வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி! இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்


சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கல்லூரியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் 2வது நாளாக நேற்று மாலை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கல்லூரியை 7 நாட்கள் மூடுவதாக கல்லூரி இயக்குநர் அறிவித்துள்ளார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.சென்னை உயர் நீதிமன்றம் அருகே 124 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலிருந்து ஏராளமான சட்ட நிபுணர்களும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளும் உருவாகியுள்ளனர். தற்போது, இந்த கல்லூரிக்கு அருகே மெட்ரோ ரயில் திட்டம் நடந்து வருகிறது. சுரங்க ரயில் நிலையமும் கல்லூரி அருகே அமைக்கப்பட்டு வருகின்றன.


இந்த பணிகளில் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் அருகில் உள்ள சட்டக் கல்லூரி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மிகப்பழமையான இந்த சட்டக் கல்லூரி கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் தற்காலிகமாக உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை சட்டக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியது.இந்த தகவல் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வெகுண்டெழுந்தனர். நேற்று காலை குறளகம் முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், காலை 10 மணி முதல் என்.எஸ்.சி போஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவருவதில் தடங்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் மதியம் 12 மணிக்கு பாரிமுனையில் கூடி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சுமார் 300 மாணவர்கள் ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதைக்கு சென்று அரசுக்கு எதிராகவும், கல்லூரியை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போலீ சார் அங்கு தடுப்புகளை அமைத்து மாணவர்கள் செல்ல முடியாமல் பாதுகாப்பு பணிகளை செய்தனர். சுமார் 500 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே ரிசர்வ் வங்கி அருகே முகாமிட்டிருந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதில் சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களைத் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து, அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களை எச்சரித்தனர்.

மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. பலர் படுகாயமடைந்தனர். அந்த மாணவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.தடியடியில் கலைந்து சென்ற மாணவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றனர். அங்கு இரவு 11 மணிவரை கோஷம் எழுப்பியபடி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அவர்களுடன் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சிலரும் சேர்ந்துகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இதனால் நேற்று இரவு முழுவதும் உயர் நீதிமன்ற வளாகம் பரபரப்பில் இருந்தது.

இன்று காலை சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்டக் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை விடப்போவதில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒட்டி சட்டக் கல்லூரி 7 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.  மாணவ, மாணவிகளின் விடுதியும் மூடப்படுகிறது என சட்டக் கல்வி இயக்குநர் இன்று காலை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சட்டக் கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

இதில், கோபமடைந்த மாணவர்கள் எங்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது. எங்கள் முடிவிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.அதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் தினகரன், துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாரிமுனை பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக