வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஒபாமாவால்தான் டெல்லியில் பாஜக தோற்றது?அவா வேற என்னத்தை சொல்றது?

இப்டி இருக்குமோ? ஆங்… அப்டி இருக்குமோ?
நிலைகுலைந்திருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும் பாஜகவினரை. டெல்லி பாஜக தலைவரான சதீஷ் உபாத்யாயவின் பேட்டி ஒரு சோறு பதம். “உண்மையிலேயே இது பெரிய தோல்வி. உண்மையிலேயே நாங்கள் துளியும் எதிர்பாராத முடிவு இது. தோல்வியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நாங்கள் அனைவருமே தேர்தல் முடிவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறோம். மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்திருக்கிறோம், இதைச் சொல்லக்கூட என்னிடம் வார்த்தைகள் இல்லை.”
ஆஆக டெல்லியைக் கைப்பற்றிவிடும் என்பதை முன்னரே யூகித்துவிட்டாலும், இவ்வளவு பெரிய பின்னடைவை பாஜக எதிர்பார்க்கவில்லை. என்ன காரணம் என்று ஆராய்வதுதான் அடுத்தகட்டமாக கட்சியைத் தூக்கி நிறுத்த உதவும் என்று மோடி சொல்லிவிட்டதால், இரண்டு நாட்களாக விடுதியில் அறை போட்டு யோசிக்காத குறையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள்.
டெல்லி பாஜக தோல்விக்கு யாராவது ஒபாமாவைக் காரணமாகச் சொன்னால் எப்படியிருக்கும்? நம்புவது சிரமம்தான். ஆனால், பாஜகவினரே அப்படியெல்லாம்கூட யோசிக்கிறார்கள்.
இந்தியா வந்திருந்த ஒபாமா, தொடர்ந்து இந்தியாவின் மதச்சார்பின்மை தொடர்பாகப் பேசியது, இது தொடர்பான விவாதங்களுக்கு வழிவகுத்தது. பாஜக அரசு ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்தே இங்கொன்றும் அங்கொன்றுமாக, இந்துத்துவ நடவடிக்கைகள் பரவ ஆரம்பித்தன.
எனினும், அவை பெரும் கவனம் பெற ஆரம்பித்தது ஒபாமாவின் பேச்சுக்குப் பின்தான்.

கர்-வாப்ஸி என்ற பெயரில் பிற மதத்தினரை, இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள், இந்துப் பெண்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரம், கிறித்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் - இந்த விஷயங்கள் யாவும் டெல்லி தேர்தல் சமயத்தில் பெரும் செய்திகள் ஆயின. டெல்லி மதச் சிறுபான்மையினரைக் கணிசமாகக் கொண்ட நகரம் என்பதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடியேறியவர்களைக் கொண்ட நகரம் என்பதும் கவனிக்க வேண்டியது என்றார் ஒரு பாஜக தலைவர்.
தலைவர்களே இப்படியென்றால், தொண்டர்களின் அலப்பறையைச் சொல்ல வேண்டுமா?
“மோடியும் ஷாவும் டெல்லி வேண்டாம் என்பதை முடிவெடுத்துவிட்டார்கள். அதனால்தான் விட்டுக்கொடுத்து விட்டார்கள்” என்று ஒரே போடாகப் போட்டார் ஒரு தொண்டர். “டெல்லிக்காரர்களை ஆட்சியாளர்களால் திருப்திப்படுத்தவே முடியாது. சின்ன பிரச்சினைகளையும் ஊடகங்கள் இங்கு ஊதிப் பெருக்கிவிடும். எதற்கெடுத்தாலும் மக்கள் வீதியில் இறங்கிவிடுவார்கள். இதெல்லாம் தேவையில்லாத பிரச்சினை என்றுதான் மோடியும் ஷாவும் அர்விந்த் கேஜ்ரிவாலிடமே டெல்லியைத் தள்ளிவிட்டுவிட்டார்கள்” என்றார் அவர்.
சும்மாவே காட்டுகாட்டுன்னு காட்டுவோம்...
இந்தச் சோகத்துலயும் ஒரு ஆறுதல் என்னன்னா…
கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு தேடிக் கொண்டிருந்தார்கள் செய்தியாளர்கள். வேறு யாரை? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும்தான்.
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதாவது அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து ஒரு அறிக்கையை வாசித்தார்கள். இப்போது மூச்சுப் பேச்சையே காணோம். அஜய் மக்கானைப் பலிகடாவாக்கி விட்டு, இருவரும் மாயமாகிவிட்டார்கள் என்று கட்சிக் குள்ளேயே முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்து விட்டன. பாவம் மக்கான். “இந்தத் தேர்தலில் கட்சியின் முகமாக நான்தான் இருந்தேன்(!) தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன்” என்று பேட்டி கொடுத்த அவரைத் தேற்றக்கூட ஆள் இல்லை. கட்சி அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தாலும், ஒருகாலத்தில் கட்சியின் கோட்டையாக இருந்த டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த ‘0’ தோல்வியைக் காங்கிரஸாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு ஆர்வத்தில் கட்சி அலுவலகம் வந்த தொண்டர்கள் சிலரும் துக்கம் தொண்டை அடைக்க நின்றனர். அப்புறம் என்ன நினைத்தார்களோ, ‘‘பிரியங்கா லாவோ, பார்ட்டி பட்ச்சாவோ!” (பிரியங் காவைக் கொண்டுவா, கட்சியைக் காப்பாற்று) என்று கோஷம் போட்டார்கள். அப்புறம் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
டெல்லியில் குளிர்காலம் முடியத் தொடங்கும் பருவநிலையில், மதியம் நல்ல வெயில் அடிக்கும். எனினும், வெயிலைப் பொருட்படுத்தாமல், ஆஆக தலைமை அலுவலகத்தில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீடுகளில் பணிப்பெண்களாக வேலைபார்ப்பவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் ஆடிக்கொண்டிருந்ததைப் பலரும் வேடிக்கை பார்த்திருந்தனர். அவர்களில் சில காங்கிரஸ் தொண்டர்களும் அடக்கம். ஒரு காங்கிரஸ் தொண்டர் லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்: “காங்கிரஸ் ஜெயிக்காதது வருத்தம்தான். ஒரு ஆறுதல் என்னன்னா, பாஜகவும் தோற்க ஆரம்பிச் சுட்டதுதான். பிரியங்கா வந்தா சரியாயிடும்!”
எப்பவும் இப்டித்தானா, இப்டித்தான் எப்பவுமேவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக