வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

நங்கையரே என்னை மன்னியுங்கள்! ‘என்னையும் ஒரு சகமனிதராக ஏற்றுக்கொள்வீர்களா?’

பள்ளிக் காலத்தில், அவர்களைக் கண்டாலே பயந்து ஓடி ஒளிந்துகொள்ளும்படியாகத்தான் என் உற்றமும் சுற்றமும் என்னை வளர்த்திருந்தது. திரைப்படங்களும் ஊடகங்களும் அவர்களை ஒரு கேலிப்பொருளாகவே சித்தரித்துவந்தன. அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைப்பது அப்போது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது (அவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்பு கிடைக்காமல், பிச்சை எடுப்பதற்கு நானும் இந்தச் சமூகமும் காரணம் என்பதை நான் அப்போது உணரவில்லை).
வடஇந்தியாவில் ஒரு வங்கி மேலாளராகச் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்துவிட்டால் நூற்றுக் கணக்கான திருநங்கைகள் அந்த வீட்டின் வாசலில் கூடி நின்று கூத்தாடுவார்கள். அவர்கள் கையால் ஆசி பெற்றால் அந்த ஆசிக்குக் கடவுள் செவிசாய்ப்பார் என்பது அங்குள்ள சமூக நம்பிக்கை.
அதே சமயம், அவர்கள் மனம் நொந்து சபித்தால் அது குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும் என்ற அச்சத்தால் அவர்கள் கேட்கும் பணம் கொடுக்கப்பட்டுவிடும். இதையெல்லாம்கூட நான் ஒரு வழிப்பறிக் கொள்ளையாகவே பார்த்தேன்.
எனது ஞானகுரு
எனது ஐம்பதாவது வயதில் விருப்ப ஓய்வுபெற்று, ஒரு தொண்டு நிறுவனத்தில், தன்னார்வத் தொண்டனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சென்னை பெண்கள் கல்லூரி ஒன்றில் சமூக சேவையியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர், தன் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக மூன்று மாதம் அந்தத் தொண்டு நிறுவனத்தில் தன்னால் இயன்ற சேவையாற்ற வந்திருந்தார்.
அந்தப் பெண் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘மூன்றாம் பாலினம்’ என்பதால், பல நாட்கள் மூன்றாம் பாலினத்தோருடன் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை முறையை முழுமையாக உணர்ந்து ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதியிருந்தார். திருநங்கைகள் பற்றிய எனது தெளிவுக்கு அந்தப் பெண்ணே எனது ‘ஞான குரு’.
அந்த ஆய்வுக் கட்டுரைப் பணிக்காக, பல இரவுகள் அவர்களுடன் அந்தப் பெண் தங்கவும் நேர்ந்திருக்கிறது என்ற செய்தி என்னை வியப்படைய வைத்தது. “இளம் பெண்ணான நீ, அவர்களுடன் தங்கும்போது அச்சமாக இல்லையா?” என்று அப்பெண்ணிடம் கேட்டேன். 90 வயது முதிய ஆடவருடன் தங்கும்போதுகூட நான் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. ஆனால், அவர்களுடன் தங்குவது ஒரு பெண்ணுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக ‘உணர்ந்ததாக’அவர் உரைத்த பதில், ஆண் இனமே தலைகுனியும்படி இருந்தது.
வழிகளை அடைக்கிறது சமூகம்
இரந்துதான் உயிர் வாழ வேண்டும் என்றால், அந்த ‘உலகியற்றியானையும்’ சபிக்கத் தயாராகிறார் திருவள்ளுவர். இவர்களில் சிலர் யுகங்களாக இரந்துதான் உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் போன்ற அனைவருக்கும் வாழ்வாதாரம் ஓர் அடிப்படை உரிமையாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இவர்களின் வாழ்வுக்கு அர்த்தமோ ஆதாரமோ ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. பிழைப்புக்கான எந்த வழியையும் சமூகம் விட்டுவைக்காத நிலையில், இவர்களில் பலர் பிச்சை எடுக்கிறார்கள்; சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனது வங்கிப் பணிக் காலத்தை இப்போது நான் திரும்பிப்பார்க்கிறேன். என்னுடய 30 ஆண்டு பணிக் காலத்தில், பல்லாயிரம் பேருக்கு வங்கி மூலமாகக் கடனுதவி அளித்திருக்கிறேன். ஆனால், அந்தப் பட்டியலில் ஒரு திருநங்கைகூட இல்லை என்பதே உண்மை.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, எந்த ஒரு திருநங்கையும் என்னிடத்தில் கை நீட்டும் ‘நிலையை’ நான் அனுமதித்ததில்லை. அதற்கு முன்பாக நானே அவர்களை நாடிச் சென்று ஒரு சிறு தொகையை அவர்களுக்கு என் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவேன். இதனை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளேன். கடந்த புத்தாண்டு தினத்தன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயிலின் கடைசிப் பெட்டியில் அமர்ந்திருந்தேன். அந்தப் பெட்டியில் என்னைத் தவிர, வேறு பயணிகள் யாரும் இல்லை.
அச்சமயம் திருநங்கை ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறினார். அத்தனை இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், அவர் நுழைவாயிலுக்கு அருகே கீழே சம்மணமிட்டு அமர்ந்தது நெஞ்சை உறுத்தியது. நான் அவரை நாடிச்சென்று ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். அன்பளிப்பை ஏற்றுக்கொண்ட அவர், இரு கரம் கூப்பி என்னை வெகு நேரம் கலங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்களில் ‘என்னையும் ஒரு சகமனிதராக ஏற்றுக்கொள்வீர்களா?’ என்பது போன்ற ஏக்கம் இழையோடியதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தோர் என்று தற்போது அழகான தமிழில் குறிப்பிடப்படும் இவர்களைக் கொச்சையான வார்த்தைகளில் கேவலமாக அழைக்கும் சமூகத்தின் ஓர் அங்கமாக நானும் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன். tamil.hindu.com
- மால் அயன் முருகன்,
சமூக ஆர்வலர்,
தொடர்புக்கு: subramanianprh@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக