ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பன்றி காய்ச்சலுக்கு 700 பேர் பலி : சபாநாயகர், எம்எல்ஏ பாதிப்பு: காஷ்மீரில் ஐபிஎஸ் அதிகாரி சாவு -

புனே: நாடுமுழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் 700 பேர் வரை பலியாகி உள்ளனர். குஜராத்தில் சபாநாயகர், மகாராஷ்டிராவில் பெண் எம்எல்ஏ  ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிர் இழந்தார்.நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி  வருகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதத்தில் பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு  காரணமாக 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 11,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் பரவி வரும் பன்றி  காய்ச்சல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஐபிஎஸ் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி எடுத்து வரும் அதிகாரிகள் 6 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஜம்மு கோட்ட காவல் தலைமையகத்தில் எஸ்பியாக பணியாற்றிய சுனில் குப்தா ஐபிஎஸ் பலியானார். காஷ்மீரில்  70க்கும்  அதிகமானோருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டுள்ளதாக டெல்லி அமைச்சர் சத்யேந்திரா  ஜெயின் தெரிவித்தார். பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமிப்ளு மாத்திரைகள் விற்க டெல்லியில் 40  பார்மசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான பாஜ, சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இதில் புனேயில் உள்ள கோத்ரூட் தொகுதியில்  சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜவைச் சேர்ந்த மேதா குல்கர்னி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேதா  குல்கர்னியின் குடும்பத்தினர் அவரை புனேயில் உள்ள தீனாநாத் மங்கேஸ்வர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேதா குல்கர்னி பன்றி  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல் குஜராத்தில் சட்டபேரவை தலைவர் கண்பத் வாஸ்வாக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நலக்  குறைவால் பாதிக்கப்பட்ட கண்பத் வாஸ்வா சூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கண்பத்  வாஸ்வாவை பன்றி காய்ச்சல் பாதித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது நாடு முழுவதும் பரவி  வரும் பன்றி காய்ச்சல் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு மருத்துவமனைகள் கூடுதல்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. - See tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக