செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ரங்கம் தவறவிட்ட வரலாற்று சந்தர்ப்பம்! ட்ராபிக் ராமசமி போன்ற நேர்மையாளர்களை .....

மக்களுக்காக அதிக அளவில் போராடி பல நேரங்களில் வெற்றியும் பெற்றவர் ராமசாமிதான். வீர முழக்கம் வீர முழக்கம் என்று மட்டும் கோஷம் போட்டுக் கொண்டிருக்காமல், மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டத்தின் துணை கொண்டு விடாமல் போராடி பல நல்ல விஷயங்களைச் சாதித்தவர் ராமசாமிதான்.
 தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து எதையுமே முடிவு செய்ய இயலாதுதான். ஆனால் இந்த இடைத் தேர்தல்களில் பல நேரங்களில் பல சுவாரஸ்யங்கள் நமக்குக் கிடைக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலும் நமக்கு பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கண்ணில் காட்டியுள்ளது. அதில் ஒன்றுதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ள ஓட்டுக்கள். பேசாம டிராபிக் ராமசாமியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி வைத்திருக்கலாம்! இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் அண்ணாதுரை வேட்பாளராக களம் கண்டார். வழக்கம் போல கம்யூனிஸ்ட் கட்சியினர் அ்மைதியான முறையில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர். வீதி முனைப் பிரசாரம், திணைப் பிரசாரம், மக்களை வீடு வீடாக சென்று சந்திப்பது என்று பிரசாரம் செய்தனர்.
அதேபோல இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இன்னொரு எளிமையான மனிதர் சென்னையைச் சேர்ந்த சமூ்க சேவகர் டிராபிக் ராமசாமி. சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு எளிமையான முறையில் வேட்பாளராக களம் குதித்திருந்தார் ராமசாமி. இந்தத் தேர்தலில் அண்ணாதுரையும், டிராபிக் ராமசாமியும் கிட்டத்தட்ட சமமான அளவில் வாக்குகளை வாங்கியிருந்தனர். ராமசாமியை விட அண்ணாதுரைக்கு சில நூறு ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்திருந்தன அவ்வளவுதான். அண்ணாதுரை 1552 வாக்குகளையும், ராமசாமி 1167 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவுக்கு இவர்களை விட கூடுதலாக அதாவது 1919 வாக்குகள் கிடைத்திருந்தன. ராமசாமிக்கு 1167 வாக்குகள் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. அவர் சுயேச்சை வேட்பாளர். அந்த ரேஞ்சுக்குத்தான் கிடைக்கும். ஆனால் கம்யூனிஸ் கட்சி வேட்பாளருக்கு ஆயிரத்து சில்லறை ஓட்டுக்கள் என்பது சோகமானது, அதிர்ச்சியானது. கிட்டத்தட்ட அண்ணாதுரைக்கு அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. கட்சியினர் யாருமே ஓட்டுப் போடவில்லையோ என்றும் சந்தேகம் வருகிறது. இவ்வளவு பெரிய கட்சியின் வேட்பாளர் பத்தாயிரம் ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் போவது என்பது விசித்திரமாக உள்ளது. டெபாசிட் பறி போவது என்பது வேறு, கேவலமான அளவில் ஓட்டுக்களை வாங்குவது என்பது வேறு. பேசாமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் டிராபிக் ராமசாமியுடன் கூட்டணி வைத்து, அவரை பொது வேட்பாளராக அறிவித்து அவருக்கு சப்போர்ட் செய்து தீவிரப் பிரசாரம் செய்திருந்தார் ராமசாமியாவது பத்தாயிரம் ஓட்டு வாங்கியிருப்பார் போல. இன்னும் சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளை விட மக்களுக்காக அதிக அளவில் போராடி பல நேரங்களில் வெற்றியும் பெற்றவர் ராமசாமிதான். வீர முழக்கம் வீர முழக்கம் என்று மட்டும் கோஷம் போட்டுக் கொண்டிருக்காமல், மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டத்தின் துணை கொண்டு விடாமல் போராடி பல நல்ல விஷயங்களைச் சாதித்தவர் ராமசாமிதான். அவரைப் பார்த்தாவது கம்யூனிஸ்டுகள் தங்களது உத்திகள், அணுகுமுறைகள், செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு மக்களிடம் மேலும் நெருங்க முயற்சிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்றால் இப்படித்தான் என்ற அந்த முத்திரை நிலையை மாற்றி மக்களோடு மக்களாக மேலும் நெருங்கி செயல்படும்போது இன்னும் ஆதரவு பலம் அதிகரிக்கும். அப்படி இல்லாவிட்டால் காலத்தோடு ஒட்டாத நிலையே ஏற்படும். பாஜக நிலைமையும் இதை விடக் கேவலம்தான். கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக ஓட்டு வாங்கியுள்ளனர் என்றாலும் கூட அவர்களாலும் ஒரு பத்தாயிரம் ஓட்டைக் கூட தேத்த முடியாமல் போனது நிச்சயம் கேவலம்தான். மொத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக ஆகிய இருவருமே ஸ்ரீரங்கத்தில் கிடைத்திருப்பது கேவலமான தோல்விதான்!

tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக