நாம் பார்ப்போம். கலப்பினச் சேர்க்கை மூலம் மனித இனத்தை மேம்படுத்தும் பொருட்டு, வடநாட்டைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”
(2004 ஆம் ஆண்டில் கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை)
கோல்வால்கர் குறிப்பிடும் இழி மரபை ஒழிக்கத்தான் பெரியார் போராடினார். பெரியாரையும் திராவிட இயக்க மரபுகளையும் ஒழிக்கவேண்டும் என்பதைத் தமது கொள்கையாக கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சங்கத்தினரும் பிற சாதி சங்கத்தினரும், பா.ஜ.க.-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். வெறும் கூட்டணி போதுமா? கோல்வால்கர் கூறும் நமது பெருமைமிகு ஹிந்து பாரம்பரியத்தையும், மோடியால் விதந்தோதப்படும் ஹிந்து ஞானமரபையும் பின்பற்ற வேண்டாமா?
மற்றெல்லா வகையிலும் பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள், கோல்வால்கர் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடிப்பதற்கு மட்டும் கூச்சப்படத் தேவையில்லை. கோல்வால்கரின் மேற்கண்ட உரையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, திருச்செங்கோடு மக்களிடையே வழங்கட்டும். எந்த மரபு தங்களை இழிவு செய்கிறது என்பதை அம்மக்கள் அதற்குப் பின்னர் தீர்மானிக்கட்டும்.
- மருதையன்
கருத்துரிமையும் கருத்து கூறாமலிருக்கும் உரிமையும்
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்த பல இலக்கியவாதிகள், சாதிய, இந்துவெறி அமைப்புகளின் வன்முறை குறித்து மிகவும் மேலோட்டமான கண்டனத்தையே தெரிவித்திருந்தனர். சாதித் தூய்மை என்ற கருத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சாதிவெறியையும், இந்து மதவெறியையும் நேருக்கு நேர் தாக்கி அம்பலப்படுத்தாமல் ஒளிந்து கொள்ள விரும்பியவர்களுக்கு கருத்துரிமை என்பது பாதுகாப்பான கவசமாகப் பயன்பட்டது. அதாவது, பெருமாள்முருகனின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த அதே நேரத்தில், தங்களுடைய கருத்து கூறாமல் இருக்கும் உரிமையை அவர்கள் பாதுகாத்துக் கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.
இலக்கியத்தளத்துக்கு வெளியே அரசியல்ரீதியில் சாதி ஒழிப்பு, பொதுவுடைமைக் கருத்தியலில் இயங்குபவர்கள்தான், மாதொருபாகன் என்ற இலக்கியம் தோற்றுவித்த சமூக எதிர்விளைவுக்கு முகம் கொடுத்தார்கள். தங்களுக்கு எதிரான எந்த உண்மையையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சாதி, மதவெறியர்கள் ஆர்ப்பரிக்கும் சூழலிலும், இலக்கியவாதிகளுக்கு அரசியல் கூடாது எனப் பேசுவது, அவர்களுக்கு வழங்கும் மறைமுக ஆதரவு என்பதைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ளவேண்டும்.வினவு.com 

1 கருத்து: