செவ்வாய், 13 ஜனவரி, 2015

சென்னை போலீசின் மாமூல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்த மெக்கானிக் !

உழைத்து வாழும் நாம், மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறைக்கு பணிவதா? டந்த 03/01/2015 அன்று மதியம் கீழ்ப்பாக்கம் G3 காவல்நிலைய வாசலில் 30 பேருக்கும் மேலாக மக்கள் திரண்டு, சலசலப்புடன் நின்று கொண்டிருந்தனர். கோபத்துடன் இருந்த அந்த மக்கள் சாலையை மறித்துவிடுவார்கள் என்ற பயத்தோடு 100 போலீசார் சுற்றி அரண் அமைத்து இருந்தனர்.
சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்விசாரித்த பொழுது, 24 வயது, மெக்கானிக் ராஜ் என்ற சுதர்சனை காவல்துறை மாமூல் கூடுதலாக கேட்டு மிரட்டியதாலும், பொய் கேசுகள் தொடர்ச்சியாக போட்டும், அடி, உதை என சித்ரவதை செய்ததால் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார்கள்.
சுதர்சனின் தாயார் கோவிந்தம்மாள் கோபத்துடனும், அழுகையுடனும்
“நானும் என் மகன் சுதர்சனும் லேடர்ஸ் கேட் (Laders Gate), பிளவர்ஸ் சாலை, புரசைவாக்கம் பக்கத்தில் குடியிருக்கோம். நாலுவருசமா என் வீட்டுக்காரர் சுரேஷ், திவான் ராமா ரோட்டுல பைக் மெக்கானிக் கடை வைச்சிருந்தாரு!
எங்க பொழப்பே அத வைச்சு தான் நடந்துச்சு! 3 வருடத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரரு செத்துட்டாரு!
அவருக்கு பின்னால், என் மகனுக்கு வேலை தெரிஞ்சதால, அவன் செய்துவந்தான். G3 போலீசு ஸ்டேசனிலிருந்து போலீஸ்காரனுங்க ஓசியில சர்வீஸ் பண்ணிட்டு போவாங்க! அப்பப்ப மாமூல் காசும் கேட்டு மிரட்டி வாங்குவானுங்க! இதுல எஸ்.ஐ. எழிலரசன் என்றவன் ரெம்ப ஓவரா பண்ணுவான்! இவன் 2000, 3000 ரூபாய் பணம் வாங்குறது மட்டுமில்லாம, அசிங்கம் அசிங்கமா திட்டுவான், எதிர்த்து கேட்டா ரோட்டுலேயே அடிப்பான்.
இவனுக்கு காசும் கொடுத்துட்டு, கேசும் வேற கொடுக்கனும்! நீயே சொல்லு! இவனுங்க வண்டியை மட்டுமில்லாமல், இவனுங்க சொந்தக்காரனுங்க வண்டியெல்லாம் ரிப்பேர் பண்ணனுன்பாங்க! சரி போனா போகுதுன்னு பண்ணாக்கூட ஏதாவது பொருள் மாத்துனாக்கூட அதுக்கு காசு தரமாட்டான், எங்க காச போட்டாப்பா பொருள் மாத்தமுடியும்! இதுல ஏதாவது ஒன்ன எதிர்த்து கேட்டா குண்டர் சட்டத்தில போடுவேன்னு மிரட்டுவான்.
போனமாசம் 24ந் தேதி வண்டிய ரிப்பேர் செய்யனும்னு வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போனான். என்மவன் ராத்திரி முழுக்க வீடு வந்து சேரல! இன்னான்னு ஸ்டேசன்ல போய் பார்த்த என் மவனை ஜட்டியோட நிக்க வைச்சிருந்தானுங்க! ராத்திரி முழுக்க மிருகத்தனமா அடிச்சிருக்கானுங்க! பிறகு காசைக் கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்!
அதே மாதிரி நேத்து (02/01/2015) சாய்ந்தரம் 5 மணிக்கு அதே எஸ்.ஐ. எழிலரசன் வீட்டுக்கு வந்து வண்டிய ரிப்பேர் பண்ணனும்னு கூட்டிட்டு போனான். ரெம்ப நேரம் வரல்லன்னு ஸ்டேசனுக்கு போய்ப்பார்த்தா, முன்ன அடிச்ச மாதிரியே என் மவன அடிச்சுன்னு இருந்தாங்க! என் மவன் முன்னாலேயே எழிலரசன் என்னை அசிங்கம் அசிங்கமா திட்டினான்! என் மவன் அவமானத்தில குறுகிப்போயிட்டான். ! பிறகு அவனுங்க கிட்ட பேசி, என் மவன வீட்டுக்கு கூட்டியாந்தேன்.
என்மவன் என்கிட்ட “இந்த போலீசுகாரங்க இதே போல அடிக்கடி என்ன கொடுமைப்படுத்துக்கின்னே இருக்கானுங்க! யாரும் இத கேட்கமாட்டேங்கிறீங்க! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலைன்னு கோபமாகவும், விரக்தியாகவும் பேசினான். அப்புறம் வீட்டுல ஆள் இல்லாத சமயத்தில தூக்கு போட்டுக்குணாம்பா! இப்படி அநியாயமா என் பையனை கொன்னுப்புட்டானுங்கப்பா! என்னை அனாதையா நிக்கிறேன்! இவங்களை சும்மா விடக்கூடாது!”
என சொல்லிவிட்டு, சத்தமாய் அழத்துவங்கினார்.
எஸ்.ஐ. எழிலரசன் மீது புகார் கொடுக்கப்பட்டதா? என கேட்ட பொழுது, புகாரையே வாங்க மறுத்திருக்கிறார்கள். கமிசனர் அலுவலக முற்றுகைக்கு பிறகு தான் புகாரையே வாங்கியிருக்கிறார்கள்.
சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்
மனித உரிமை பாதுகாப்பு மைய சுவரொட்டி
அன்றிரவே எஸ்.ஐ. எழிலரசனை அம்பலப்படுத்தியும், அவன்மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சுவரொட்டி தயாரித்து பரவலாக ஒட்டப்பட்டது. அன்றிரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் சுவரொட்டி முழக்கங்களை உறவினர்களின் ஒருவரே சத்தமாக படித்துக் காண்பித்தார்.
அவர்களின் கோபத்தை சுவரொட்டிகளின் வார்த்தைகளில் பார்த்ததும், “எங்ககிட்ட கொஞ்சம் கொடுங்க! நாங்க ஒட்டுகிறோம்!” என முன்வந்து வாங்கி ஒட்டவும் செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் “நாளைக்கு பாடியை எடுப்பதற்குள், நம்ம ஏதாவது செய்யணும் சார். நீங்களும் கலந்துக்கங்க!” என வலியுறுத்தினார்கள்.
sudharsan-suicide-police-si-responsible-1இவ்விசயம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கிளை செயலர் மில்ட்டன் காவல்துறை ஆய்வாளரிடம் பேசும் பொழுது, “எழிலரசன் அப்படிப்பட்டவர் இல்லை! இருந்தாலும் விசாரிச்சுத்தான் நடவடிக்கை எடுக்கமுடியும்” என எஸ்.ஐ. எழிலரசனைப் பாதுகாத்து பேசினார்.
sudharsan-suicide-police-si-responsible-3துணை ஆணையரிடம் பேசிய பொழுது, “இப்போதைக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கோம். மத்ததெல்லாம் பின்பு தான்” என தெரிவித்தார்.
அடுத்த நாள் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் சுதர்சனின் உறவினர்கள், சொந்தங்கள், நண்பர்களை ஒன்று திரட்டி, காவல்துறை எஸ்.ஐ. எழிலரசனை பாதுகாக்கிறது என விளக்கி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது!
நீதி வேண்டும்! நீதி வேண்டும்!!
சுதர்சன் சாவுக்கு நீதி வேண்டும்!
மெக்கானிக் தொழிலாளி சுதர்சனை
மாமூல் கேட்டு சித்ரவதை செய்து
தற்கொலைக்கு தூண்டிய உதவிஆய்வாளர் எழிலரசனை
கைதுசெய்! சிறையிலடை!
மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும்
அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும்
போலீசின் கொட்டத்தை அடக்குவோம்!
மக்கள் நாம் அடக்குவோம்!
சுதர்சன் தற்கொலை - காரணமான போலீஸ் உதவி ஆய்வாளர்சுதர்சன் சாவு கற்றுத்தருவது
இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும்
அடக்குமுறைக்கு எதிராக
ஒன்றிணைவதே! போராடுவதே!
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும்
காவல்துறையே! கிரிமினல் துறையே!
துரோகம் செய்யாதே! துரோகம் செய்யாதே!!
மக்களுக்கு துரோகம் செய்யாதே!
போலீசுக்கு வேண்டப்பட்டவர்கள்
பொய் புகாரை கொடுத்தால் கூட
உடனே எப்.ஐ. ஆர் பதியும் போலீசு
புகார் கொடுத்து ஒருநாளாகியும்
எப்.ஐ.ஆர் இல்லை! நடவடிக்கை இல்லை!
எடுக்கமாட்டோம்! எடுக்கமாட்டோம்!
சுதர்சன் சாவுக்கு காரணமான
உதவி ஆய்வாளர் எழிலரசன் மீது
நடவடிக்கை எடுக்கும் வரை எடுக்கமாட்டோம்!
சுதர்சன் உடலை எடுக்கமாட்டோம்!
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி
மக்களுக்கு எதிராய் வேலை செய்யும்
துறைகள் எதற்கு? ஒழித்துக்கட்டு!
சஸ்பென்ஸ் செய்! சஸ்பென்ஸ் செய்!!
கிரிமினல் போலீசு மாமூல் எழிலரசனை
சஸ்பென்ஸ் செய்!
பதிவு செய்! பதிவு செய்!!
கிரிமினல் வழக்கினை பதிவு செய்!
பாதுகாக்காதே! பாதுகாக்காதே!!
உ.ஆய்வாளர் எழிலரசனை
காவல்துறையே பாதுகாக்காதே!
மக்கள் பிரதான சாலையான அழகப்பா சாலையில் உட்கார்ந்து கோபத்துடனும் முழக்கமிட்டனர். பின்பு ஆய்வாளர் மக்களிடையே நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்தியதில் “என்னை நம்புங்க! நான் கண்டிப்பா உங்களுக்கு செய்வேன். எழிலரசனை கண்டிப்பாக தண்டனைக்குள்ளாக்குவேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என பேசியதில், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டதால், ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது!
sudharsan-suicide-police-si-responsible-4உழைத்து வாழும் மக்களாகிய நாம், மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறையை கண்டு அஞ்சக்கூடாது! நாம் அமைப்பாக ஒன்றிணைந்து தொடர்ந்து போராடும் பொழுது தான், சுதர்சனின் அநியாய சாவுக்கு நீதி கிடைக்கும்!.
தகவல் :
வழக்குரைஞர் மில்ட்டன்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
தொடர்புக்கு : 9094666320

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக