சனி, 10 ஜனவரி, 2015

Charli Hebdo பத்திரிகை தாக்குதல்: தேடப்பட்டு வந்த இரு சகோதரர்கள் சுட்டுக் கொலை !

பிரான்ஸின் டாமார்டின்-ஆங்-கொவேல் நகரில் இரு சகோதரர்கள் பதுங்கியிருந்த அச்சுக்கூடத்தை சுற்றிவளைக்கும் போலீஸ் ஹெலிகாப்டர். பிரான்ஸில் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரு சகோதரர்களும் போலீஸாரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கேலிச் சித்திரங்கள், கட்டுரைகளை வெளியிடும் பிரபல வார இதழான "சார்லி ஹெப்டோ' அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் சயீத் குவாஷி, ஷெரீஃப் குவாஷி ஆகிய இரு சகோதரர்கள் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டு வீசும் சாதனங்களுடன் புதன்கிழமை புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டீபன் சார்போனியர் உள்ளிட்ட 4 கேலிச் சித்திர ஓவியர்கள், இரு போலீஸார் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலை நடத்திய குவாஷி சகோதரர்கள், பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

தப்பியோடிய இருவரும் பாரிஸின் வடகிழக்கு பகுதியில் உள்ள டாமார்டின்-ஆங்-கொவேல் நகரில் ஒரு அச்சுக் கூடத்தில் பதுங்கியிருந்தனர்.
அவர்களின் இருப்பிடத்தை வெள்ளிக்கிழமை இரவு கண்டறிந்த போலீஸார், அந்தக் கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அங்கு பதுங்கியிருந்த இரண்டு சகோதரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பத்திரிகை அலுவலகத் தாக்குதலுக்கு மறுநாளான வியாழக்கிழமை, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் மற்றொரு மர்ம நபர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றார். இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவர் பலியானர். மற்றொருவர், குண்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
4 பேர் பலி: இதற்கிடையே, பெண் காவலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர், பாரிஸ் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள யூத பல்பொருள் அங்காடி ஒன்றில் புகுந்து தாக்குதல் நிகழ்த்தி ஐந்து பிணைக் கைதிகளை சிறைபிடித்தார். இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை போலீஸ் அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, புதன்கிழமை நிகழத்தப்பட்ட பத்திரிகை அலுவலகத் தாக்குதலுக்கும், போலீஸார் மீது வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த மூரத் ஹமீது (18) என்ற நபர் சார்லிவில்-மேஸீரஸ் என்னும் ஊரிலுள்ள காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக