செவ்வாய், 13 ஜனவரி, 2015

லாபத்துக்காக நம்ம கேரியர்ல கை வைக்கிறாங்க : கிருத்திகா

நான் கிருத்திகா :டி.சி.எஸ்லதான் வேலை பார்க்கிறேன். அதாவது பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு டிசம்பர் 22-ம் தேதி காலையில ஒரு மின்னஞ்சல் வந்தது. உங்க திறமை குறைபாடு காரணமாக உங்களை இந்த புராஜக்டிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லியிருந்தாங்க. ஆர்.எம்.ஜி (மனித வள நிர்வாகப் பிரிவு)-யுடன் தொடர்பு கொண்டு அடுத்த புராஜக்டை தேடிக் கொள்ளும்படி சொல்லியிருந்தாங்க.
பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்நான்தான் எங்க புராஜக்டோட லீட் (குழுவில் மூத்தவர்), 10 வருச எக்ஸ்பீரியன்சுக்குப் பிறகும் தினமும் நான் கோட் (நிரல்) எழுதுகிறேன், டெக்னிகல் (தொழில்நுட்ப) வேலை செய்றேன். எங்க புராஜக்ட்ல மிடில்வேர் (இடையீட்டு நிரல்) வேலையை நான் மட்டும்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அந்த புராஜக்ட்டோட லீடும் மூத்த டெவலப்பரும் நான்தான்.
டிசம்பர் 15-ம் தேதி எங்க புராஜக்டுக்கு இன்னொருத்தர டிரான்ஸ்பர் செஞ்சாங்க. “நமக்கு யூ.ஐ-ல (பயனர் இடைமுகம்) வேலை செய்றவங்கதான வேணும், இன்னொரு மிடில்வேர் ரிசோர்ஸ் எதுக்கு”ன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம புதுசா வந்தவருக்கு என்னோட வேலை எல்லாம் கத்துக் கொடுக்கும்படி சொல்லியிருந்தாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன்.
எங்க அமெரிக்க கிளையன்ட் (வாடிக்கையாளர்) கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பார்த்தா என்னை புராஜக்ட்லருந்து விடுவிக்கிறதா ஒரு மின்னஞ்சல். என்னோட பழைய வான் (பணிக்கான அடையாள எண்) வைச்சி லாக்-இன் பண்ண முடியல. பெஞ்ச் வான் பயன்படுத்தி லாக்-இன் செஞ்சேன்.

அதுக்கப்புறம் 1-ம் தேதி என்னோட மேனேஜரா எச்.ஆர் (மனித வளத்துறை) ஒருத்தரோட பேரு போட்டாங்க. அதுக்கு அடுத்த நாளு எங்க குரூப் ஹெட் (குழுத் தலைவர்) பேருக்கு மாத்தினாங்க. என்ன நடக்குதுன்னு எனக்கு எந்த தகவலும் இல்லை. நான் எப்படி வேலை செய்யப் போறேன்னு கம்ப்யூட்டரில் நடக்கும் மாறுதல்களை வச்சி தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. ஏதோ செஸ் போர்டுல சிப்பாயை நகர்த்தற மாதிரி என்ன வச்சி சதுரங்கம் ஆடிக்கிட்டிருந்தாங்க.
இப்போ என்னோட நிலைமை என்னன்னு எனக்கே தெரியல. நான் எந்த ஆர்.எம்.ஜியை தொடர்பு கொள்ளணும்னு கூட தெரியல.
அப்படி தெரிஞ்சாலும் புது புராஜக்ட் அசைன் (சேர்வதற்கு) ஆக ஆர்.எம்.ஜி பக்கம் நான் போகப் போறதேயில்ல. அவங்க மனுசங்கள அவ்வளவு அவமானப்படுத்துவாங்க. சாதாரண நேரத்தில புராஜக்டுக்கு போனாலே அங்கங்க அலைக்கழிப்பாங்க. எனக்கு டி.சி.எஸ் இனிமே வேண்டாம். என்னோட திறமைக்கு எங்க வேணும்னாலும் வேலை கிடைக்கும். இதே புராஜக்ட்ல சேர்த்துக்கிறேன்னு சொன்னாலும், எனக்கு டி.சி.எஸ் வேணாம்.
நான் மூணு வருசம் பேண்ட் சி வாங்கினதால என்ன எடுத்திட்டதா என்னோட மேனேஜர் சொல்லியிருக்காரு. டி.சி.எஸ்ல அப்ரைசல்ங்கறதுக்கு அர்த்தமே கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும். நல்லா வேலை செய்றவங்களுக்குத்தான் நல்ல அப்ரைசல்னு கிடையாது. யாரு மேனேஜருக்கு சோப்பு போட்டாங்க, யாரு மேனேஜர்கிட்ட நல்ல எண்ணத்தை உருவாக்கியிருக்காங்களோ அதில இருந்துதான் ரேட்டிங் கிடைக்கும். அது ஒரு பக்கம் இருந்தாலும் கம்பெனியோட வரையறை படியே பேண்ட் சி-ன்னா எதிர்பார்ப்புகள நிறைவேற்றியிருக்கிறோம் என்பதுதான் அர்த்தம்.
இப்போ என்னை புராஜக்ட்ல இருந்து நீக்கினதையே எடுத்துக்கோங்க. எங்க குரூப்ல இன்னொரு புராஜக்ட்ல இருந்தவரோட புராஜக்ட் நவம்பர் கடைசி வாரத்தில முடிஞ்சி அவரு விடுபட்டிருந்தாரு. அவர்கிட்ட இருந்து கம்பெனி லேப்டாப் வாங்கிக்கும்படி மேனேஜர் சொல்லியிருந்தாரு. கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சு வரதுக்கு முன்னாடி அவரை இந்த புராஜக்டுக்கு அசைன் பண்ணிட்டு என்ன கழற்றி விட்டிருக்காங்க.
பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்இப்படி புராஜக்ட்ல இருந்து டி-அலகேட் (நீக்கப்படுதல்) ஆன பிறகு 2-3 வாரம் கழிச்சி எச்.ஆர் கூப்பிட்டு வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்றாங்க. என்னோட ஃபிரெண்ட்ஸ் அவங்க ஆபிஸ்ல 30 பேர் வரைக்கும் இப்படி அனுப்பிட்டாங்கன்னு சொல்றாங்க.
எச்.ஆர் மேனேஜர் அஜய் முகர்ஜி லே ஆஃப் எல்லாம் இல்லன்னு சொல்லியிருக்காருன்னு போர்டுல பார்த்தேன். ஒரு வேளை லேஆஃப்பை கை-விட்டுட்டாங்களோ என்னவோ? ஆனாலும், இவங்க என்னை நடத்தினது ரொம்பவும் அவமானமா இருக்கிறது. நமக்குன்னு ஒரு சுயகௌரவம் இருக்கில்லையா. இதுக்கு மேலையும் நாம இங்க வேலை பார்க்கணுமான்னு தோணுது.
என்னோட பெர்ஃபார்மன்ஸ் சரியில்லன்னு எப்படி சொல்றாங்கன்னு கேட்கறேன். நான் என்ன வேலை செஞ்சேன்னு எனக்கு தெரியும். என்னோட மேனேஜருக்கும் தெரியும். இதுக்காக எத்தனை பாராட்டு கடிதம் அனுப்பியிருக்காங்க, “ஜெம்ஸ்” கொடுத்திருக்காங்க. இன்னைக்கு இப்படி திடீர்னு சொல்றத நான் ஏத்துக்கப் போறதில்ல. என்ன திறமை குறைவு, என்ன செயல்பாட்டு பற்றாக்குறைன்னு அவங்க எனக்கு விளக்கம் சொல்லணும்.
என்னே மாதிரியே 25,000 பேரை இப்படி நடத்தி, மன உளைச்சலுக்கும் டென்சனுக்கும் ஆளாக்கியிருக்காங்களே. இப்போ இந்த லிஸ்ட்ல (பட்டியல்) வராதவங்களுக்குக் கூட எதிர்காலத்தில என்ன உத்தரவாதம்? 10 நாளா எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது. கிளையன்ட் பில்லிங் (வாடிக்கையாளர் வருமானம்) குறைஞ்சத சரிக்கட்ட, நம்ம கேரியர் (பணி வாழ்க்கை)-ல கை வைக்கிறாங்க. அசிஸ்டன்ட் கன்சல்டன்டுக்கும் அதுக்கும் மேலயும் உள்ளவங்களதான் இப்போ தூக்கி எறியிறாங்க. திறமை, பெர்ஃபார்மன்ஸ்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
_______________________
இதை எதிர்த்து தனியா கோர்ட்டுக்கு போனால், கிருத்திகா சில லட்சத்துக்கு வக்கீல் அமர்த்துக் கொள்ளலாம். ஆனா, டாடாவை தனியாக எதிர் கொள்ள முடியாது. தொழிலாளர் துறையை அணுகினாலும், அந்தத் துறை அதிகாரிகள் யாருக்கு சார்பாக செயல்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இது தொடர்பாக ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். டி.சி.எஸ் சி..ஓ சந்திரசேகரனுடன் அவர்களது ஜப்பான் அலுவலகத்தை திறந்து வைத்தவரே மோடிதான். மாருதி மானேசர் தொழிலாளர் பிரச்சனைக்குப் பிறகு ஜப்பானுக்கே போய் சுசுகியை குஜராத்துக்கு வந்தால் தொழிலாளர் பிரச்சனையே இருக்காது என்று அழைத்தவர் அவர். இப்போது, பெயரளவில் இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களையும் கார்ப்பரேட்டுகளின் கட்டளைப்படி அவர்களுக்கு சாதகமாக தொழிலாளர்களுக்கு எதிரானவையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மேலும், எல்லா கட்சிகளுக்கும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதே டாடா முதலான கார்ப்பரேட்டுகள்தான். அந்த கட்சிகள் ஊழியர் சார்பில் எதுவும் செய்து விட முடியுமா?
கோர்ட்டோ, பிரதமரோ, அதிகாரிகளோ யாராயிருந்தாலும், மனு போடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. அரசியல் ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
Join us
New Democratic Labour Front
I T Employees Wing
fb/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
combatlayoff@gmail.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக